Paranthu Po Review

பறந்து போ

ஒருவகையில் முக்கியமான படம். எந்த வகையில் என்றால், ஒரு குழந்தையை எப்படி வளர்த்து நாசமாக்கக் கூடாது என்பதை இந்தப் படத்தின் தொடக்க நொடி முதல் இறுதி வரை பார்க்கலாம்.

புதிய வாழ்வில் முறைகள் நம் மரபான வாழ்வியல் முறைகளை மொத்தமாக நசுக்கி, இப்படித்தான் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று மேலை நாட்டுச் சட்டத்தின் வழியாக நம்மைப் பார்க்கச் சொல்லும். அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் ஒரு திரைப்படம் இது.

குழந்தைகளின் மீதான வன்முறை, வீட்டில் பள்ளியில் குழந்தைகளை அடிப்பது போன்றவை எல்லாம் சரி என்று யாரும் வாதாடவில்லை. அது நம் மரபில் அதீதமாக இருந்தது என்பதும் உண்மைதான். அது இப்போது குறைந்து இருக்கிறது. இன்னும் குறைய வேண்டும்.

அதே சமயம் குழந்தைகள் சொல்வதை எல்லாம் கேட்டுத் தலையாட்டிக்கொண்டு செல்லம் கொடுத்து அவர்களைக் கொஞ்சம் கூட கண்டிக்காமல் வளர்ப்பது, அந்தச் சிறுவர்களைக் கேடு கெட்டவர்களாகத்தான் மாற்றி வைக்கும். நாளையே அந்தப் பையன்/பெண் வளர்ந்த பிறகு, என்னைக் கண்டித்திருந்தால் நான் இப்படி நாசமாகப் போய் இருக்க மாட்டேன் என்று ஒரு பெற்றோரைப் பார்த்து சொல்லாமல் இருக்க மாட்டான். இருக்க மாட்டாள்.

பொதுவாக, இப்படிக் குழந்தைகளை கண்டிக்கவே கூடாது என்று நினைப்பவர்கள், குழந்தைகளைக் கூட போங்க வாங்க என்று சொல்ல வேண்டும் என்று செயற்கையான ஒன்றைத் திணிப்பார்கள். அதை மட்டும் ஏனோ ராம் மறந்து விட்டார் போல. இப்படிக் குழந்தைகளை போங்க வாங்க என்று அழைப்பவர்கள் தங்கள் தொழில் நிறுவனங்களில் மற்றவர்களை எப்படி அழைப்பார்கள் என்பது தனிக்கதை.

ராம் இத்தனை தட்டையாக சிந்திப்பார் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். 9/11 பயங்கவாதத் தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம், அதற்குக் காரணம் அந்த டவர்களின் கீழே இருக்கும் கோடி கோடியான தங்கம் என்றெல்லாம் அவர் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது.. இப்பேற்பட்டவர்களின் சிந்தனைகளில் இவ்வளவுதான் வரும்.

இந்தத் திரைப்படமும் அப்படித்தான் வந்திருக்கிறது. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதைப் பிள்ளைகளிடம் புரிய வைக்க வேண்டும். இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படாதே என்பதையும் புரிய வைக்க வேண்டும். எப்போது கண்டிக்க வேண்டுமோ அப்போது கண்டிக்க வேண்டும். எப்போது செல்லம் கொடுக்க வேண்டுமோ அப்போது செல்லம் கொடுக்க வேண்டும். கஷ்டத்தைச் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். எல்லாவற்றிலும் ஒரு சமநிலை முக்கியம். அந்தச் சமநிலையைப் பற்றிய பிரக்ஞை கொஞ்சம் கூட இல்லாமல், அதை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டு இந்தப் படம் கிறுக்குத்தனமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில் நல்ல குழந்தைகளை வளர்க்க விரும்புவர்கள் இந்தப் படத்தை உங்கள் குழந்தைக்குக் காண்பிக்கவே காண்பிக்காதீர்கள்.

