வேதா (H) – தலித் கொடுமைகளுக்கு எதிரான ஒரு ஹீரோயிஸத் திரைப்படம். இந்த வரிக்குள்தான் ஒரு படமாக இந்தப் படத்தின் தோல்வியும் அமைகிறது. தலித் திரைப்படங்களுக்கே உரிய யதார்த்தம் படம் நெடுக மனதை உலுக்கும் வகையில் இருக்கிறது. ஆனால் அதை முறியடிக்கும் விதமோ, கொஞ்சம் கூட யதார்த்தமே இல்லாத ஹீரோயிஸ பாணியில் அமைகிறது.
Spoilers alert.
ஜான் ஆப்ரஹாம் சுடுகிறார் சுடுகிறார் சுட்டுக்கொண்டே இருக்கிறார். யாராக இருந்தாலும் அடித்துப் போட்டு துவம்சம் செய்கிறார். இவர் இதையெல்லாம் செய்யக் கூடியவர்தான் என்று பார்வையாளர்களை நம்ப வைப்பதற்காக, பக்காவாக முதல் காட்சியை வைத்திருக்கிறார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தனியாளாகச் சென்று, இந்திய ராணுவ உதவியுடன், பயங்கரவாதிகளைப் போட்டுத் தள்ளுகிறார். எனவே இவர் என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்தாம் என்று வலுக்கட்டாயமாக நம்மை நம்பச் சொல்கிறார்கள்.
தலித் பெண் பாக்ஸிங் கற்றுக் கொள்ள நினைப்பதை, எப்படி உயர்ஜாதிக்காரர்கள் எதிரிக்கிறார்கள், எப்படி அந்தப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் ஜாதிய வன்கொடுமைக்கும் ஆளாக்கப்படுகிறார்கள் என்பதுதான் மையக் கதை.
ராஜஸ்தானில் நடக்கும் கதை. ராஜஸ்தானின் கிராமங்களையும் அங்கே நடக்கும் அநியாயங்களை ஒளிப்பதிவு அத்தனை அட்டமாசமாக நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இவையே படத்தின் பலம்.
ஜான் ஆப்ரஹாம் மொத்தமாக ஒரு பக்கம் வசனம் பேசினால் அதிகம். வழக்கம்போல பார்க்கிறார். சிரித்தால் விருது நிச்சயம் என்பது போலவே இருக்கிறார். தாலி கட்டும்போது மறந்து போய் சிரிக்கிறார்.
படத்தின் சுவாரஸ்யம் என்ன? படம் முடிந்த பின்பு சில சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. இறுதிக் காட்சியில், இந்தக் கதை உண்மைக் கதைகளை மையமாக வைத்து எடுத்தது என்று சில சிலைடுகளைக் காட்டுகிறார்கள்.
நம் ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக ஜாதிய வன்கொடுமை ஏதேனும் நடக்காவிட்டால்தான் நாம் ஆச்சரியப்படவேண்டும். எனவே ஆதாரம் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இருந்தாலும், இந்த ஆதாரங்களை ஆராய்ந்தேன். அங்கேதான் சில சுவாரஸ்யங்கள் கிடைத்தன.
இந்தப் படம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளுக்கு எதிரான படம். இதற்காக உண்மை நிகழ்வுகளைத் தங்களுக்கு வசதியாக, ஒரு திரைப்படத்துக்காக வளைத்துக் கொண்டிருக்கிறார்கள். தவறில்லை. ஆனால் உண்மை நிகழ்வுகளைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
2015ல் மீனாக்ஷி குமாரி மற்றும் அவரது தங்கை இருவரையும் அந்த ஊர்ப் பஞ்சாயத்து பாலியல் பலாத்காரம் செய்ய உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஏன் சொல்லப்படுகிறது என்று சொல்கிறேன் என்றால், வழக்கில் இதற்கான ஆதாரம் தரப்படவில்லை. பெண்கள் சொன்ன வாக்குமூலத்தை வைத்தே வழக்கு பதியப்படுகிறது. காரணம் என்ன?
2011ல் இந்த இரு பெண்களின் சகோதரன், உயர்ஜாதிப் பெண், அதுவும் திருமணமான பெண்ணுடன் ஓடிப் போகிறான். இதன் காரணமாகவே இப்படி ஒரு தீர்ப்பு. இதை எதிர்த்து வழக்கு 2015ல் பதியப்படுகிறது.
இந்தியாவை மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்த வழக்கு, அதாவது இரு பெண்களுக்கு எதிராகச் சொல்லப்பட்ட ஊர்ப் பஞ்சாயத்தின் தீர்ப்பு பேசப்பட்டதாக கூகிள் சொல்கிறது. காரணம், ஆம்னெஸ்டி அமைப்பு இந்த வழக்கைக் கையில் எடுக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் சகோதரிகளைப் பாதுகாக்கச் சொல்லி இந்தியாவுக்குச் சொல்லுங்கள் என்ற பிரசாரம் உலகம் முழுக்க வலுக்கிறது. வழக்கம் போல சி என் என், பிபிசி எல்லாம் களத்தில் குதிக்கின்றன.
