துபாய் பாபா

பாபா 2002 ஆகஸ்ட் 15ல் இந்தியாவில் வெளியானது. அந்த மே மாதத்தில் நான் துபாயில் இருந்து இந்தியாவுக்கு விடுமுறைக்கு வந்திருந்தேன். பாபா பாடல்கள் வெளியானதும் பாபாவின் பாடல்களை மனப்பாடம் ஆகும் அளவுக்குக் கேட்டேன். அப்போதுதான் எனக்கு ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் மாதிரி செய்து வைத்திருந்தார்கள். அங்கே இருந்த ஐம்பது நாள்களும் ஒரு நாள் விடாமல் அவளுடதான் ஊர் சுற்றல். மீண்டும் துபாய் திரும்ப வேண்டும். திருவனந்தபுரம் விமான நிலையத்துக்குக் காரில் போனோம். ரிபீட் மோடில் பாபா பாடல்கள். மாயா மாயா பாடலும், பாபா ஒரு கிச்சு தா பாடலும் ராஜ்யமா பாடலும் எனக்கு மிகவும் பிடித்துப் போயின.

துபாயில் ஆகஸ்ட் 22 வாக்கில்தான் பாபா வெளியானது. திருவோணத்துக்கு. முதல் நாள் முதல் ஷோ பார்க்க வாய்ப்பில்லை. வேலைக்குப் போயாக வேண்டும். மாலைக் காட்சிக்குப் போக வேண்டும் என்றால் கொஞ்சம் சீக்கிரமே கிளம்பினால்தான் டிக்கட் கிடைக்கும். எப்போதும் என்னுடன் படம் பார்க்க வரும் மலையாளி நண்பன் சந்தோஷ் திருவோணம் என்பதால் படத்துக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டான். எப்படியாவது சரியான நேரத்துக்குப் போகவேண்டும், டிக்கட் கிடைக்கவேண்டும் என்கிற என் பரிதவிப்பைப் பார்த்த டாக்டர் கருண் (தமிழர்) என்னை சரியான நேரத்தில் அவரது காரிலேயே தியேட்டரில் டிராப் செய்வதாக வாக்களித்தார். செய்யவும் செய்தார்.

டிக்கட் கிடைத்தது. படம் பார்க்க தியேட்டருக்குள் நுழைந்தால் பாதிக்கு மேல் மலையாளிகள். திருவோணம் என்பதால் கொண்டாட்டத்திற்கு வேறு படங்கள் இல்லை என்பதால் இப்படத்துக்கு வந்ததாகப் புலம்பினார்கள் சிலர். படத்தில் சினிமா சினிமா பாடலுக்கு தியேட்டரே அதிர்ந்தது. பல மலையாளிகள் எரிச்சலுடன் அமர்ந்திருந்தார்கள். நான் இந்தியாவில் வாழ முடியாத ஏக்கத்தை இந்தப் படத்தில் வந்த கை தட்டல்கள் கொஞ்சம் குறைத்தன. எங்கேயோ ரத்னா அல்லது பார்வதி தியேட்டரில் பார்க்கும் ஒரு உணர்வு. இப்போது நினைத்தாலும் இந்த நினைவு ஒரு சுக அனுபவம்தான்.

இடைவேளை வரை படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இடைவேளைக்குப் பிறகு அலை பாய்ந்தது. படம் முடிந்து போகும்போது பல இஸ்லாமியர்கள் மிகவும் ஆச்சரியமாக, இத்தனை மாய தந்திரம் உள்ள ஒரு படத்தை எப்படி வளைகுடாவில் அனுமதித்தார்கள் என்று பேசியபடி போனார்கள்.

படம் ஓடவில்லை. இந்தியாவிலும் ஃப்ளாப் என்றே நண்பர்கள் சொன்னார்கள். இருக்கலாம். பாபாவில் ரஜினியின் கெட்டப் பலருக்குப் பிடிக்காது. எனக்குப் பிடித்திருந்தது. பாடல்கள் பலருக்குப் பிடிக்கவில்லை, எனக்குப் பிடித்திருந்தது. முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை முன்னேறியது போலத் தோன்றியது இந்தப் படத்தில்தான். காதலி எல்லாம் தேவையில்லை என்று ரஜினி நடித்தது அந்த நேரத்தில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இடைவேளைக்குப் பிறகு வந்த தந்த்ரா காட்சிகளில் இயக்குநர் செய்த பெரிய தவறு, ரஜினி படம்னா என்ன வேணா பாப்பாங்க என்கிற திமிர்தான். ஓம்புரியை ஹிந்தியில் பேச விட்டு அதற்குத் தமிழில் வசனம் பேசி டப்பிங் தெலுங்கு படம் போல ஆக்கி இருந்தார்கள். ஆனாலும் ஒரு நாஸ்டாஜியாவாக துபாய் பாபா எப்போதும் எனக்கு மணக்கத்தான் செய்கிறது. கூடவே, பேசி வைத்த பெண்ணுடன் ஊர் சுற்றிய நினைவுகளும்.

பின்குறிப்பு: இதில் இன்னொரு வரலாற்றுக் குறிப்பும் இருக்கிறது. பாபா திரைப்படம் வருவதற்கு முன்பே இதில் வரும் அசாத்திய ஜாதகம் சம்பந்தப்பட்ட ஒரு கதையை நான் என் கைப்பட அப்போதைய டைரி ஒன்றில் எழுதி இருந்தேன். இதைப் பற்றி நான் மரத்தடி யாஹூ குழுமத்தில் சொன்ன போது, செகண்ட் ஷோ பாத்துட்டு தூக்க கலக்கத்துல அதையே நீ எழுதி வெச்சிருப்ப என்று கேஸை முடித்து வைத்துவிட்டார்கள்!

Share

Comments Closed