வேட்டையன் – ஒன்று ரஜினிக்கான வணிகப் படம் என்று இயக்குநர் யோசிக்கவேண்டும். அல்லது நல்ல படம் என்று யோசிக்கவேண்டும். இரண்டையும் யோசித்தால் என்னாகும்?
முதல் பாதி பரபர. இடைவேளைக்கான ப்ளாக்கைக் குழந்தை கூட யூகிக்கும் என்றாலும் அந்தக் காட்சி நன்றாகவே இருந்தது. ஏனென்றால் அந்தக் காட்சியின் முக்கியத்துவம். இது போன்ற ஒரு கதையில் நடித்ததற்காகவே ரஜினியைப் பாராட்டவேண்டும் என்கிற அளவுக்கு முக்கியமான காட்சி. எல்லாவற்றையும் பக்காவாக செட் செய்துவிட்டு இரண்டாம் பாதியில் போட்டு வறுத்தெடுத்துவிட்டார்கள்.
இடைவேளை வரை என்கவுண்ட்டர் செய்வது ஏன் தவறே இல்லை என்று பொதுப்புத்தியில் ஆழமாக நிலைநிறுத்திவிட்டு, ஒரே காட்சியில் அது தவறு என்று கொண்டு போனால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
இடைவேளைக்குப் பிறகான படம் அமிதாப் vs ரஜினி என்று இருக்கும் என நினைத்துப் பார்த்தால், அமிதாப் ரஜினியின் வாலாகிவிடுகிறார். இதில் ஜோக்கர் வேடத்தில் ஃபகத். பாவம்.
சமீப கால இயக்குநர்களைப் பிடித்தாட்டுவது டிவிஸ்ட் என்னும் வியாதி. அதற்காகத் திரைக்கதையைக் கோட்டைவிடுகிறார்கள். யார் வில்லன் என்று முதலில் காட்டாமல் இருக்க இது என்ன த்ரில்லர் படமா? யார் வில்லன் என்று நமக்குத் தெரிவதற்குள் பாதி உயிர் போய்விடுகிறது. இதே தவறுதான் அண்ணாத்தே படத்திலும். ஒரு திரைப்படத்துக்கு ஒரு ஹீரோ என்றும் ஒரு வில்லன் என்றும் இருப்பது எப்போதுமே பலம்.
அடுத்த பிரச்சினை, ரஜினியை வைத்துக்கொண்டு நீட்டுக்கு எதிராகப் பேசுவதிலும் இயக்குநருக்குச் சிக்கல். நீட்டை ஆதரித்தாலும் சிக்கல். எனவே சுற்றி வளைத்து கோச்சிங் செண்ட்டர்களைக் குறி வைக்கிறார்கள். படம் கோச்சிங் செண்டருக்கு எதிரானதா நீட்டுக்கு எதிரானதா என்பதிலும் இயக்குநருக்குத் தெளிவில்லை.
கல்வியில் சமத்துவம் என்றால் அரசே நடத்தும் பல தேர்வுக்கும் அது பொருந்தவேண்டும். இயல்பில் அது சாத்தியமே இல்லை. ஏதோ ஒரு கட்டத்தில் நுழைவுத் தேர்வுகளை நீங்கள் தவிர்க்கவே முடியாது. கல்வியில் சமத்துவத்தை ஆதரிக்கிறோமா, நீட்டை எதிர்க்கிறோமா அல்லது கோச்சிங் செண்டரின் ஏமாற்றுத் தனத்தை எதிர்க்கிறோமா என்று இயக்குநருக்குக் குழப்பமோ குழப்பம்.
என்கவுண்ட்டருக்கு எதிரான திரைப்படம் என்றால் உண்மையில் திரைக்கதை ரஜினி vs அமிதாப் என்றிருந்திருக்கவேண்டும். நல்ல வாய்ப்பையும் களத்தையும் தவற விட்டிருக்கிறார் இயக்குநர்.
ரஜினி படம் என்று பார்த்தால் ரஜினிக்கான மாஸ் சீனோ, புல்லரிப்புக் காட்சியோ ஒன்று கூட இல்லை. ரஜினியின் நடிப்புக்கேற்ற காட்சிகளும் இல்லை. இதைவிட அராஜகம், ரஜினியும் இல்லாமல், அமிதாப்பும் இல்லாமல், ஃபகத்தும் இல்லாமல் படம் முழுக்க ஏகப்பட்ட காட்சிகள்.
ரஜினிக்கு நடக்க முடியவில்லை. அதை எப்படி சமாளித்துப் படமெடுக்க என்று இயக்குநருகுத் தெரியவில்லை. இந்தக் காலப் படத்தில் ஏன் இத்தனை சண்டைக் காட்சிகள்?
ஒரு பெண் கொல்லப்படுவதை அதிகம் முறை மீண்டும் மீண்டும் காட்டப்பட்ட சாதனைத் திரைப்படமாக இது இருக்க வாய்ப்பு அதிகம். எத்தனை தடவைப்பா காமிப்பீங்க? இந்தப் பெண் சாகும் காட்சியில் உயிர்கொள்ளும் திரைப்படத்தை அராஜகமாகக் கொன்றுவிட்டார் இயக்குநர்.
என்கவுண்ட்டருக்கு எதிரான படம் என்ற போர்வையில் நீட்டுக்கு எதிரான படமாகவும் அது இருந்து அது ரஜினி படமாகவும் இருக்கவும் ஆசைப்பட்டு அதில் கார்ப்பரேட் எதிர்ப்பையும் சேர்த்து ஒரு தட்டில் பரிமாறினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது திரைப்படம். இத்தனை குழப்பங்களுடன் வந்தால் ஒரு படம் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது வேட்டையன்.
ஒரு தடவை பார்க்கலாம்.


