ராஜ வனம் – ராம் தங்கம் எழுதிய சிறு நாவல். கிண்டிலில் வாசித்தேன். காடு, அவன் காட்டை வென்றான், கெடைக்காடு, ஆரண்யக், கானகன் போன்ற நாவல்களைப் படிக்காதவர்களுக்கு இந்த நாவல் காட்டைப் பற்றி ஓர் ஆச்சரியத்தைச் சிறிய அளவில் தரக்கூடும். அந்த நாவல்களை வாசித்தவர்களுக்கு இது இன்னும் ஒரு காட்டைப் பற்றி நாவலாகவே மிஞ்சும். காட்டைப் பற்றிய நாவலுக்கு அபாரமான கற்பனையும் யதார்த்தமான காட்டு வாழ்க்கை அனுபவமும் தேவை. இந்த நாவலில் காட்டைப் பற்றிய இடங்கள் கொஞ்சம் தேங்கினாலும், கூறியதே மீண்டும் மீண்டும் கூறுவதாகப் பட்டாலும், பழங்குடியினரின் வாழ்க்கை பற்றிய விவரங்கள் மற்றும் நிகழ்வுகள் கொஞ்சம் மேலெழுந்து வருகின்றன. இன்னும் ஆழமாக விரிவாக இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் தோன்றாமல் இல்லை.
வேசடை – ஏக்நாத்தின் சிறு நாவல். ஏற்கெனவே இவர் எழுதிய கெடைகாடு நாவலைப் படித்திருக்கிறேன். அந்த நாவிலிலும் கதை என்று ஒன்று கிடையாது. வட்டாரம், இடங்கள் மற்றும் மனிதர்களைப் பற்றிய விவரணைகளும் அதனூடாகச் செல்லப்படும் சில நிகழ்வுகளுமே கதை. அதே போல் தான் இந்த நாவலும். அந்த நாவலில் இயற்கையான காடு ஒன்றைப் பார்க்க முடிந்தது. இந்த நாவலில் ஒரு சிறிய பற்றுக்கோடாகக் கதை என்ற ஒன்று இருக்கிறது. மற்றபடி பல்வேறு காலங்களில் நிகழும் காலமாற்றம், அதை ஒட்டிய ஒரு கிராமத்து மனிதனின் நினைவுகளுமாகக் கதை நீள்கிறது. கெடைகாடு அளவுக்கு இல்லை என்றாலும், இதை வாசிக்கலாம். இன்னும் ஆழமாக அடர்த்தியாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியதை மறுக்க முடியாது. நாவலில் வரும் நிகழ்வுகள் எவையுமே புதியதாக இல்லை என்பதும் ஒரு குறை. நெல்லை வட்டார வழக்கு பிடித்தவர்களுக்கு இந்த நாவல் கூடுதலாக ஒட்டிக்கொள்ளக் கூடும்.