சூர்ப்பனகை

கெ.ஆர்.மீராவின் ‘சூர்ப்பனகை’ சிறுகதைத் தொகுப்பு படித்தேன். எனக்கான தொகுப்பல்ல. இத்தனை வெளிப்படையான பெண்ணியம் எனக்கு ஆகாது. ஒரு கதை நம்மோடு கொள்ளும் ஆத்மார்த்தமான உறவை முடிவு செய்வது அதனுள் இருக்கும் அந்தரங்கமான, ஆர்ப்பாட்டமில்லாத கதையின் போக்குதான். வெளிப்படையாக ஆடம்பரமாக அலட்டலாக அது கதையை மீறும்தோறும் அக்கதை பிரசாரக் கதையாகிறது. இந்த ‘சூர்ப்பனகை’ சிறுகதைத் தொகுப்பு முற்றிலுமாக ஆடம்பரமாக, பிரசாரமாக ஆகிவிடவில்லை. அந்தரங்கமாக அமைதியாகவும் இல்லை. இரண்டுக்கும் இடையே இருக்கிறது.

இத்தொகுப்பில் ‘லி’ என்னும் எழுத்து அச்சாகாமல் ‘-’ என்று அச்சாகி இருக்கிறது. ஒரு பதிப்பகம் பதிப்பிக்கும் புத்தகங்களில் இதுபோன்ற எதிர்பாராத பிழைகள் வந்துகொண்டே இருக்கும். ஒரு பதிப்பாளனாகப் பல சம்பவங்களை இதுபோன்று பார்த்திருக்கிறேன். எனவேதான் எழுத்துப் பிழைகளைப் பற்றி நான் என் விமர்சனங்களில் எழுதுவதே இல்லை. இதைச் சொல்வது வேறொரு காரணத்துக்காக.

எனது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘சாதேவி’ ஆரம் வெளியீடாக வெளிவந்தது. அதில் முதல் கதையில் மட்டும் பி என்ற எழுத்தைக் காணவில்லை. மற்ற கதைகளில் பிரச்சினை இல்லை. திஸ்கி எழுத்துருவில் பழைய எழுத்துரு ஒன்றை வேறொரு எழுத்துக்கு மாற்றும்போது நிகழ்ந்த விபரீதம் இது. முன்பெல்லாம் ‘ஆ’ என்ற எழுத்தில் பிரச்சினை வரும். 2000களில் தமிழ் எழுத வந்தவர்களுக்கு நினைவிருக்கும். ஆபாசமாகப் பேசினான் என்பது பாசமாகப் பேசினான் என்று வந்துவிடும். இதற்காக நான் என்ன செய்வேன் என்றால், ஆ என்ற எழுத்தை மட்டும் %% என்று ரீப்ளேஸ் செய்துவிட்டு, எழுத்துரு மாற்றிவிட்டு, பின்னர் %% என்பதையெல்லாம் ஆ என்று மாற்றுவேன்.

சாதேவி தொகுப்பில் பி என்ற எழுத்து இல்லை, அதற்குப் பதிலாக ப என்று இருப்பதாக ஆனந்த் அழைத்துச் சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனை ப்ரூஃப் பார்த்தும் பி இல்லையா? மை காட்! நான் ப்ரூஃப் பார்த்தது யூனிகோடில். பி சுழித்துக்கொண்டு போனது வேறொரு எழுத்துருவில்.

‘சூர்ப்பனகை’க்கும் இப்படித்தான் ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கவேண்டும். அடுத்த பதிப்பில் சரிசெய்வார்கள்.

அனந்த் என்றதும் நினைவுகள் அவரைச் சுற்றுகின்றன. நான் கிழக்கில் இருந்தபோது மூன்றாவது எம்.டியாகச் சில காலம் வந்தவர் அனந்த். அமெரிக்கவாசி. சார் என்று அழைக்கவே கூடாது, அனந்த் என்றே அழைக்கவேண்டும் என்றார். அனைவரின் புருவங்களும் உயர்ந்தன. எல்லாவற்றிலும் ஓர் அமெரிக்க ஒழுங்கை எதிர்பார்த்தார். அதனாலேயே மறுநாளில் அனைவருக்கும் அவர் பிடிக்காமல் போனார்.

ஆனால் பழக பழகத்தான் தெரிந்தது அவர் மனசுக்குள் ஒரு குழந்தை இருக்கிறது என்று. இதனாலேயே கூட அவருக்குப் பிரச்சினைகள். அவரால் பிறருக்கும்.

நான் கிழக்கில் இருந்து விலகி சுவாசம் தொடங்கியபோது என்னை அழைத்து அத்தனை அன்பாகப் பேசினார். என்ன என்னவோ அறிவுரைகள் சொன்னார். வாட்ஸப்பில் நீள நீள கட்டுரைகளை அனுப்பினார். முதலீடு தொடர்பான லின்க்குகளை அனுப்பினார்.

ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல அவருடனான தொடர்பு குறைந்துபோனது. ஆறேழு மாதங்களுக்கு முன்னர் அவர் உடல்நலம் சரியின்றி இறந்து போன செய்தியைக் கேட்டபோது உண்மையிலேயே வருந்தினேன். இதை எழுதும்போது கூட ஏதோ ஒரு சோகம் பரவத்தான் செய்கிறது. நல்ல மனிதர். தன்னை சரியாக வெளிப்படுத்திக்கொள்ளத் தெரியாத, சில பிடிவாதங்களில் தேங்கிவிட்ட மனிதர்களை எல்லாருக்கும் பிடிக்காது. அப்படி ஒருவர். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

நேரமிருப்பவர்கள் சூர்ப்பனகை சிறுகதைத் தொகுப்பையும், நேரமே இல்லாவிட்டாலும் சாதேவி தொகுப்பையும் வாங்கவும்.

Share

Comments Closed