புதுத்துணி

புதுத்துணி

மகள் எப்போது உக்காருவாள் என்று புவனாவிடம் கேட்காத ஆளே இல்லை. தன் மகள் சீக்கிரமே பெரியவளாகிவிடுவாள் என்று அத்தனையையும் திட்டமிட்டுத் தயாராக இருந்தாள் புவனா. மகள் பெரியவளானதும் என்ன செய்ய வேண்டும், எங்கே மனை போட்டு புதுத்துணி கொடுத்து அவளை உட்கார வைக்கவேண்டும், சாப்பிட என்னவெல்லாம் செய்து தரவேண்டும் என்று புவனா கேட்காத ஆளே இல்லை. ஆளுக்கொன்று சொன்னார்கள். ஹுக்கி எனப்படும் பொங்கல் செய்து தரவேண்டும் என்று ஒருவர், சிகிலி எனப்படும் எள்ளுருண்டை செய்துதரச் சொல்லி இன்னொருவர் என அனைத்தையும் பொறுப்பாகக் குறித்து வைத்துக்கொண்டாள்.

லக்ஷ்மி மாமி ஒரு விஷயத்தைச் சொன்னபோதுதான் அதைப் பற்றி நாம் யோசிக்கவே இல்லையே என்று புவனாவுக்குத் தோன்றியது. பெரியவளானதும் பார்த்து உறுதி செய்ய அம்மா போகக் கூடாது என்றாள் லக்ஷ்மி மாமி. “ஸ்கூல்ல இருக்கும்போதுன்னா ஆயா பாப்பா, வீட்ல இருந்தா வேற யாரையாவது பாக்கச் சொல்லுடீ” என்றாள். அம்மா பார்த்தால் ஆகாதாம். புவனா சரி மாமி என்றாள். மாமி இன்னொரு விஷயமும் சொன்னாள், “அப்படி பாத்து சொல்றவங்களுக்கு புதுத்துணி வாங்கித் தர்றது ஒரு ஐதீகம்.”

புவனா உடனே முடிவெடுத்தாள். தன் ஆசை மகள் பெரியவளாகப் போவதைப் பார்த்துச் சொல்பவளுக்கு பட்டுப் புடவை வாங்கித் தரவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். இது ஒரு கொடுப்பினை என்றாள். புவனாவின் கணவன், ‘இதற்கெல்லாம் பட்டுச் சேலையா’ என்று அலுத்துக்கொண்டதை புவனா காதில் போட்டுக்கொள்ளவில்லை. அன்றே மிக நல்ல பட்டுப்புடவை ஒன்றை வாங்கியும் வைத்தாள். இந்தப் புடவை வந்த நேரம் சீக்கிரமே தன் மகள் பெரியவாளாவாள் என்று அவளுக்குத் தோன்றியது.

ஆனால் புவனாவின் மகள் எப்போதும் போல சாக்லெட் சாப்பிட்டுக்கொண்டு, ஊரெல்லாம் சைக்கிள் ஓட்டிக்கொண்டு, வீட்டுப்பாடம் செய்யாமல் புவனாவிடம் அடி வாங்கிக்கொண்டு, டிவியில் கேட் நிஞ்சா பார்த்துக்கொண்டு ஜாலியாக இருந்தாள். அவள் ஒரே சமயத்தில் மிகச் சிறிய பெண்ணாகவும், எப்போது வேண்டுமானாலும் குதிரப் போகும் பெண்ணாகவும் புவனாவின் கண்ணுக்குத் தெரிந்தாள்.

இப்போது அப்போது என்று எதிர்பார்த்த நாளெல்லாம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. “பதினாலு வயசுதான் ஆகுது, அதுக்குள்ள ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?” என்று புவனாவின் கணவன் சொன்னதை யாருமே கண்டுகொள்ளவில்லை.

ஊரெல்லாம் பெரு மழை பெய்தபோது தன் மகள் உட்கார்ந்தாள் என்ன செய்வது என்று புவனா யோசித்துக்கொண்டிருந்தபோது, வாசலில் பெரிய சத்தம் கேட்டது. வாசலுக்கு வந்த புவனாவைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரி திட்டு திட்டென்று திட்டினாள். மழைக்காலம் வந்தாலே இந்தப் பிரச்சினைதான். புவனா வீட்டுக் கழிவு நீர்த் தொட்டி நிரம்பி, வாசலில் நீர் ஓடும். எத்தனை சரி செய்து இந்தப் பிரச்சினை தீரவில்லை. இந்தத் திட்டுகளையெல்லாம் புவனா காதில் போட்டுக்கொள்ளாமலேயே சமாளித்துக் கொண்டிருந்தாள். வழக்கம்போல் பக்கத்து வீட்டுக்காரி புவனாவைக் காறித் துப்பிவிட்டுப் போனாள். மழைக்காலத்துல தண்ணி ரொம்பினா நாங்க என்ன பண்றது என்ற ரீதியில் இந்த முறையும் புவனா சமாளித்தாள்.

