மே அடல் ஹூம்

மே அடல் ஹூம் (H) – அடல் பிஹாரி வாஜ்பாயியின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். முதல் காட்சியில் வாஜ்பாயி போன்ற உடல்மொழியில் பேசும் பங்கஜ் த்ரிபாதி சட்டென்று மனதில் ஒட்டிக்கொள்கிறார். ஒட்டுமொத்த திரைப்படத்தையும் தங்கள் தோள்களில் சுமப்பவர்கள் இருவர், ஒரு வாஜ்பாயி, இன்னொருவர் பங்கஜ் த்ரிபாதி.

பயோ பிக் படங்கள் எடுப்பதில் சிக்கல்கள் அதிகம். அதிலும் வாஜ்பாயி போன்ற நீண்ட நெடும் அரசியல் வாழ்க்கை கொண்டவர்களின் வரலாற்றை எடுப்பது எளிதல்ல. அட்டன்பரோவின் காந்தி அந்த வகையில் ஒரு மைல்கல். காந்தியின் நீண்ட நெடும் போராட்ட வாழ்க்கையை மூன்று மணி நேரத்துக்குள் எடுப்பது, அதிலும் நேர்த்தியாக எடுப்பது, அதிலும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் எடுப்பது என்று எல்லா வகையில் அந்தப் படம் ஒரு சாதனை. அப்படி ஒரு படம் இந்தியாவில் வரவேண்டும் என்றால் அதற்கான உழைப்பும் பணமும் தேவை. மே அடல் ஹூம் படம் அந்த அளவுக்கு வரவில்லை. ஆனால் படம் பார்த்து முடிந்ததும் படத்தைக் குறித்தே மீண்டும் மீண்டும் சிந்தித்துக்கொண்டிருக்கும் ஓர் உணர்வுநிலையை ஏற்படுத்திவிடுகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மே அடல் ஹூம் படத்தைப் பார்த்து வாஜ்பாயியையோ அவரது கால அரசியலையோ இந்திய அரசியலையோ புரிந்துகொள்ள நினைத்தால் பைத்தியம்தான் பிடிக்கும். இது அரசியலைத் தெரிந்துகொள்ள விரும்புவர்களுக்கான படமல்ல. இந்த அரசியல் ஏற்கெனவே பற்றித் தெரிந்தவர்களுக்கான படம். ஒரு வகையில் ஆவணப் படம் போன்றது. அந்த எண்ணத்துடன் இப்படத்தை அணுகுவது நல்லது.

வாஜ்பாயியின் தனிப்பட்ட ஆரம்ப கால வாழ்க்கையிலும், அந்தப் பெண்ணைப் பின்னர் வாஜ்பாயி பார்க்கும் காட்சிகளையும் தேவைக்கு அதிகமாக வைத்திருக்கிறார்கள். இது பெரிய மைனஸ் பாய்ண்ட். இரண்டரை மணி நேர பயோ-பிக்கில் முதல் அரை மணி நேரம் எத்தனை முக்கியமானது? இருவர் திரைப்படம் நினைவுக்கு வருகிறது. தமிழின் முக்கியமான முயற்சி. ஆனால் இந்தப் படத்தில் முதல் அரை மணி நேரக் காட்சி சலிப்பை உண்டாக்குகிறது.

ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஜன சங்கத்தை ஆரம்பிக்கும் காட்சியில் இருந்து படம் வேகமெடுக்கிறது. அதிலும் முக்கியமாக குருஜி கோல்வல்கரிடம் அவர், ‘உங்களிடம் அமைப்பு இருக்கிறது. என்னிடம் கனவு இருக்கிறது’ என்று சொல்லும் காட்சி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்காரர்களுக்கு நிச்சயம் புல்லரிப்பை ஏற்படுத்தும். இப்படிப் பல காட்சிகள் ஆங்காங்கே நன்றாக இருக்கின்றன.

இந்தியாவையே அரசியல் ரீதியாக உலுக்கிய தொடர்ச்சியான அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் நிமிடங்களில் கடந்து போகின்றன. வேறு வழியில்லை.

அத்வானிக்கும் வாஜ்பாயிக்குமான நட்பு நன்றாக வந்திருக்கிறது. ஆனால் அத்வானியாக நடிக்கும் நடிகரின் தேர்வு இன்னும் மெச்சூர்டாக இருந்திருக்கலாம்.

