Govt schools of TN

இனியும் ஆங்கிலம் அன்னிய மொழி என்று உருட்டிக்கொண்டிருக்காமல், ஆங்கிலம் கண்ணாடி, தமிழ் கண்பார்வை என்றெல்லாம் ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்காமல், ஆங்கிலமும் தமிழ் அளவுக்கு (பிராந்திய மொழி அளவுக்கு) முக்கியம் என்பதை உரக்கச் சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கை தமிழ்நாட்டுக்குள்ளே சாதாரண அளவுக்கு முடியப் போகிறது என்றால் தமிழ் மட்டும் போதும். ஆனால் நீங்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டி இருக்கும் என்றால், குறைந்தபட்ச ஆங்கில அறிவு மிகவும் அவசியம். தமிழ் ரத்தத்தில் கலந்தது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதன் எல்லை, ஆங்கிலம் வேண்டாம் என்பதற்குப் போகக் கூடாது. ஒருவர் மிகச் சாதாரணமாகப் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்காவது ஆங்கில அறிவு அடிப்படைத் தேவை. அதுவும் இன்றைய உலகில் இது அத்தியாவசியம்.

தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் தெரியாமல் இருக்கும் நான்கு தலைமுறைகளைக் கடந்த 40 ஆண்டுகளாக உருவாக்கி விட்டிருக்கிறோம். நான் பத்தாம் வகுப்புக்குச் சென்றபோது எங்கள் வகுப்பாசிரியர் நார்மன் சார் செய்த முதல் வேலை, 9ம் வகுப்பில் முழுவாண்டுத் தேர்வில் அனைவரும் உண்மையாக வாங்கிய மதிப்பெண்கள் என்ன என்பதை வாசித்ததுதான். அதுவரை முழுவாண்டுத் தேர்வு மதிப்பெண்களை நாங்கள் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. பள்ளியிலிருந்து ப்ரொமோடட் என்று ஒரு அஞ்சலட்டை வரும், அவ்வளவுதான். அன்று அவர் வாசித்த மதிப்பெண்கள் பலரைக் கலக்கமடையச் செய்தது. எங்கள் வகுப்பில் மொத்தம் 42 பேர் என்ற நினைவு. அரசு உதவி பெறும் பள்ளி. தமிழ் வழிக் கல்வி. ஐந்து பாடங்களிலும் 35 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 15 பேர் கூட இல்லை. மற்ற அனைவரும் குறைந்தது ஏதேனும் இரண்டு பாடங்களிலாவது 15 அல்லது 16தான். ஒரே ஒரு நல்ல விஷயம், தமிழை எழுத்துக் கூட்டி வாசித்துவிடுவார்கள். எழுதச் சொன்னால் முடிந்தது கதை. ஆங்கிலம் – சுத்தம். ஆங்கிலத்தின் மேலேயே தமிழில் எழுதிப் படித்து ஒப்பித்தவர்களே பலர்.

இன்றைய நிலை இன்னும் மோசமாகி இருக்கிறது. இதுவே 60 வருடங்களுக்கு முன்பு என்று பார்த்தால், ஆங்கிலத்திலும் தமிழிலும் மாணவர்கள் ஓரளவுக்கு அடிப்படை அறிவு பெற்றவர்களாகவே இருந்தார்கள். அன்றைக்கு ஆங்கிலத்துக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் இப்போது தரப்படுவதில்லை. அன்றைக்குத் தமிழுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் இன்று சுத்தமாகத் தரப்படுவதில்லை. ஆங்கிலம் அன்னிய மொழி என்றெல்லாம் சொல்லி, தமிழையும் கற்றுத் தராமல் விட்டிருக்கிறோம்.

