சென்னைப் புத்தகக் கண்காட்சி 2023

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2023

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நான்கு நாள்கள் இருந்ததில் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. இவை அனைத்தும் என் தனிப்பட்ட புரிதல்கள். உங்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

* பிரிண்ட் ஆன் டிமாண்ட் தொழில்நுட்பம் புத்தகத் தொழிலைப் புரட்டிப் போட்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும். நன்மைகளும் உள்ளன, பாதகங்களும் உள்ளன. பெரிய பதிப்பகங்களைப் பொறுத்தவரை இந்த பிஓடி ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் போடவேண்டிய முதலீட்டைக் குறைத்திருக்கிறது. பெரிய அளவிலான புத்தகத் தேக்கமே இல்லை என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது.

* சிறிய பதிப்பகங்களைப் பொறுத்தவரை நினைத்த நேரத்தில் அடித்துக்கொள்ளலாம் என்ற ஆசுவாசத்தைக் கொண்டு வந்திருக்கிறது. பிஓடி அதன் உச்சத்தில் இருக்கிறது.

* இன்று ஒருவர் பிஓடி அச்சகத் தொழிலைத் தொடங்கி மார்க்கெட்டில் நிலவுவதைவிடக் கொஞ்சம் குறைவாகக் கொடுத்தாலும் போதும், பெரிய அளவில் வெற்றி பெறலாம். புத்தக அச்சுக்கு பிஓடி அத்தனை தேவையானதாக மாறி இருக்கிறது. பெரிய தேவை, ஆனால் நிறைவேற்றித் தர குறைவான பிஓடி அச்சகங்கள் என்ற நிலை நிலவுகிறது.

* பிஓடி தொழில்நுட்பத்தால் எந்த ஒரு எழுத்தாளரும் தன் புத்தகத்தைப் பதிப்பிக்க முடிகிறது. இதன் பாதகம் என்று பார்த்தால், குவிந்து கிடக்கும் புத்தகங்களில் யார் எந்தப் புத்தகத்தைப் பதிப்பித்தது என்று நினைவில் வைக்க முடிவதில்லை. எந்த எழுத்தாளர் எழுதியது என்பதையும் நினைவுக்குக் கொண்டு வரமுடிவதில்லை. ஒரு பதிப்பாளர் மூலம் வரும்போது இந்தச் சிக்கல் குறைவாக இருந்தது.

* இதனாலேயே இன்று ஒரு பதிப்பாளரை விட ஒரு விற்பனையாளர் முக்கியத்துவம் பெறும் சூழல் உருவாகிறது. ஒரு பதிப்பாளருக்குத் தெரிந்திருக்கும் ஒரு புத்தகத்தைவிட ஒரு விற்பனையாளருக்கு அதைப் பற்றித் தெரிந்திருக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

* ஒப்பீட்டளவில், கொரோனாவுக்கு முன்பிருந்த விற்பனை இந்தப் புத்தகக் கண்காட்சியில் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை. என்னிடம் பேசிய அனைத்துப் பதிப்பாளர்களும் இதை ஒப்புக்கொண்டார்கள். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். புத்தகங்கள் பரவலாகப் பல பதிப்பகங்கள் மற்றும் எழுத்தாளர்களில் சுய உருவாக்கம் மூலம் வருவதால் விற்பனையும் பிரிந்து போயிருக்கலாம். ஆன்லைன் மூலம் வாங்குவது அதிகரித்திருப்பதாலும் இருக்கலாம்.

* தொடர்ச்சியாக 16 நாள்கள் புத்தகக் கண்காட்சி என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அலுப்பைத் தரும் விஷயம் இது. ஒவ்வொரு முறையும் 11 நாள்கள் போதும் என்று பேசினாலும், புத்தகக் கண்காட்சி நடத்தும்போது 16 நாள்களில் வந்து முடிந்துவிடுகிறது. இன்னொரு கோணத்தில் யோசித்தால், இந்த நாள்களில் இத்தனை விற்பனை கூட சாதாரணமாக ஒரு கடையிலோ அல்லது பதிப்பகத்திலோ இருப்பதில்லை என்பதால், 16 நாள்கள் இருந்துவிட்டுப் போகட்டும் என்றும் சொல்லலாம்.

* பொங்கலை ஒட்டிய சனி ஞாயிறுகளில், பொங்கல் அல்லாத சனி ஞாயிறு அளவுக்குக் கூட்டம் இருக்காது. இந்த முறையும் அப்படியே. பலர் ஊருக்குப் போயிருப்பார்கள். எனவே அடுத்த சனி ஞாயிறு இரண்டு நாள்கள் புத்தகக் கண்காட்சியின் ஒட்டுமொத்த விற்பனையை இறுதி செய்யும் நாள்களாக இருக்கும் வாய்ப்பு அதிகம். எனவே பதிப்பாளர்களின் விற்பனை குறித்த கருத்து இறுதி வடிவம் பெறுவது, எதிர்வரும் சனி ஞாயிறு விற்பனையைப் பொறுத்தே அமையும்.

* நடிகர்கள் மட்டுமே செலிபிரிட்டி என்கிற நிலை மாறி, யூ ட்யூப் சானல்களில் வருபவர்களும் செலிபிரிட்டியாகி இருக்கிறார்கள். மக்கள் இவர்களுடன் ஆர்வமாக நின்று செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள்.

* சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு மெனக்கெட்டு வந்து மக்கள் புத்தகங்களை வாங்கக் குவிவது எனக்கு எப்போதுமே ஆச்சரியமான ஒன்றுதான். புத்தகம் வாங்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. எப்படியும் நமக்குத் தெரிந்த அல்லது நாம் முடிவுசெய்துவிட்ட புத்தகங்களைத்தான் வாங்கப் போகிறோம். இருந்தாலும் மக்கள் இத்தனை வெயிலில், இத்தனை வியர்வைக்கிடையில் புத்தகம் வாங்க வருகிறார்கள். இந்த வகையில் சென்னைப் புத்தகக் கண்காட்சி ஒரு மாபெரும் சாதனைதான்.

* பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நல்ல முயற்சி இது. சரியாகத் திட்டமிட்டால் பத்து வருடங்களுக்குள் இது மாபெரும் சாதனையாக மாறும் வாய்ப்பிருக்கிறது. இந்த மூன்று நாள்களோடு இந்தப் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியை மறந்துவிடாமல், தொடர்ந்து இதைப் பற்றி யோசித்து, செயலாற்றி வருவதும் முக்கியம். நீண்ட கால நோக்கில் பதிப்பாளர்கள் பலருக்கு இது பயனுள்ளதாக அமையும்.

Share

Comments Closed