தாய் (கவிதை)

தாய்

ஆற்று நீரின் மணல் காலில் பட்டதுமே
ஆங்காங்கே முளைத்துக்கொண்டன
நினைவுக் குடைகள்
நீரில் முங்கியதும்
மேலே பரவிய
காற்றுக் குமிழிகள்
உடையும்போதெல்லாம்
அம்மா அம்மா என்றே பரவின
நெளிந்து போன
டிஃபன் பாக்ஸில்
கெட்டியாக பிசைந்து கொடுத்த
மோர் சாத மாவடு வாசத்துடன் காற்றோடு வந்தவள்
‘முங்கும்போது மூக்க பிடிச்சிக்கில’ என்றாள்.
குளிப்பாட்டினாள்
நீரூட்டினாள்
தாமிரபரணியே தாயாக எழுந்து நின்றாள்
நீரோடு கலக்காத கண்ணீர்த் துளிகள்
ஒருவேளை இருந்திருந்தால்
தனித்தனியே தீவுக்கூட்டங்கள்
முளைத்திருக்கக்கூடும்.
கடைசிச் சொட்டு நீர் சொட்டும் வரை
கரையில் காற்று வாங்கி
சுட்டெரிக்கும் சூரியனைப் பார்த்து நின்றிருந்தபோது
‘நல்லா துவட்டுல’ என்று யாரோ ஒரு அம்மை
தன் மகனுக்குச் சொல்லிக்கொண்டிருந்தாள்

Share

Comments Closed