Nitish Kumar’s obscene remark

பத்திரிகைகளின் லட்சணம். நிதிஷ்குமார் சட்டசபையில் பேசும்போது அநாகரிகமாகப் பேசினார் என்று இரண்டு நாள் அமளிதுமளி. அவர் என்ன பேசினார் என்று நானும் பல ஆங்கில நாளிதழ்களிலும் சில தமிழ் நாளிதழ்களிலும் தேடிப் பார்த்தேன். அந்தப் பத்திரிகைகள் எழுதி இருப்பதைப் பார்த்தால், நிதிஷ்குமார் நியாயமாகப் பேசி இருப்பது போலத்தான் தோன்றியது. பெண்களுக்குக் கல்வி அறிவு இருப்பது குழந்தைகள் பிறப்பைக் குறைக்கும் என்று தங்கமுலாம் பூசி எழுதி இருந்தார்கள். இது சரிதானே, ஏன் இதற்கு நிதிஷ்குமார் மேல் பாய்கிறார்கள் என்று தோன்றினாலும், இந்தப் பத்திரிகைகளை நம்பமுடியாது என்றும் தோன்றிக்கொண்டே இருந்தது.

நேற்று யாரோ ஒருவர் ஃபேஸ்புக்கில் நிதிஷின் வீடியோவை தமிழாக்கம் செய்து வெளியிட்டிருந்தார். பேரதிர்ச்சி. எப்படி இப்படி நிதிஷால் சட்டசபையில் பேச முடிந்தது என்பது அதிர்ச்சியாக இருந்தது. பத்திரிகைகள் நிதிஷ் உண்மையாகப் பேசியதைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.

ஒருவேளை இந்த ஃபேஸ்புக் மொழியாக்கம் தவறாக இருக்குமோ என்ற சந்தேகமும் வந்தது. எத்தனை தேடிப் பார்த்தும் நிதிஷ் பேசியதன் சரியான மொழிபெயர்ப்பை யாரும் வெளியிட்டிருக்கவில்லை. பிடிஐ, ஏஎன்ஐ அனைத்தும் செய்தியாகச் சொல்லி இருப்பது, ‘கல்வி எப்படி பெண்ணுக்குக் குடும்பக் கட்டுப்பாட்டைச் சொல்லித் தருகிறது என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிதிஷ்’ என்பதுதான்.

இன்ஷார்ட்ஸ் செய்தியோடையில் மட்டுமே நிதிஷ் பேசியதை ஒரு வார்த்தையில் சரியாகப் போட்டிருக்கிறார்கள். அதிலும், அந்த செய்தியோடையின் மூலச் செய்தியைப் பார்த்தால், எங்கேயும் நிதிஷ் பேசியதன் சரியான மொழிபெயர்ப்பு இல்லவே இல்லை. இப்படிப்பட்ட பத்திரிகைகளை வைத்துக்கொண்டு நாம் இந்தியா முழுக்க நடக்கும் செய்திகளை அறிந்துகொண்டால் என்னாகும் என யோசித்துப் பாருங்கள்.

Share

Comments Closed