Arattai app

என் நண்பர்கள் என்னை அரட்டை ஆப்பில் தொடர்பு கொள்ளலாம். 🙂

அரட்டை நன்றாகவே இருக்கிறது. பல சின்ன சின்ன விஷயங்கள் அசத்தலாகவே இருக்கின்றன.

அரட்டை என்றால் என்ன? வாட்ஸப் போன்ற ஒரு ஆப். இந்திய ஆப். ஃபோன் நம்பர் இருந்தால் எப்படி வாட்ஸப் பயன்படுத்துகிறோமோ அப்படி இதைப் பயன்படுத்தலாம்.

வாட்ஸப்புடன் ஒப்பிடும்போது என்ன இல்லை என்று பார்த்தால்…

* வாட்ஸப்பில் பணம் அனுப்பும் வசதி இருந்தது. இதில் இல்லை. பெரிய குறை எனக்கு இது. ஃபீட்பேக் அனுப்பி இருக்கிறேன்.

* டூயல் ஆப் வசதி வாட்ஸப்புக்கு ஆண்ட்ராய்டில் வருகிறது. அரட்டைக்கு வருவதில்லை. வேறு எந்த வழியில் அரட்டை ஆப்பை டூயல் ஆப்பாக வைப்பது என்று தெரியவில்லை. அரட்டை ஆப்பின் நோக்கில் இது மிக முக்கியமானது. இல்லையென்றால், அரட்டை ஆப்பும் வாட்ஸப்பும் ஆப்பும் தேவை என்றாகிவிடும்.

* பிசினஸ் விஷயங்களில் அரட்டை ஆப்பை எந்த அளவுக்குப் பயன்படுத்தமுடியும் என்று தெரியவில்லை. சொல்லி சொல்லித்தான் மற்றவர்களை மாற்றவேண்டும். அது நடக்காது. அந்த விஷயத்தில் வாட்ஸப் தொடவே முடியாத உயரத்தில் உள்ளது.

* அரட்டை ஆப்பில் ஸூம் போன்ற மீட்டிங் வசதிகள் கிடைக்கின்றன. மிக முக்கியமாக, 40 நிமிட எல்லை இல்லை என நினைக்கிறேன். அதைவிட முக்கியம், மொபைல் ரெக்கார்டிங், மொபைலில் சேமிக்கும் வசதி இருக்கிறது. எத்தனை எம்பி சேமிக்க முடியும் என இன்னும் சோதிக்கவில்லை. இந்த மீட்டிங் வசதி அட்டகாசம். அதாவது கூகிள் மீட்டும் வாட்சப்பும் இணைந்த வசதி அரட்டையில் கிடைக்கிறது.

* சில சமயம் வாட்ஸப்பில் நோட்டிஃபிகேஷன் வரவில்லை என்றால், அதை ஃபிக்ஸ் செய்வதற்குள் தாவு தீர்ந்துவிடும். ஆனால் அரட்டை ஆப்பில் அதை ஃபிக்ஸ் செய்ய எளிதான வழி கொடுத்திருக்கிறார்கள். அதுவே செட்டிங்க்ஸை சோதித்து என்ன செய்யவேண்டும் என்று சொல்லிவிடுகிரது. இது அட்டகாசம். நோட்டிஃபிகேஷன் வரவில்லை என்ற நண்பர்களுக்கு இதை அனுப்பி இருக்கிறேன்.

* இனி வரப் போவதுதான் அரட்டையின் ஆகப் பெரிய குறை. பல வெளிநாட்டு வாழ் நண்பர்கள், ஓடிபி வரவில்லை, எனவே இந்த ஆப்பை நிறுவமுடியவில்லை என்றார்கள். நிர்வாகம் உடனே இதைச் சரி செய்வது நல்லது.

