பிரதோஷம் என்பதற்கு மகுடேசுவரன் அளித்த விளக்கம் தொடர்பான பரிமாற்றங்களைப் பார்க்கிறேன்.
மகுடேசுவரன் முக்கியமான தமிழ் அறிஞர். 2000ம்களில் சுஜாதாவுடனான மின்னம்பலம் அரட்டையின்போதே அவர் பல ஆங்கில வார்த்தைகளுக்குத் தமிழ் வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டிருப்பார். பல எனக்குச் சிரிப்பாக இருக்கும். ஆனாலும் அவர் எந்தக் கிண்டலையும் பொருட்படுத்தாமல் அவர் மனதுக்குப் பட்டதைச் சொல்லிக்கொண்டே இருப்பார். இது மிக முக்கியமான உந்துசக்தி. தேவையான ஒன்று. இது இல்லாவிட்டால் யாராலும் சாதிக்க முடியாது.
ஸ்டம்புக்கு முக்குச்சி, ஃபேஸ்புக்கிற்கு முகப் புத்தகம் போன்றவை எனக்கு ஒவ்வாதவை. அதேசமயம், இது போன்ற தனித் தமிழ் தீவிர ஆர்வலர்கள் இல்லாவிட்டால் தமிழ் மொத்தமாக அழிந்துவிடும் அபாயம் உண்டு என்பதாலும், இவர்கள் தோற்றுவிக்கும் பல வார்த்தைகளில் சில ஊன்றி நின்றாலும் (பேருந்து, தொடர்வண்டி போன்றவை) அவை தமிழுக்குச் செழுமை சேர்ப்பவை என்பதாலும், இவர்கள் மீது எனக்கு எப்போதும் (கிண்டலைத் தாண்டிய) மரியாதை உண்டு. பல முறை இதைச் சொல்லி இருக்கிறேன். மகுடேசுவரன் மீதும் அப்படியே.
ஆனால் பிரதோஷம் என்கிற வார்த்தை குறித்து மகுடேசுவரன் சொல்லி இருப்பது தவறான விளக்கம். அதைச் சரியாக மற்றவர்கள் சுட்டிக் காட்டும்போது, அதில் ஓர் ஏளனத் தொனி கலந்துவிட்டது உண்மைதான் என்றாலும், அந்தத் தொனியைக் கண்டிக்கவேண்டியது மகுடேசுவரனின் தனிப்பட்ட உரிமைதான் என்றாலும், அதைத்தாண்டி, விளக்கத்தை ஏற்றுக்கொள்வது அவசியம்.
பற்பல வார்த்தைகளுக்குத் தமிழில் அருவி போலக் கொட்டிக்கொண்டிருக்கும் போது ஒன்றிரண்டு தவறுவது இயல்பு. அதை ஏற்றுக் கொள்வதே சிறப்பு.
எனக்கு வருத்தம் தந்தது அல்லது ஆச்சரியம் தந்தது அல்லது எரிச்சல் தந்தது, மகுடேசுவரனின் சிறிய சறுக்கல அல்ல, அதற்கான ஆதாரமாக தினமலர் யூடியூவை அவர் காட்டியதுதான். மகுடேசுவரன் தனது திறமையும் உயரமும் என்ன என்பதை அவரே இன்னும் உணரவில்லை என்று நினைக்க வைத்துவிட்டது.
பாலகுமாரன் ஒரு கதையில் எழுதிய நினைவு. தமிழ் தெரியாத ஒரு பத்திரிகையாளர் திருமனம் என்று எழுத, அது திருமனம் அல்ல, திருமணம் என்று பலர் சுட்டிக்காட்ட, பத்திரிகையாளர் அதற்கு விளக்கமாக, “திருமணம் என்பது சரியாக இருக்க முடியாது. இரு மனங்கள் இணைவது என்பதால் திருமனம் என்பதே சரியாக இருக்கமுடியும்” என்றாராம்.
சிறிய தவறை அப்போதே ஒப்புக்கொண்டு அதைத் தாண்டிப் பல தூரம் பறப்பதே அறிஞர்களுக்கு அழகு.