மாரீசன் – மோசம் என்று ஒதுக்கி விடவும் முடியாது. அருமை என்று கொண்டாடவும் முடியாது. இரண்டே இரண்டு நடிகர்கள் மட்டும் பெரும்பாலும் படம் முழுவதும் வரும்போது ஏற்படக்கூடிய ஒரு அலுப்பு இந்த படத்தில் பெரிய அளவுக்கு ஏற்படாததற்குக் காரணம், இதில் வந்திருக்கும் இரண்டு நடிகர்கள் ராட்சசர்கள். அந்த இரண்டு நடிகர்களைப் பிடிக்கும் என்றால் இந்தப் படம் நீங்கள் தவற விடக்கூடாதது.
வடிவேலு தன் எல்லை மிகாமல் தெளிவாக ஒரு கோடு போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே பிரமாதப்படுத்தி இருக்கிறார். இதற்கு முந்தைய மாமன்னன் திரைப்படத்தில் வந்ததைவிட இதில் இன்னும் விரிவான பாத்திரம். நன்றாகச் செய்திருக்கிறார். ஃப்ளாஷ்பேக்கில் அவர் அழும் காட்சி குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது.
ஃபகத் ஃபாஸில் பற்றித் தனியே சொல்ல வேண்டியது இல்லை. ஒவ்வொரு நொடியும் முகபாவத்தில் அசரடிக்கிறார். இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் பின்னர் விறுவிறுப்பாகிறது. இடைவேளை வரை கவிதை என்றால் இடைவேளைக்குப் பிறகு அந்தக் கவிதை கொஞ்சம் தொலைந்து போனாலும் கூட, இறுதிவரை பார்க்க முடிகிறது.
படத்தின் லாஜிக் ஓட்டைகள் என்று எடுத்துக் கொண்டால் பெரிய பட்டியலே போடலாம். அதிலும் போலீசின் பங்கு இத்தனை கேவலமாக இருந்திருக்க வேண்டியதில்லை. அதனால்தானோ என்னவோ கோவை சரளாவை போலீஸாகப் போட்டு சிரிப்பு போலீஸ் என்று சிம்பாலிக்காகக் கட்டியிருக்கிறார்கள் போல. கோவை சரளாவுக்கு நடிக்கவே வரவில்லை.
நேத்து ஒருத்தரை ஒருத்தர் பார்த்தோம் பாடல் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதில் வரும் இரண்டு நடிகர்களும் பிரமாதப்படுத்தி விட்டார்கள்.
ஃபகத் ஃபாசிலுக்காகவும் வடிவேலுக்காகவும் பொறுமை இருந்தால் தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.
பின்குறிப்பு: படத்தின் மையக்கதை இதுதான் என்று முன்பே தெரிந்திருந்தால் நான் படத்துக்குப் போயிருக்கவே மாட்டேன். இது ஒரு ரோடு ஸ்டோரி, அதிலும் ஃபகத்தும் வடிவேலும் நடித்திருக்கிறார்கள் என்பதற்காகவே போனேன். பொதுவாக எனக்கு இதுபோன்ற கதை தரும் படபடப்பு சொல்லி மாளாதது. கதை தெரியாததால் மாட்டிக் கொண்டு விட்டேன்.