உழவன் மகன் திரைப்படம் பார்த்த அன்பவம் பற்றி கணேஷ் பாலா அவரது நினைவுகளைச் சொல்லி இருந்தார். நானும் இதைப் பற்றி எழுதவேண்டும் என்று நிறைய நாள்களாகவே நினைத்திருந்தேன்.
1987வாக்கில், கல்லுப்பட்டியில் இருந்த ஒரு தாத்தா நீண்ட நாள் இழுத்துக்கொண்டிருந்து ஒருநாள் செத்துப் போனார். அதைத் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. எப்படி? ஒரே கொண்டாட்டமாக! பாட்டும் வெடியும் அமர்க்களப்பட்டன. அவரது காரியம் நடக்கும் 16ம் நாள் இரவில் டெக் எடுத்து ஸ்பீக்கர் வைத்து மூன்று திரைப்படங்கள் போடப் போவதாக ஊரெல்லாம் பேச்சு. அந்த நாள் வருவதற்காகக் காத்திருந்தோம்.
அந்த நாளும் வந்தது. அவரது வீட்டுக்கு முன்னே ஒரு கலர் டிவியை வைத்து, பெரிய ஸ்பீக்கர் செட்டை போட்டு, படங்களைப் போட்டார்கள். முதலில் போட்டது உழவர் மகன். ஊரே வாய் பிளந்து பார்த்தது. ஏனென்றால், அந்தத் திரைப்படம் கல்லுப்பட்டி தியேட்டருக்கு வர எப்படியும் இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகி இருக்கும். அதற்குள் ஒரு புதுப்படத்தைப் பார்க்கிறோம் என்றால் சும்மாவா? அதுமட்டுமல்ல, அந்தக் காலத்தில் அந்தப் படத்தின் பிரமாண்டமும் அதன் இசையும் அமர்க்களமாக இருந்தன.
இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து ஒரு மணி வாக்கில் படம் முடிந்தது. அடுத்து ஒரு பத்து நிமிடம் பிரேக் விடப்பட்டது. மீண்டும் ஒரு திரைப்படம். அதுவும் விஜயகாந்த் படமே. சட்டம் ஒரு விளையாட்டு என நினைக்கிறேன். அந்தப் படம் முடிய அதிகாலை ஆகிவிட்டது. இரண்டு புதுத் திரைப்படங்களைப் பார்த்த ஆச்சரியம் அந்த வாரம் முழுவதும் இருந்தது எனக்கு.
இப்படி இரண்டு அல்லது மூன்று படங்களை டெக் எடுத்துப் போடுவது அப்போதெல்லாம் சகஜம். டெக் வாடகையை மிச்சப்படுத்த இப்படிச் செய்வார்கள். மூன்று படங்கள் போட்டால் ஒரு படம் மட்டும் பார்க்கலாம் என்று அம்மா சொல்வார். ஆனால் அன்று பொதுவெளியில் போட்டதால் இரண்டு படங்கள் பார்க்க அம்மா அனுமதித்துவிட்டார். உழவன் மகன் திரைப்படத்தைப் பற்றி யார் பேசினாலும், இந்த நிகழ்ச்சிகள் எனக்கு ஞாபகம் வரும்.
இதில் அந்தத் தாத்தா இறந்தது எனக்குள் கொஞ்சம் அதிர்ச்சியையும் உண்டாக்கி இருந்தது. அதை ஒரு சிறுகதையாகவும் எழுதி வைத்தேன். இதற்கான சுட்டியை கமெண்ட்டில் போட்டிருக்கிறேன். படித்துப் பார்க்கவும்.