நாயைக் கொல்ல வேண்டும் என்று சொல்பவன் ஃபாசிஸ்ட். காட்டுமிராண்டி. யூதர்களைக் கொல்லச் சொன்ன ஹிட்லரைப் போன்றவன். கையில் கத்தியுடன் திரியும் மதவாதி. பக்கத்து வீட்டுக் குழந்தையை கொல்லச் சொல்பவனும் நாயைக் கொல்லச் சொல்பவனும் ஒனறு. பூனைக்கு உணவளிக்கப் பிச்சை எடுக்கும் கருணைவாதிகளின் குரல்கள் ஃபாசிஸ்ட்டுகளால் அமுக்கப்படுகின்றன. சாருவின் அதிரடி அறச்சீற்றக் கட்டுரை!
நாய்க்கு மட்டும்தான் கருணை. மற்ற எந்த உயிரையும் கொன்று பதமாகச் சமைத்து ருசித்துச் சாப்பிடலாம். அதில் தவறில்லை. ஆனால், தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வழி தெரியாமல், அரசு கைவிட்டுவிட்ட நிலையில், நாயைக் கொல்லச் சொல்லிப் பாதிக்கப்பட்டவர்கள் சொன்னால் அவர்கள் ஃபாசிஸ்டுகள்.
நாயைக் கொல்லாமல் வேறு தீர்வுகள் இருந்தால் நிச்சயம் யாரும் நாயைக் கொல்லச் சொல்லப் போவதில்லை. ஆனால் எத்தனையோ தீர்வுகள் இருந்தும் அத்தனை உயிரினங்களையும் கொன்று ரசித்து உண்ணும் மனிதர்கள், நாய்க் கொலையைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள்.
நாயைக் கொல் என்று வாய் வார்த்தையில் செல்பவனை, தினம் தினம் ஒவ்வொரு உயிரினத்தையும் கொன்று தின்று கொண்டிருப்பவரோ அல்லது இவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பவர்களோ பேசலாமா?
பின்குறிப்பு: தெரு நாயைக் கொல்வதில் எனக்கும் வருத்தம் இருக்கிறது. நான் அந்தத் தீர்வை ஏற்கவும் இல்லை. அதே சமயம் தெரு நாய்கள் பெருக்கம் கட்டுப்படுத்த வேண்டும். தெரு நாய்களின் உயிரை விட மனிதர்களின் உயிர் முக்கியமானது. தெரு நாய்கள் கடிக்காமல் இருக்குமானால் அதை ஏன் வெறுக்கப் போகிறார்கள்? நாய்களை வீட்டில் வைத்து வளருங்கள். இல்லை என்றால் அமைதியாக இருங்கள்.