பரோட்டாக் கடை
திருநெல்வேலியில் என் 20 வயதில் பரோட்டா எனக்குத் தீவிரமாக அறிமுகமாகியது. அதாவது வாரம் ஒரு தடவை பரோட்டா சாப்பிடவில்லை என்றால் கை கால் நடுங்கும் அளவுக்கு. என் நண்பர்களுக்கும் இதேதான். ஞாயிற்றுக் கிழமை இரவானால் அசைவ பரோட்டா சாப்பிடுவது அவர்கள் வழக்கம். அந்த வட்டத்தில் மாட்டிக்கொண்ட ஒரே சைவன் நான்.
திருநெல்வேலியில் சால்னாவுடன் சேர்த்து, தக்காளி அரைத்து ஊற்றிய இன்னொரு வகை குருமாவும் (கிரேப்ஸ்) தருவார்கள். நண்பர்களுடன் சாப்பிடும்போது நான் இதை மட்டும் சாப்பிடுவது வழக்கம். ஏனென்றால் இதில் அசைவம் சேர்க்கப்படாது என்றொரு ’நம்பிக்கை’. (சைவமாக இதுவும் தவறுதான். ஆனால் அன்று அப்படி!)
சில சமயம் நண்பர்களுடன் நான் சைவக் கடைகளுக்குப் போவதுண்டு. அங்கே பரோட்டா குருமா நன்றாக இருந்தாலும் அசைவ நண்பர்களுக்கு ஏனோ செட்டாகாது. ஆனாலும் எனக்காக வருவார்கள்.
ஒருநாள் இனி அசைவக் கடைகளில் சாப்பிடுவதில்லை என முடிவெடுத்தேன்.
எனக்கு ஒரு வழக்கம் என்னவென்றால், பரோட்டாவுக்குக் கட்டிச் சட்னி வைத்துச் சாப்பிடுவது. அசைவக் கடையில் இது கிடைக்காது. சைவக் கடைகளில் கிடைக்கும். எந்தச் சைவக் கடைக்குப் போனாலும் இப்படிச் சாப்பிடுவேன். ரகுவிலாஸில் ஒருவிதப் புதினாச் சட்னி தருவார்கள். ஆனால் சைவக் கடைகளில் பரோட்டா விலை அதிகம். அசைவக் கடைகளில் பரோட்டா 1 ரூபாய் என்றால், இங்கே ஒரு பரோட்டா 10 ரூ. ஆனால் பரோட்டா பெரியதாக இருக்கும்.
அப்போதுதான் டவுணில் முத்து பரோட்டாக் கடை ஒன்று உதயமானது. அசைவ ஸ்டைலில் ஒரு சைவக் கடை. சைவ பரோட்டா 2 ரூபாய் மட்டுமே. உடனே அங்கே போக ஆரம்பித்தோம். கடை ஆரம்பித்த புதிது என்பதால் பட்டாணி எல்லாம் போட்டு பிரமாதமாக இருக்கும் குருமா.

அந்தக் கடை சிறிய கடை. 10க்குப் 10 கடை. உள்ளேயே மரப்படி அமைத்து மாடியில் உணவு தயாரிக்கும் இடம். அங்கே இருந்து ஒவ்வொரு தடவையும் ஓனர் கீழே வந்து பரிமாறுவார். இரண்டே பேர். பரிமாற, பில் செய்ய ஓனர். மேலே மாஸ்டர்.
நான் கட்டிச் சட்னி கேட்பேன். பரோட்டாவுக்குத் தருவதில்லை என்றாலும், எங்களைத் தவிர வேறு யாரும் அந்தப் பரோட்டாக் கடையை எட்டிப் பார்ப்பதில்லை என்பதால், எங்களையும் விட்டுவிடக் கூடாது என்பதற்காக, ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சூண்டு கட்டிச் சட்னி தருவார் ஓனர். ஆனால் நாங்கள் விடாமல் கட்டிச் சட்னி கேட்டுக்கொண்டே இருப்போம். ஒவ்வொரு முறையும் மாடிப்படி ஏறி அங்கிருந்து கொஞ்சூண்டு கட்டிச் சட்னி கொண்டு வருவார். எங்களுக்கே சங்கடமாக இருக்கும். ஆனாலும் கட்டிச் சட்னி, குருமா என்று கேட்டுக்கொண்டே இருப்போம். அவரும் சின்ன சின்ன கிண்ணங்களில் தருவார். சரியான கஞ்சன் அவர்!
சாப்பிட்டுவிட்டு வெளியே வந்ததும் நாங்களே பேசிச் சிரித்துக்கொள்வோம். என் நண்பர்கள் என்னை, ‘இவரு பெரிய இவரு, கட்டிச் சட்னி இல்லாம சாப்பிட மாட்டாரு’ என்றெல்லாம் ஓட்டுவார்கள்.
ஒருநாள் திடீரென அந்த முத்து பரோட்டாக் கடை மூடப்பட்டது. ஆறு மாதம் கூட அங்கே அந்தக் கடை செயல்பட்டிருக்கவில்லை. நாங்கள் சாப்பிடப் போனபோது கடை அங்கே இல்லாததைப் பார்த்து அத்தனை நண்பர்களும், ‘கட்டிச் சட்னி கேட்டுக் கடையையே மூடிட்டியே மக்கா’ என்று சொல்ல ஆரம்பித்து, அதுவே நிலைத்தும் போனது.
பெரிய கடைக்குப் போய் பரோட்டா சாப்பிடும்போது நான் கட்டிச் சட்னி கேட்டால் உடனே நண்பர்கள், ‘ஏல! இந்தக் கடையாவது இருக்கட்டும், ப்ளீஸ்” என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
பின்னொரு சமயம் தூத்துக்குடியில் பேருந்து நிலையத்தில் முத்து பரோட்டாக் கடை ஓனரைப் பார்த்தேன். தலையில் கர்ச்சீஃப் போட்டுக்கொண்டு கையில் ஒரு பையுடன் பரபரப்பாக எங்கோ போய்க்கொண்டிருந்தார். ‘சொல்லாம கொள்ளாம மூடிட்டேளே, தூத்துக்குடியில் கடை போட்டுருக்கேளா’ என்று கேட்க நினைப்பதற்குள் ஆள் மாயமாக மறைந்துவிட்டார்.
நேற்று அரட்டை ஆப் பற்றிச் சொன்னதும், நண்பர்கள் அரட்டையில்(லும்!) ஒரு க்ரூப் ஆரம்பித்துவிட்டார்கள். அதன் பெயர், ‘பரோட்டா கெட்டிச் சட்னி’.
நண்பர்களின் மனதை ரொம்பவே காயப்படுத்தி இருக்கிறேன் போல. ஆனாலும் இன்றுவரை பரோட்டா குருமாவுக்குக் கட்டிச் சட்னி எனக்கு வேண்டும்.