அந்திமழை இளங்கோவன் அஞ்சலி
2001கள் வாக்கில் மரத்தடி யாஹூ குழுமத்தில் கைக்கு வந்தவற்றை எழுதுவது வழக்கம். அப்போது அந்திமழை.காம் என்றொரு ஆன்லைன் இதழ் இருப்பதே எனக்குத் தெரியாது. என் கவிதை ஒன்றை அந்திமழை என்னும் வலைத்தளம் வெளியிட்டிருப்பதாக நண்பர் ஒரு சொல்லவும், என்னடா இது ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் வெளியிட்டிருக்கிறார்களே என்று நினைத்து, அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். கவிதை வெளியிட்டதை என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் என்று நான் எழுதிய கடிதத்துக்கு பதில் வந்தபோதுதான் இளங்கோவன் என்று ஒருவர் இருப்பதே எனக்குத் தெரியும்.
அந்த வலைத்தளத்தின் பெயர் அந்திமழைதானா என்பது கூட இப்போது சந்தேகமாக இருக்கிறது. ஆனால் இளங்கோவனின் பெயர் நன்றாக நினைவில் இருக்கிறது.
பத்துப் பதினைந்து நாள்கள் கழித்து, துபாய்க்கு ஒரு மடல் போஸ்டலில் வந்தது. பார்த்தால், என் கவிதையை வெளியிட்டு, அதை அச்செடுத்து தபாலில் அனுப்பி இருந்தார்கள். ஆன்லைன் தளமே ஆன்லைனில் வாசிக்கத்தானே, ஏன் அச்செல்லாம் என்று இளங்கோவனுக்கு பதில் அனுப்பினேன். எப்போது வேண்டுமானாலும் என் படைப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்ன நினைவு.
அதன் பிறகு பல முறை இளங்கோவனுடன் தொடர்பு நிகழ்ந்திருக்கிறது. எல்லாமே தற்செயலாக அமைந்தவைதான். புத்தகக் கண்காட்சிகளில் பார்ப்பது. ஏதேனும் புத்தக வெளியீட்டில் பார்ப்பது. குறிப்பாக, கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட, சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டுக்கு அவர் வந்திருந்தார். சாருவுடன் அவர் பேசிக்கொண்டிருந்தார். அவரைத் தொந்தரவு செய்யாமல் விலகிச் சென்றபோது, என்னை அழைத்துப் பேசினார். இருவரும் சேர்ந்து டீ குடித்தபடி பேசினோம்.
அந்திமழையில் இருந்து அடிக்கடி படைப்புகள் கேட்பார்கள். எழுதிக் கொடுப்பேன். நண்பர் அசோகன் பெரும்பாலும் அதை அப்படியே பிரசுரிப்பார். ஹிந்துத்துவத்தை எதிர்க்கும் இதழில் ஏன் எழுதுகிறீர்கள் என்று சில ஹிந்துத்துவ நண்பர்கள் என்னிடம் கேள்வி கேட்டார்கள். என் கருத்தை அவர்கள் திருத்துவதே இல்லை, பின்னர் என்ன பிரச்சினை என்பதே என் பதிலாக இருந்தது.
படைப்புக்கான சன்மானத்தை மிகச் சரியாக அனுப்பும் இதழ் அந்திமழை.
ஜெயமோகன் அந்திமழை இதழை முன்னெப்போதோ தீவிரமாகத் திட்டி எழுதியபோது, நான் அந்திமழை போன்ற இடைநிலை இதழ்களின் அவசியத்தைப் பற்றி எழுதினேன். அதற்கும் இளங்கோவன் நன்றி செலுத்தினார்.
அந்திமழை போன்ற ஓர் இதழ், அதுவும் வண்ண நிறத்தில், நல்ல தரத்தில் எப்படி இத்தனை வருடங்கள் தொடர்ந்து வந்தது என்பதே பெரிய புதிர். ஒவ்வொரு இதழும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சுற்றிப் பின்னப்பட்டதாக இருக்கும். ஒரு வேள்வி போல் இந்த இதழ்ப் பணியைச் செய்தாலன்றி, இதனால் கிடைக்கப் போவது எதுவுமில்லை. மாறாக கெட்ட பெயரும் வந்து சேரும். இத்தனை வருடங்கள் அந்திமழை அதுவும் அழகிய வடிவமைப்பில் நல்ல தரத்தில் கொண்டு வந்ததை ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும். இளங்கோவன் போன்ற ரசிகர் ஒருவரின் பிடிவாதமும் ஆர்வமும் இல்லாவிட்டால் இது சாத்தியமே இல்லை.
இத்தனை சீக்கிரம் நம்மைவிட்டு மறைவார் என்று கனவிலும் நினைக்கவில்லை.
சென்று வாருங்கள் இளங்கோவன். உங்கள் தொடர் பணியை இந்தத் தமிழ் உலகம் மறக்காது. கண்ணீர் அஞ்சலி.