Athaikku Maranamillai

அத்தைக்கு மரணமில்லை – சீர்ஷேந்து முகோபாத்யாய் எழுதிய நாவல். தமிழில் மொழிபெயர்த்தவர் தி.அ.ஸ்ரீனிவாஸன். காலச்சுவடு வெளியீடு.

நல்ல மொழிபெயர்ப்பு. சுவாரஸ்யமான நாவல். சரியாகச் சொல்லவேண்டுமென்றால், குறு நாவல்.

விறுவிறுப்பான நாவல் என்றும் சேர்த்துச் சொல்லவேண்டும். மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த பெண்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சொல்ல முயலும் நாவல். என்றாலும், இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த நாயகியின் பார்வையில்தான் முழு நாவலும் பார்க்கப்படவேண்டும் என்பது என் பார்வை.

அத்தையின் ஆவி சொல்வதெல்லாம், எம்விவியின் காது நாவலின் உத்தியை நினைவூட்டினாலும், சுவாரஸ்யமாகவும், சில இடங்களில் அட்டகாசமாகவும் இருக்கின்றன. ஆனால் ஆவி சொல்லாது என்று எடுத்துக்கொண்டால், ஏன் இந்த நாவலை இரண்டாம் தலைமுறைப் பெண்ணான சோமலதாவின் பார்வையில் பார்க்கவேண்டும் என்பது புரியும்.

ஒரு பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட ஒரு பெண்ணின் ஏக்கம், தாகம், வெறி, வெற்றி, காமம், அதிகாரம் என எல்லாவற்றுக்கும் விடை கிடைப்பது, ஆவியின் குரலை சோமலதாவின் குரலாகப் பார்க்கும்போதுதான்.

கடைசி அத்தியாயம், ஒரு பிராயச்சித்தம். சோமலதாவின் பிராயச்சித்தம். குற்ற உணர்வின் மீதான பிராயச்சித்தம்.

நேரம் இருப்பவர்கள் வாசித்துப் பாருங்கள். விலை 125 ரூபாய்தான்.

ஃபோன் மூலம் வாங்க, 81480 66645

பின்குறிப்பு: ஆங்கில நாவலில் வரும் ஒரு பெயர் போஷோன். ஆனால் அதைத் தமிழில் வசந்தா என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி வைப்பது சரியா என்று தெரியவில்லை. தமிழில் வாசிப்பதற்கு வசந்தா சட்டென்று ஒட்டிக்கொண்டதும் உண்மைதான். இதைப் பற்றிய குறிப்பும் நாவலில் இல்லை. ஒருவேளை நான்தான் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறானோ என்னவோ.

Update

‘அத்தைக்கு மரணமில்லை’ நூல் தொடர்பாக நான் நேற்று எழுதிய குறிப்புக்கு, அந்த நூலின் மொழிபெயர்ப்பாளர் தி.அ.ஸ்ரீனிவாசன் இந்தக் குறிப்பை எனக்கு வாட்ஸப்பில் அனுப்பி இருக்கிறார். அவர் அனுமதியுடன் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். நன்றி.

//ஹரன் பிரசன்னா, வணக்கம்.‌ நான் தி.அ ஸ்ரீனிவாஸன். அத்தைக்கு மரணமில்லை புத்தகம் பற்றிய உங்கள் முகநூல் பதிவை நண்பரொருவர் எனக்கு அனுப்பியிருந்தார். நன்றி. போஷோனை ஏன் வசந்தா என்று தமிழ்ப்படுத்தினேன் என்ற உங்கள் சந்தேகத்திற்கு: அந்தப் பெண் வசந்தகாலத்தில் பிறந்ததால் அப்பெயரை இட்டோம் என்ற வரி கதையிலேயே இடம்பெற்றுள்ளது. வங்கமொழியில் அகரமும் வகரமும் எழுத்துக்கள் உண்டே தவிர ஓசை முறையே ஒகரமும் பகரமும்தான். எனவே வசந்தா என்பது பொஷோன்(தா) ஆனது. தமிழில் நான் அதை வசந்தா ஆக்கினேன். வங்க ஒலிப்புமுறையிலேயே பெயர்ச்சொற்களைத் தமிழில் தரவேண்டும் என்றால், ரவீந்திரர் ரொபீந்த்ரோ வாகவும் விவேகானந்தர் பிபேகானோந்தோவாகவும் விபின்சந்த்ர பாலர் பிபின்சந்தரோ பாலராகவும் ஆகிவிடுவார். பாரதி ஓரிடத்தில் போஸ் என்பதை வசு என்று எழுதிய நினைவு இருக்கிறது. வங்கக் குடும்பப் பெயர்களான பந்தோபாத்யாயா, போஸ் போன்றவற்றை‌ மட்டும்‌ பெரும்வழக்கு கருதி நாம் அப்படியே பயின்றுவருகிறோம். எனது விளக்கம் உங்களுக்கு உடன்பாடாக அமையும் என்று நம்புகிறேன். நன்றிகள்.//

Share

Comments Closed