சங்கரன் அண்ணனின் கடிதம்

சங்கரன் அண்ணனின் கடிதம்

“ஏல… ரத்தம் சுண்டவும்தான் எங்க நினைப்பு வருது என்னல? நானும் உன் வரிசியாரும் இருக்கமா செத்தமான்னு கூட பாக்கல இத்தனை நாளு. ஆனா திடீர்னு எங்க கல்யாண போட்டோவை பெருசாக்கி அனுப்பி வெச்சிருக்க. என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு பாத்தா, ஒன் பொண்ணுக்கு வெளக்கு கல்யாணம் வைக்க போறியாம்லா? ஒன் சிநேகிதன் எல்லாத்தையும் சொல்லிட்டாம்டே. வேலைக்கு மெட்ராஸுக்கு போனவன் எங்க வீட்டுப் பக்கம் திரும்பி கூட பாக்கல. ஆனா இப்ப மட்டும் எங்க உறவு எனக்கு தேவைப்படுது என்னா? அப்ப இத்தனை நாள் ஒன்கிட்ட என் அட்ரஸ் இருந்திருக்கு! எலேய், நான் ஒனக்கு பெரியம்மை மகனா இருக்கலாம். ஆனா நீ பொறந்தப்ப ஒன்னை தூக்கி வளத்தவம்ல நானு. நீ மங்கயர்க்கரசி ஸ்கூலுக்கு எல்கேஜி போனப்போ ஒன்னை மொத நாளு கொண்டு போயி விட்டவம்ல இந்த சங்கரன் அண்ணன். அது சரி, இதெல்லாம் ஒங்கம்மைக்கே ஞாபகம் இல்ல. ஒனக்கு எங்க ஞாபகம் இருக்கப்போது. நல்ல சித்தி நல்ல புள்ளடே! இப்படில்லாம் சொல்றானே, நாளைக்கு நம்ம பொண்ணுக்கு வெளக்கு கல்யாணத்துக்கு வந்து நிப்பானோ மாட்டானோன்னு நினைக்காத. உம் பொண்டாட்டி மாதிரி இல்லடே எம் பொண்டாட்டி. நீ கூப்ட்டா நேர்ல நாம போயி நின்னு நம்ம பொண்ணு ஃபங்சன நடத்திக் கொடுக்கணும்னுட்டா உங்க வரிசியாரு. கேட்டுச்சாடே? மெட்ராஸுக்கு போயிட்டா கொம்பு மொளச்சிராதுடே… நம்மூருக்கு வந்துதான் ஆவணும். அது சரி, சாதி சனம் நெனப்பெல்லாம் பொண்ணு ஒக்காரப் போறாங்கறப்பதான் வருது என்னல? ஆனாலும் என் கல்யாண நாளு வரப் போகுதுன்னு தெரிஞ்சி நீ எப்பவோ எடுத்த போட்டாவ பெருசாக்கி அனுப்பினேல்லா? அது பெரிய விஷயம்தாண்டே. ஒத்துக்கிடுதேன். ஆனா இன்னொனும் சொல்லுதேன்…”

கடிதம் இன்னும் நீண்டுகொண்டே போனது. “சங்கரன் அண்ணன் என்ன எழுதிருக்கான்?” என்று கேட்ட அம்மாவை முறைத்த சுரேஷ் கோபமாகச் சொன்னான், “ரத்தம் சுண்டிட்டுங்கான். எல்லாம் ஒன்னால. எப்பமோ ப்ரிண்ட் போட்டு வெச்ச போட்டோ வீட்டை அடைச்சிக்கிட்டு கிடக்கு, கிழிச்சி தூரப் போடலாம்னு சொன்னேன். கல்யாண போட்டோவை கிழிப்பாவளா அனுப்பி வைன்னு சொன்னியேன்னு அனுப்பினா, அவன் என்னம்லாம் எழுதிருக்கான்னு பாரு” என்றபடி கோபமாகக் கடிதத்தை அம்மாவிடம் நீட்ட, அவள் கேட்டாள், “அவன் இன்னமும் கோட்டிக்காரனாத்தான் அலைதானால?”

Share

Comments Closed