மழைக்காலம் முடிந்து வெயில் காலம் வந்து, சாலை நீரெல்லாம் வடிந்து காய்ந்து தெருவே பளிச்சென்று இருந்த நாளில், புவனாவின் மகள் அதே சாக்லெட்டைச் சாப்பிட்டுக்கொண்டு சைக்கிளில் சுற்றிக்கொண்டிருந்தாள். புவனா ஆசை ஆசையாக வாங்கி வைத்த பட்டுப் புடவை அவள் கண்ணில் பட்டது. ஏன் இவள் இன்னும் பெரியவளாகவில்லை? நான் பன்னிரண்டு வயதில் பெரியவளானேனே? இவளுக்கு பதினாலு ஆகப் போகிறதே! யோசனையில் இருந்த புவனாவுக்கு ஒரு போன் வந்தது. புவனாவின் தங்கை அழைத்து, “ஏன் உம் பொண்ணு பெரியவாளாவான்னு காத்துக்கிட்டு இருந்தா, என் பொண்ணு பெரியவளாயிட்டாடீ! நாலாவது நாள் தலைக்கு தண்ணி ஊத்தறோம், கிளம்பி வா” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள். புவனாவுக்கு கொஞ்சம் சந்தோஷமாகவும் நிறைய அதிர்ச்சியாகவும் இருந்தது. ஐந்தாவது படிக்கும் அவளே பெரியவளாகிவிட்டாளா?

புவனா தன் மகளை விட்டுவிட்டு தான் மட்டும் ஊருக்குப் போனாள். தன் மகளைப் பார்த்தால் நிச்சயம் அவளிடம் எல்லாரும் ‘எப்படீ உக்காரப் போற?’ என்று கேட்பார்கள் என்பதற்காகவே அவள் தன் மகளை அழைத்துச் செல்லவில்லை.

தன் தங்கை வீட்டுக்குள் புவனா காலை வைக்கவும் பக்கத்து வீட்டுக்காரி போன் செய்தாள். இவள் எதுக்கு போன் செய்கிறாள் என்ற யோசனையில் புவனா போனை எடுத்ததும், புவனா பேசுவதற்குள் அவள் திட்ட ஆரம்பித்தாள். ஒரு பாட்டம் திட்டி முடித்துவிட்டு, “வெயில் காலத்துலயும் உங்க வீட்டு கக்கூஸ் தண்ணி ரோடெல்லாம் ஓடுது… இப்பவே வந்து நீங்க சரி பண்ணனும். இல்லைன்னா கார்ப்பரேஷன்ல சொல்லிருவேன்” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டாள். புவனா எரிச்சலில் மனதுக்குள் பக்கத்து வீட்டுக்காரியைத் திட்டியபடி தன் தங்கை மகளைக் கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்தாள்.

அங்குமிங்கும் பம்பரமாகச் சுற்றி அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய ஆரம்பித்த புவனாவின் போன் ஒலித்தது. மீண்டும் பக்கத்து வீட்டுக்காரியிடம் இருந்து போன். புவனா கோபமாக அவளிடம், “என்ன வேணும் உங்களுக்கு?” என்று சொல்லும்போதே அவள் சொன்னாள், “உம் பொண்ணு பெரியவளாயிட்டாம்மா! உங்க வீட்டுக்காரரு ஆஃபிஸுக்கு போயிருக்காராம். இப்ப எங்க வீட்லதான் இருக்கா. உடனே வா” என்று சொன்னாள்.

அடித்துப் பிடித்து புவனா கிளம்பி வந்து, வீடெல்லாம் அமளிதுமளியாக, மகளுக்கு ஹுக்கி கொடுத்து, அனைவருக்கும் தகவல் சொல்லி, நான்காம் நாள் சொந்தக்காரர்கள் எல்லாம் வந்து இறங்க, அனைவரும் சேர்ந்து புவனாவின் மகளுக்குத் தண்ணீர் ஊற்றி, புதுத்துணி கொடுத்து வீட்டுக்குள் கூட்டிவந்தாள். சொந்தக்காரர்கள் எல்லாம் போன உடன் புவனா பக்கத்து வீட்டுக்குப் போய் அவளைத் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்துவிட்டு வந்தாள்.

அவள் வரவும் புவனா அவள் கையை அன்பாகப் பற்றிக்கொண்டு, “பெரியவளானதை பாத்து சொல்றவங்களுக்கு புதுத்துணி தரணும்மா.. எங்க பக்கத்து வழக்கம். உங்களுக்கும் தர்றேன். சந்தோஷமா தர்றேன். நமக்குள்ள ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் மனசுல வெச்சிக்காம எம் பொண்ணை உங்க வீட்ல வெச்சிக்கிட்டீங்களே…” என்று சொன்னவள், தன் அறைக்குள் போய் புடவையை எடுத்துக்கொண்டு வந்து, தாம்பாளத் தட்டில் வைத்துக் கொடுத்தாள். அவர்கள் ‘இப்படில்லாம் ஒரு பழக்கம் இருக்கு பாரேன்’ என்று சந்தோஷமாக வாங்கிக்கொண்டு போனார்கள்.

புவனாவின் கணவன் புவனாவிடம், “பட்டுப் புடவை வாங்கி வெச்ச.. இப்ப இந்த சாதா புடவையைக் கொடுத்துருக்க” என்று கேட்டதை எப்போதும் போல் காதில் வாங்கிக் கொள்ளக் கூடாது என்று நினைத்த புவனா அவளை மீறிச் சொன்னாள், “சாஸ்திரம்தான? பட்டுப்புடவையே கொடுக்கணும்னா இருக்கு? இவளுக்கெல்லாம் இது போதும். பட்டுப் புடவை எனக்கு இருக்கட்டும்.”

Share

Comments Closed