சென்னைப் புத்தகக் கண்காட்சி பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியாக மாறி இருப்பது மிகவும் முக்கியமான முன்னெடுப்பு. இதைச் செய்த அரசுக்கும் ஆர்வலர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும்.
டெல்லி புத்தகக் கண்காட்சியில் பெரும்பாலும் பிசினஸ் டூ பிசினஸ் என்பதாகவே விற்பனை இருக்கும். அதில் இப்படி காப்புரிமை வாங்கி பல மொழிகளில் மொழிபெயர்க்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டே இருக்கும். இன்றைய பதிப்புலகம் எப்படி இருக்கிறது என்பது தொடர்பான விவாதங்களும் கருத்தரங்கங்களும் நடந்துகொண்டே இருக்கும். பல மொழிகளைச் சேர்ந்த பல முன்னணி பதிப்பாளர்கள் பேசுவார்கள். அதிலிருந்து ஓர் ஒட்டுமொத்தச் சித்திரம் கிடைக்கும்.
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இதை இந்த ஆண்டுதான் தொடங்கி இருக்கிறார்கள். எதிர்வரும் ஆண்டுகளில் இவையெல்லாம் இன்னும் சிறப்பாக நடைபெறும் என்று நம்புகிறேன். அப்போது நம் பதிப்புலகம் சார்ந்த இந்திய மற்றும் உலக அளவிலான பார்வை விரிவு பெறும். இது சென்னைக்கு எப்போதோ நிகழ்ந்திருக்க வேண்டும். சரி, இப்போதாவது தொடங்கி இருக்கிறதே என மகிழ்ச்சியடையலாம். அரங்கு அனைவருக்கும் ஒதுக்குவதில் இருந்து, அரங்கைப் பதிப்பகங்கள் தங்கள் வசதிப்படி அமைத்துக் கொள்ளலாம் என்பது வரை இந்தப் பார்வை விரிவடைய வேண்டும்.
இந்தியப் புத்தகக் கண்காட்சிகளில் பிஸினஸ் டூ கஸ்டமர் எனப்படும் வியாபாரத்தில், எனக்குத் தெரிந்து சென்னை முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கும் என நினைக்கிறேன். சென்னையில் புத்தகக் கண்காட்சிக்குத் திரளும் மக்கள் வெள்ளம் நிஜமான ஒரு சாதனை. 40 வருடங்களுக்கும் மேலாக இதை வளர்த்திருக்கிறார்கள். இந்நேரம் இது உலகப் புத்தகக் கண்காட்சியாகவும் முதலிடத்துக்கு வந்திருக்கவேண்டும். நம் விரிவான பார்வைக் குறைபாட்டால் இதை இத்தனை நாள் தவற விட்டிருக்கிறோம்.
இன்று பல பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்கள் பல மொழிகளுக்கும் செல்வதையும், பல மொழிகளில் இருந்து தமிழுக்குப் புத்தகங்கள் வருவதையும் குறிப்பிட்டுப் பதிவிட்டு மகிழ்கிறார்கள். எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் இதில் முக்கியமான ஒரு விஷயம் ஒன்று இருக்கிறது. இன்றைய மகிழ்ச்சி என்பது, ஒரு தொடக்கத்தின் மகிழ்ச்சி மட்டுமே. பல படிகள் தாண்டியே ஒரு புத்தகம் இன்னொரு மொழியில் வெளி வரும். ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும் புத்தகங்கள் கொண்டு வந்து நாம் பழகிவிட்டோம். எனவே அதே போல் எல்லா மொழிகளிலும் வந்துவிடும் என்று எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. பெரிய வேலை இது. 1700 ஒப்பந்தங்கள் போடப்பட்டால் அதில் 100 புத்தகங்கள் ஆங்கிலம் அல்லாத வேற்று மொழியில் வந்துவிட்டாலே அது சாதனைதான்.
எனவே ஒப்பந்த மகிழ்ச்சியோடு நின்றுவிடாமல், அதைத் தொடர்ந்து செயல்படுத்திக் காண்பிப்பதில்தான் வெற்றி இருக்கிறது. பிற மொழிகளில் வரும்வரை தொடர்ந்து ஊக்கத்துடன் செயல்பட சக பதிப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.