திரைப்படத்தில், இரு பெண்களின் சகோதரன், திருமணமாகாத ஒரு பெண்ணைக் காதலித்து ஓடிப் போவதாகக் காட்டுகிறார்கள். திருமணமான பெண்ணுடன் ஓடிப் போவதாகக் காட்டி இருந்தால், ஒட்டுமொத்த படத்தின் ஆதாரமும் சிதைந்து போயிருக்கும். இப்படிச் சொல்வதால், பஞ்சாயத்து சொன்னது சரி என்பதல்ல. உண்மையில் பஞ்சாயத்துக்கு இப்படி எல்லாம் தீர்ப்புச் சொல்ல அதிகாரம் இருந்தது என்பதே அசிங்கம்.
சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இந்தப் பஞ்சாயத்து முறையை எப்படி ரொமாண்டிசைஸ் செய்தோம் என்று நினைத்துப் பார்க்கிறேன். இதில் ஒரு நீதிபதியை கார் ஓட்டுநர் கேள்வி கேட்டு அசிங்கம் வேறு செய்வார். திரைப்படம் என்பது எதை நாம் காட்டுகிறோம் என்பதுதான்!
இந்தப் படத்தில் சுட்டிக் காட்டப்படும் இன்னொரு வழக்கு, 2007 மனோஜ் பாப்லி வழக்கு. இருவரும் காதலித்து ஓடிப் போய் கல்யாணம் செய்கிறார்கள். இருவரும் ஒரே ஜாதி. ஜாட். ஆனால் இவர்களது கல்யாணம் செல்லாது என்று ஊர்ப் பஞ்சாயத்து அறிவிக்கிறது. பெண்ணின் உறவினர்கள் போலிஸ் உதவியுடன் பெண்ணையும் பையனையும் தூக்குகிறார்கள். இருவரையும் சித்திரவதை செய்து, கொன்று, குட்டையில் வீசுகிறார்கள்.
பெண்ணின் குடும்பத்தினர் ஐந்து பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கிறது விசாரணை நீதிமன்றம். பஞ்சாயத்துத் தலைவருக்கு ஆயுள் தண்டனை. போலிஸுக்கு 7 வருடம் சிறை. ஆனால் உச்ச நீதி மன்றம் வரை சென்று போராடி, 2018ல் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது.
இந்த இரண்டு வழக்குகளும் ஊர்ப் பஞ்சாயத்து முறைகளைக் கடுமையாகக் கேள்விக்கு உட்படுத்துகின்றன. இதை அடிப்படையாக வைத்துத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஜாதியில் திருமணம். பெண் வீட்டார் ஏன் கொலை வரை சென்றார்கள்? இருவரும் ஒரே கோத்திரம். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக்கூடாது என்பதால் கொலைக்கு உத்தரவிட்டிருக்கிறது ஊர்ப் பஞ்சாயத்து! இதை பையன் வீட்டார் எதிர்க்க, அவர்கள் மீதும் கடும் கோபத்தில் இருந்திருக்கிறது பஞ்சாயத்து.
இப்படி ஒரே கோத்திரத்தில் கல்யாணம் செய்துகொண்டவர்களுக்காக ஹீரோ போராடினால் யார் பார்ப்பார்கள்? எனவே திரைப்படத்தில் தங்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் மூன்றாவதாகக் காட்டப்பட்ட வழக்கு விவரம் நடந்தது தமிழ்நாட்டில்.
2011ல் ஆறுமுகம் சேர்வை வழக்குத் தீர்ப்பு. 1999ல் மதுரையில் ஜல்லிக்கட்டு சமயத்தில் தாழ்த்தப்பட்டவர்களை அவர்களது சாதியைச் சொல்லித் திட்டப்பட்ட வழக்கு. 500 ரூபாய் அபராதம், ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை தீர்ப்பு.
மேலே சொன்ன மூன்று வழக்கையும் வைத்துக்கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
கதாநாயகி நீதிமன்றத்தை நம்பி ஓடுகிறாள். நீதிமன்றமே தாக்கப்படுகிறது. ஜாதியின் கைகளுக்குப் பயந்து நீதிபதிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். ஆனாலும் நீதி கேட்டு நிற்கிறாள் கதாநாயகி.
இந்தத் திரைப்படத்தில் ஹீரோவின் பெயர் அபிமன்யு. கடைசியில் ஜாதியவாதிகளின் வியூகத்தில் சிக்கித் தோற்கவேண்டும். ஆனால் அவன் யதா யதா ஹித்தர்மஸ்ய என்று சொல்லி, திரௌபதி வெல்லாமல் விடமாட்டாள் என்று நம்பிக்கையோடு கூறி, வில்லனைக் கொல்கிறான்.
நல்ல படமாக வந்திருக்கவேண்டியது, ரஜினி பாணி ஹீரோயிஸக் காட்சிகளால் கீழிறங்குகிறது. ஆனாலும் பார்க்கலாம்.