அபிமானியின் தீர்ப்புகளின் காலம் நாவல் பாதி வாசித்தேன். நான் வாசிக்கும் இவரது முதல் நாவல் இது.

இந்த நாவல் என் ரசனைக்கானதாகத் தெரியவில்லை என்பதால் நிறுத்தி விட்டேன். பழைய கால எழுத்து, க்ளிஷே விவரணைகள், பிரசாரம் மட்டுமே குறிக்கோள், எதையுமே தேவைக்கதிகமாகச் சொல்லி உணர்ச்சி மேலீட்டைச் செயற்கையாக உருவாக்குவது – இவையே இந்த நாவல் முழுக்க. இது 2019ல் வந்த நாவல் போல. உறுதியாகத் தெரியவில்லை.
நாவலில் தலித்தியப் பிரசாரம் என்பதெல்லாம் அவசியம்தான். ஆனால் அதைத் தாண்டி நாவலுக்கென்று ஒரு குணமும் அதை நோக்கிச் செல்லும் பலவிதமான கோணங்களும் தவறே என்றாலும் எதிர்த்தரப்பின் குரலும் இருப்பது, அந்த நாவல் தட்டையாவதில் இருந்து காப்பாற்றும். இந்த நாவல் இவற்றையெல்லாம் பாதி வரை தவற விட்டு இருக்கிறது. மீதி நாவலில் இவையெல்லாம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.