பேரமைதி

முதலிரவு அறையில் இருந்து வெட்கத்துடன் முகம் திருத்தி வந்த பவித்ரா காலை குளித்து முடித்து தலைக்குத் துணி கட்டி அனைவருக்கும் பரிமாறத் தயாரான போது மாமியார் சுசிலா சொன்னாள், “ஏன் கொலுசுல இவ்ளோ மணி இருக்கு? கொஞ்சம் கம்மியா வாங்கிப் போட்டுக்கோ.” நடு இரவில் யுவன் பவித்ராவின் வாயைப் பொத்தியபடி உஷ் என்று சொன்னது ஒரு மின்னல் போல பவித்ராவுக்கு நினைவில் தோன்றி மறைந்தது.

யுவன் ஒரு வேலையாக வெளியே கிளம்பியதை ஆச்சரியமாகப் பார்த்த பவித்ரா, “இன்னைக்கே போகணுமா?” என்று கேட்டதும் யுவன், “அதுக்கு ஏன் இவ்ளோ சத்தமா பேசற?” என்றான்.

யுவன் கிளம்பிப் போனதும் வீடே நிசப்தமாக இருந்தது. டிவி ஓடிக்கொண்டிருந்தாலும் பவித்ராவின் மாமியார் ப்ளூ டூத்தில் அதை இணைத்திருந்தாள். எங்கேயும் எந்த ஒலியும் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் மொபைலை நோண்டிக்கொண்டிருந்த பவித்ராவின் போன் திடீரென சத்தமாக ஒலிக்கவும், காதில் இருக்கும் ப்ளூ டூத்தைக் கழட்டிய பவித்ராவின் மாமியார், “வைப்ரேஷன்ல வெச்சிக்கோ” என்று சொல்லிவிட்டு மீண்டும் ப்ளூடூத்தை மாட்டிக்கொண்டாள். பவித்ரா போனை கட் செய்தாள்.

மாமியார் ஒரு திரைப்படம் பார்த்து முடித்திருந்தாள். நேரம் போகாமல் தவித்துக்கொண்டிருந்த பவித்ரா, எப்போது யுவன் வருவான் என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே நல்லவேளையாக யுவன் வந்துவிட்டான். சந்தோஷமாக ஓடிப் போன பவித்ராவைப் பார்த்த யுவன் என்ன என்பது போல், “ம்?” என்று மிகக் குறைவான ஒலியில் முகத்தில் கூடிய ஒரு பரபரப்புடன் சைகையுடன் கேட்கவும், பவித்ரா தன்னை உணர்ந்து அமைதியாக நடந்து போய் யுவன் முன்னால் நின்று என்ன சொல்வது என்று தெரியாமல், “சாப்பிடலாமா?” என்று கேட்க, யுவன், “ம்” என்றான்.

அனைவரும் சாப்பிட்டார்கள். ஏதோ ஒரு ஞாபகத்தில் பவித்ரா டம்ப்ளரைக் கொஞ்சம் வேகமாக வைக்கவும் யுவனின் முகம் ஒரு நொடி மாறி மீண்டும் சாதாரணமாக, பவித்ரா ஸாரி என்பது போல் புன்னகைத்தாள். பதிலுக்கு யாரும் சிரிக்கவில்லை என்பதையும் பவித்ரா கவனித்தாள்.

யுவனும் அவனது அம்மாவும் சாப்பிட்டபோது ஒரு சின்ன சத்தம் கூட இல்லை. கரண்டியால் குழம்பை எடுக்கும் சத்தமோ, பொறியல் பொறுக்கைச் சுரண்டி எடுக்கும் சத்தமோ, உணவை மெல்லும் சத்தமோ எதுவுமே இல்லை. தான் சாப்பிடும் சத்தம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக பவித்ரா கிட்டத்தட்ட அப்படியே விழுங்கினாள். கரண்டிக்கும் பாத்திரத்துக்கும் கூட வலிக்கும் என்றபடி மிக மென்மையாகப் பரிமாறிக் கொண்டார்கள். சாப்பிட்டபடியே பவித்ரா சாதாரணமாக, “சாம்பார் சூப்பரா இருக்குல்ல.. உனக்கு பிடிச்சிருக்கா?” என்று கேட்டதற்கு யுவன் பதில் சொல்லவில்லை.

சாப்பிட்டு முடித்ததும் யுவன் சத்தமின்றிக் கை கழுவினான். கிட்டத்தட்ட சத்தமே இல்லாமல் வாய் கொப்பளித்தான். தன்னால் அப்படிக் கொப்பளிக்க முடியுமா என்ற சந்தேகம் பவித்ராவுக்கு வரவும் அவள் வாய் கொப்பளிக்காமலேயே விட்டுவிட்டாள்.

யுவன் மாடியேறிப் போகவும் பின்னாலேயே பவித்ராவும் போனாள். அறைக்குள் நுழைந்ததும் பவித்ரா யுவனைக் கட்டிக்கொண்டு, “ரொம்ப போர் அடிக்குது” என்று சொல்லும்போதே யுவன் சொன்னான், “சாப்பிடும்போது மெல்ல பேசு.” தான் பேசவே இல்லையே என்று நினைத்துக்கொண்டிருந்த பவித்ராவின் போன் வைப்ரேட் ஆகவும் பவித்ரா யுவனிடம், “அம்மா கூப்பிடறாங்க… ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு, போனுடன் மொட்டை மாடிக்குப் போனாள். போனை எடுத்ததும், “அம்மா… நல்லா இருக்கியா” என்றாள். அம்மா, “சத்தமாத்தான் பேசேண்டி… ஏதோ கிணத்துக்குள்ள இருந்து பேசற மாதிரி இருக்கு. நல்லா இருக்கேல்ல? மாப்ளை நல்லா பாத்துக்குறார்ல?” என்றாள்.

அம்மாவின் குரலுக்குப் பின்னால் தன் வீட்டுச் சத்தம் பவித்ராவுக்குக் கேட்டது. என்னென்னவோ சத்தங்கள். ஒவ்வொரு சத்தத்தையும் உற்றுக் கேட்டாள் பவித்ரா. “லைன்ல இருக்கியாடீ” என்று பவித்ராவின் அம்மா கேட்டதற்கு, “கொஞ்ச நேரம் பேசாம லைன்லயே இரும்மா” என்றவள் தன் வீட்டுச் சத்தத்தைக் கூர்ந்து கேட்டாள். “என்னடீ?” என்று கேட்ட அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் போனை கட் செய்துவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, வாய் விட்டுச் சத்தமாக அம்மா அம்மா அம்மா என்று நான்கைந்து முறை கத்தினாள். பின்னர் சத்தமே இல்லாமல் நடந்து வந்து, சத்தமே இல்லாமல் தன் அறைக்கதவைத் திறந்து, சத்தமின்றி யுவன் அருகே அமர்ந்துகொண்டாள்.

Share

Comments Closed