நேருவை மொத்தமாக இரண்டு நிமிடங்கள்தான் காட்டுகிறார்கள் என்றாலும் சிகரத்தில் வைத்துவிட்டார்கள். அதிலும் நேருவின் புகைப்படம் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தே தீரவேண்டும் என்று வாஜ்பாயி சொல்லும் காட்சி முக்கியமானது.

இந்திரா காந்தியை அவரது எண்ணம் போலவே காட்டுகிறார்கள். எமர்ஜென்ஸி முடிந்து, ஜனதா வெற்றி பெற்று, சரண்சிங் உள்ளடி வேலை செய்து, ஜனதா கட்சி ஆட்சியை இழந்த பின்பு நடக்கும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி உதயமாகும் காட்சியும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாஜ்பாயி மனம் இறுகிக் கிடக்க, அவரே எதிர்பார்க்காமல் அவரை பிரதம வேட்பாளராக அத்வானி அறிவிக்கும் காட்சியும் முக்கியமான புல்லரிப்புக் காட்சிகள்.

பொக்ரான் அணுஆயுதச் சோதனை அத்வானிக்கே தெரியாமல் நடந்தது என்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. இது தவறு. எல்.கே.அத்வானி, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் தெரியும். படத்தில் அந்தக் காட்சியின் சுவாரஸ்யத்துக்காக அப்படி வைத்திருக்கிறார்கள் போல. ஆனால் அத்வானி இந்தியாவின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். உள்துறை அமைச்சர். அவருக்குத் தெரியாமல் நடந்திருக்கவே முடியாது.

கார்கில் போர் வெற்றியுடன் திரைப்படம் முடிகிறது. அடுத்த தேர்தலில் வாஜ்பாயி பிரதமராகும் தருணத்துடன் முடித்திருக்கலாம்.

மிஸா கைதில் தமிழகத்தைச் சேர்ந்த யாரையும் காண்பிக்கவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியாக ஜெயலலிதாவின் பெயர் மட்டும் வருகிறது. வாஜ்பாயி நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு வாக்கில் தோற்கக் காரணமாக இருந்தவர். படம் முடிந்து பலரது புகைப்படங்களைக் காண்பிக்கும்போது வாஜ்பாயியும் ஜெயலலிதாவும் இருந்த புகைப்படத்தைக் காண்பித்தார்கள். கருணாநிதியும் வாஜ்பாயியும் கூட்டணியில் இருந்தவர்கள். திரைப்படத்தில் கருணாநிதியின் படம் கண்ணில்பட்டதாக நினைவில்லை.

மிக முக்கியமான விஷயம், மோடியின் புகழ் பாடப்படவில்லை. கவனமாகத் தவித்திருக்கிறார்கள். மோடி என்ற பெயர் கூட இல்லை. வாஜ்பாயியின் கனவு அனைத்தையும் மோடி நிறைவேற்றி இருக்கிறார் என்று பார்வையாளர்களே உணரும் வண்ணம் உள்ளது திரைப்படம்.

வாஜ்பாயி ஒரு கவிஞர் என்பதை நிலைநிறுத்தும் காட்சிகள் தொடக்கம் முதல் இறுதி வரை வந்த வண்ணம் உள்ளன. படத்தின் வேகத்தைக் குறைக்கும் விஷயம் இது. இதையும் வாஜ்பாயியின் இளமைக்கால வாழ்க்கையையும் சுருக்கி இருக்கலாம்.

படத்தின் மேக்கிங், நடிகர்கள் தேர்வு என எல்லாமே சராசரித் தரம்தான். பின்னணி இசை மோசம். ஆனால் பங்கஜ் த்ரிபாதி மட்டும் விதிவிலக்கு. அதிலும் அவரது உடல்மொழி அபாரம். வாஜ்பாயியின் ஆவி புகுந்துகொண்டது போல் நடிக்கிறார். படம் சலிப்பேற்படுத்தும் போதெல்லாம் நம்மைக் கட்டி இழுத்துத் திரைப்படத்துக்குள் கொண்டு வருபவர் பங்கஜ் த்ரிபாதி. இந்த வருடத்தின் சிறந்த நடிகராக தேசிய விருதுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு அதிகம்.

இது அனைவருக்குமான திரைப்படமா என்றால் இல்லை. இந்திய அரசியல் வரலாறு கொஞ்சமாவது தெரிந்தவர்களுக்கான திரைப்படமா என்றால் ஆம். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவினருக்கான திரைப்படமா என்றால், நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம். முக்கியமாகச் சில காட்சிகள் தரும் புல்லரிப்புக்காக.

zee5ல் கிடைக்கிறது.

Share

Comments Closed