அப்படியானால் இந்தப் படம் யாருக்கானது? அதீதப் பணம், இரவு நைட் கிளப், தினம் தினம் பீஸா பர்கர் என வாழ்பவர்களுக்கானது. இவர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று நினைப்பார்களோ அந்த மேலை நாட்டுச் சிந்தனையை, இலைட் வளர்ப்பை அப்படியே காட்சிப்படுத்தி இருக்கும் ஒரு திரைப்படம் இது. இயக்குநர் அதை ஒரு மிடில் கிளாஸ் வழியாகச் சொன்னதுதான் அராஜகம்.

இதில் மதம் மாறிக் கல்யாணம் செய்து கொண்டவர்கள் என்ற எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் வேறு. கிறித்துவப் பெண் தனது சகோதரி கிறித்துவப் பெண்ணைச் சாபமிட்டுப் போகிறார். அந்தக் காட்சி ஓரளவு நேர்மையாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஹீரோயின் ஹீரோவை அன்பாகச் சாத்தான் என்று அழைப்பது நெருடவே செய்கிறது. அவர்களுக்குள் இருக்கும் அன்னோன்யத்தில் அப்படி அழைப்பது தவறில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அவன் பதிலுக்கு  அந்தப் பெண்ணை பிணத்தைக் கும்பிடுறவங்க என்றெல்லாம் ஒரு வார்த்தை கூட அழைப்பதில்லை. ஸூடோ இயக்குநருக்கு அப்படித் தோன்றாது.

திரைப்படமாகவும் ஒரே போன்ற காட்சிகள் மீண்டும் மீண்டும் வந்து எரிச்சலை ஏற்படுத்துகின்றன. அதீதமாகச் சொல்லப்படும் எதுவும் எரிச்சலைத்தான் தரும். அதிலும் கடைசிக் காட்சிகள் போதும்டா உங்க படம் என்று சொல்ல வைத்து விடுகிறது. அதேசமயம் சில காட்சிகள் மனம் விட்டுச் சிரிக்க வைக்கின்றன என்பதும் உண்மைதான். குறிப்பாக, மிர்ச்சி சிவா மரத்தின் மேல் படுத்திருக்கும் காட்சி.

இந்தப் படத்தின் ஆச்சரியம் என்ன? மிர்ச்சி சிவாவுக்கு இத்தனை இயல்பாக சீரியஸாகவும் நடிக்க வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அசத்தி விட்டார். அதைவிட அ ந்த மலையாளப் பெண் ஹீரோயின் படம் நெடுக அப்படி ஒரு நடிப்பு. மற்ற அனைத்து நடிகர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். நடிகர்களுக்காகப் பார்க்கலாம். அப்போது கூட குழந்தைகளுடன் பார்க்காதீர்கள்.

நான் இப்படிச் சொல்வதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. நாம் இளம் வயதில் திரைப்படங்களில் காதல் காட்சிகளைப் பார்க்கும்போது ஒரு எண்ணம் தோன்றும். நாம் இப்படி ரொமான்ஸாக ஒரு பெண்ணிடம் பேசினால் எப்படி இருக்கும் என்று. லஞ்சம் வாங்கும் ஒருவனைக் கதாநாயகன் போலீசில் பிடித்துக் கொடுக்கும் போது நமக்கு ரத்தம் முறுக்கேறும். ஆனால் எதார்த்தத்தில் அது அத்தனை எளிதல்ல என்பது நமக்குத் தெரியும். சிறு குழந்தைகளுக்குப் பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டுச் சிந்திக்கும் எண்ணம் மிக எளிதில் தொற்றிக் கொள்ளும். அதை இந்தப் படம் ஆயிரம் மடங்கு தூண்டிவிடுகிறது. அதற்காகத்தான் சொல்கிறேன், உங்கள் குழந்தைகளைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

***

வடிவேலிடம் ஒரு பைத்தியம் கேட்குமே, இசைனா என்னனு தெரியுமா என்று. அதற்கு இணையாக ராம் இரட்டைக் கோபுரம் தாக்குதல் பற்றிப் பேசும் வீடியோவைக் கண்டு களியுங்கள்.

Share

Comments Closed