* வாட்ஸப்பில் நமக்கு நாமே மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் வசதி இருக்கிறது. மிக முக்கியமானது இது. இது அரட்டையில் இல்லை. ஃபீட் பேக் அனுப்பி இருக்கிறேன். பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என. அதற்குப் பதிலாக பாக்கெட் என்றொரு வசதி இருக்கிறது. சில பல வருடங்களுக்கு முன்பு பாக்கெட் என்றொரு ஆர் எஸ் எஸ் ஃபீடை சேமித்துப் படிக்கும் வசதி இருந்தது. மிக உபயோகமானது. அப்போதெல்லாம் ஆன்லைன் லின்க்கை க்ளிக் செய்து பாக்கெட்டில் சேமித்தால் அதை எப்போது வேண்டுமானாலும், ஆஃப்லைனிலும் படித்துக்கொள்ளலாம். அதைப் போன்ற வசதி என நினைத்தேன். ஆனால் இதை எப்படிப் பயன்படுத்துவது என்று இப்போதுவரை தெரியவில்லை. இன்னும் ஆழமாகச் சோதித்துப் பார்க்கவேண்டும்.

  • அரட்டை குரூப்பிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. அல்லது எனக்குத் தான் பார்க்கத் தெரியவில்லையா என தெரியவில்லை குரூப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினால் அதில் இன்ஃபோ சென்று பார்த்தல் யார் யாரெல்லாம் அந்த மெசேஜை பார்த்து இருக்கிறார்கள் அல்லது ஆடியோ மெசேஜ் ப்ளே செய்து இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்க முடியும். அந்த வசதி அரட்டையில் இல்லை என நினைக்கிறேன்.

* வாட்ஸப்பில் ஸ்டேட்டஸுக்குப் பெரிய அளவிலான விசிறிகள் உண்டு. மெசேஜைப் பார்க்காவிட்டாலும் ஸ்டேட்டஸைப் பார்க்காவிட்டால் செத்துப் போய்விடுவார்கள் என்னும் அளவுக்கு. அரட்டையில் அது ஸ்டோரீஸ் என்று இருக்கிறது. ஆனால் என்னைத் தவிர ஒருவரும் ஸ்டோரி வைக்கவில்லை. 🙂

* வாட்ஸப்பில் ரிமைண்டர் ஆப்ஷன் கிடையாது. அரட்டையிலும் இல்லை. இதை மட்டும் அரட்டை கொண்டு வந்து, இதை அடிப்படையாக வைத்து விளம்பரம் செய்தால், பெரிய அளவில் ரீச் ஆகும் வாய்ப்பு இருக்கிறது. இதையும் ஃபீட்பேக்காக அனுப்பி இருக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பும் நண்பர்கள் அரட்டைக்கு வாருங்கள்!

Update

அரட்டை ஆப் குறித்து எழுதி இருந்தேன். அதில் இருக்கும் முக்கியக் குறைபாடு ஒன்றையும் சொல்லியாக வேண்டும். அதாவது தனிப்பட்டுச் சொல்ல வேண்டிய அளவுக்கு முக்கியமான குறைபாடு.

ஒரு சாட்டிலோ அல்லது ஒரு குழுவிலோ பிறர் அனுப்பும் மெசேஜை நாம் நமக்கு மட்டும் டெலிட் செய்து கொள்ளும் வசதி இல்லை. இந்த வசதியை எப்படி அதில் ஏற்படுத்தாமல் விட்டார்கள் எனத் தெரியவில்லை. இது மிகவும் அடிப்படையானது.

பலர்‌ அனுப்பும் மெசேஜில் ஒரு மெசேஜைப் படித்து விட்டோம் அல்லது நமக்குத் தேவையில்லை அல்லது பிரைவசி காரணமாக, அந்த மெசேஜை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக, அந்த மெசேஜை மட்டும் டெலிட் செய்யும் வசதி கூட இல்லாமல் ஓர் ஆப்பை எப்படிப் பயன்படுத்துவது?

உண்மையில் அரட்டை ஆப்பைத் தொடர்ந்து பயன்படுத்தத்தான் வேண்டுமா என்னும் கேள்வியை எழுப்பும் அளவிற்கான குறைபாடு இது.

ஃபீட்பேக் அனுப்பி இருக்கிறேன். சரி செய்வார்களா எனத் தெரியவில்லை. நண்பர்கள் அனைவரும் இந்த முக்கியமான குறைபாட்டை உடனே சரி செய்யச் சொல்லி ஃபீட்பேக் அனுப்புங்கள்.

சுதேசியாக இருப்பதைவிட முக்கியமானது, சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது.

Share

Comments Closed