அரசுப் பள்ளி ஒன்றுக்கோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றுக்கோ இன்று செல்லுங்கள். பத்தாம் வகுப்பு மாணவர்களை அழைத்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் விடுமுறை விண்ணப்பம் எழுதிக் காட்டச் சொல்லுங்கள். ஏதேனும் ஒரு பக்கத்தை எடுத்து அதைத் தமிழில் வாசிக்கச் சொல்லுங்கள். பின்பு அதையே நீங்கள் சொல்ல சொல்ல அவர்களை எழுதச் சொல்லுங்கள். சாதாரண மூன்றிலக்கக் கூட்டல் கணக்கு, கடன் வாங்கிக் கழித்தல் கணக்கு, சாதா வகுத்தல், மூன்றிலக்கப் பெருக்கலைச் செய்யச் சொல்லுங்கள். ஆங்கிலத்தில் ஏதேனும் ஒரு பக்கத்தை எடுத்து வாசிக்கச் சொல்லுங்கள். உங்களால் நம்பவே முடியாத அளவுக்கான பேரதிர்ச்சி காத்திருக்கும். உடனே மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நிலைமை கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று நினைத்து ஏமாந்துவிடவேண்டாம். அதிலும் இப்படித்தான். அரசுப் பள்ளிகளில் பத்துப் பிழைகள் இருந்தால் இங்கே ஒன்பது பிழைகள் இருக்கும், அவ்வளவுதான் வித்தியாசம்.

இன்றும் அரசுப் பள்ளிகள் பள்ளிகள் திறந்ததும் செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா? அனைத்து மாணவர்களுக்கும் அ, ஆ, இ, ஈ மற்றும் க, ங, ச சொல்லித் தருவது. 8 வகுப்பு வரை இதைச் செய்கிறார்கள். 40 வருடங்களுக்கு முன்பு நாம் இத்தனை மோசமாக இல்லை. அதேசமயம் மிக நன்றாகத் தமிழைப் படித்தோம் என்றும் சொல்வதற்கில்லை.

இதன் காரணங்கள் என்ன? ஆசிரியர்களின் தரம் முதல் பிரச்சினை. அடுத்து, ஆங்கிலம் குறித்த தேவையற்ற கற்பிதங்கள். ஆங்கில தெரியாவிட்டால் குடி மூழ்கி விடாது என்பது உண்மைதான். அது யாருக்கு? தமிழைத் தாண்டி தனக்கு எதுவும் தேவையில்லை என்ற நிலை உடையவர்களுக்கு. அப்படி இல்லாமல், இந்திய அளவில் அல்லது உலகளவில் நீங்கள் செல்ல நேரும்போது ஒவ்வொரு நொடியும் அவமானத்தில் கூனிக் குறுகி நின்றிருக்கும் நிலை வரத்தான் செய்யும். உடனே சொல்வார்கள், ஃப்ரான்ஸில் பலருக்கு ஆங்கிலம் தெரியாது என்று. அது தமிழர்களுக்கோ அல்லது மற்ற இந்திய மாநிலக்காரர்களுக்கோ பொருந்தாது.

ஆங்கிலத்தைக் குறைந்த அளவுக்காவது கற்றுக்கொள்ளுங்கள். யாராவது எளிய ஆங்கிலத்தில் பேசினால் அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்காவது ஆற்றலை வளர்த்துக்கொள்ளுங்கள். நன்றாக ஆங்கிலப் புலமை பெற்றவர்கள் மட்டுமே, ஆங்கிலம் தேவையே இல்லை என்று சொல்லத் தகுதி உடையவர்கள். மற்றவர்கள் அதுவரை அமைதியாக ஆங்கிலம் கற்றுக்கொள்வதே நல்லது. தமிழையும் ஆங்கிலத்தையும் அடிப்படைத் தேவைக்கு அவசியமான அளவுக்குக் கூடக் கற்காத மூன்று தலைமுறைக்காரர்கள் சொல்லும் அரசியல் நியாயங்களைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாதீர்கள். அது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது.

ஆங்கிலம் தெரியாவிட்டால் செத்துப் போய்விட மாட்டோம் என்பது உண்மைதான். தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாவிட்டாலும் செத்துப் போய்விட மாட்டோம் என்பது கூட உண்மைதான்.

முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் ஆங்கிலம் பேசும்போது நிற்பதைப் பாருங்கள். நான் சொல்வது புரியும். அவருக்கும் நிச்சயம் புரியும். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் தமிழின் தரத்தைக் கூட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்து அவர் தீவிரமாகச் செயல்படவேண்டும் என்பதே என் விருப்பம்.

Facebook post link.

Share

Comments Closed