ஜே.எஸ்.ராகவன் – அஞ்சலி

ஜே எஸ் ராகவன் மறைவு – பேரதிர்ச்சி. நேற்று வரை நகைச்சுவைப் பதிவுகள் போட்டுக்கொண்டிருந்தார். இன்று அவர் நம்மிடையே இல்லை. 80 வயதில் இத்தனை ஆர்வமும் கடைசி வரை ஃபேஸ்புக்கில் எழுதியதும் ஆச்சரியம். நேற்று மதியம் ஒரு மணிக்கு அவர் போட்ட போஸ்ட்:

//’ஏம்மா, இன்னிக்கு கறிகாயெல்லாம் ஏக விலை சொல்றே?’

‘தெரியாதா சாமி, காலிலே ரஷ்யாவுக்கும் யூக்ரேனுக் கும் சண்டை ஆரமபிச்சுடுத்தாமே.’//

ஜே.எஸ்.ராகவன் எழுதி, வரும் 27ம் தேதி மாம்பலம் டைம்ஸ் பத்திரிகையில் வரப்போகும் தமாஷா வரிகள் பத்தியையும் தன் ஃபேஸ்புக்கில் அவரே வெளியிட்டிருக்கிறார்.

பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடிக் கூட்டத்தில் ஜே.எஸ்.ராகவன் பங்கேற்றுப் பேசினார். கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்தில் மென் நகைச்சுவையாகப் பேசிய ஒரே எழுத்தாளர் அவரே. அபாரமான தன்னம்பிக்கையுடன் பேசினார். 

புத்தகக் கண்காட்சிக்கு வரும்போதெல்லாம் அவரும் அவரது மனைவியும் கிழக்கு ஸ்டாலுக்கு வருவார்கள். ஜே எஸ் ராகவன் ஒன்றிரண்டு நிமிடங்கள் பேசுவார். நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளவே மாட்டார். நமக்கு வேலை இருக்கும் என்பதில் மிகக் கவனமாக இருப்பார். மிகவும் ஜெண்ட்டிலாக நடந்து கொள்வார். நிறைய புத்தகங்கள் வாங்குவார். 

80 வயதிலும் ஜே எஸ் ராகவனின் மெச்சத்தகுந்த ஒரு பண்பு, போனில் பேசும்போது எதைப் பேசவேண்டுமோ அதைத் தெளிவாக, சுருக்கமாகப் பேசுவது. வயதானவர்கள் சிலர் தாங்கள் நீண்ட நேரம் பேசி, சொன்னதையோ சொல்கிறோம் என்பது தெரியாமலேயே நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். வயதின் பிரச்சினை. ஆனால் ஜே எஸ் ராகவன் ஷார்ட் அண்ட் ஷார்ப்.

நீண்ட நாள்கள் தொடர்பில் இல்லாமல் இருந்த ஜே எஸ் ராகவன், சில தினங்கள் முன்பு அழைத்து, தனக்கு கிழக்கு வெளியிட்ட ‘சேரர் சோழர் பாண்டியர்’ வேண்டும் என்று கேட்டார். புத்தகம் வெளிவந்த பின்பு அனுப்புவதாகச் சொன்னேன். சில நாள் கழித்து மீண்டும் அழைத்து நினைவூட்டினார். புத்தகம் வந்ததும் அனுப்பி வைத்தேன். மிகவும் சந்தோஷமானார்.

மீண்டும் அழைத்து கிழக்கு வெளியிட்டிருக்கும் இன்னொரு புத்தகம் வேண்டும் என்றார். கிழக்கு வெளியிட்ட புதுப்புத்தகங்களின் பட்டியலையும் கேட்டார். இரண்டையும் அனுப்பினேன்.

தான் ஃபேஸ்புக்கில் எழுதுவதாகவும் எனது போஸ்ட்டுகள் அவரது கண்ணில் படுவதில்லை என்றும் சொன்னார். என்னையே ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பச் சொன்னார். அனுப்பினேன். ஏற்றுக்கொண்டார்.

புத்தகக் கண்காட்சிக்கு வரமுடியாததால் மிகவும் வருத்தப்பட்டார். சென்ற ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட பின்பு, தன் உடலில் இருந்த அனைத்து சக்தியும் போய்விட்டதாக உணர்வதாகச் சொன்னார். வயது 80 என்றும் சொன்னார். அவரும் அவரது மனைவியும் வீட்டில் இருப்பதாகச் சொன்னார். வீட்டுக்குள் நடமாட முடிகிறதா சார் என்று கேட்டேன். அது வரை ஓகே என்றார். ஆனால் புத்தகக் கண்காட்சிக்குத்தான் வரமுடியவில்லை என்று மீண்டும் மீண்டும் வருத்தப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புத்தகக் கண்காட்சிக்கு ஜே எஸ் ராகவன் வந்தபோது, அவரைப் பார்த்த அழகியசிங்கர், ‘உங்களால் முடியாவிட்டால் வரவேண்டாம். என்ன புத்தகம் வேண்டும் என்று சொன்னால் நானே வாங்கி அனுப்புகிறேன்’ என்று சொன்னதாக இரண்டு முறை என்னிடம் குறிப்பிட்டார் ஜே எஸ் ராகவன்.

இன்று காலை ஜே எஸ் ராகவன் இல்லை என்கிற செய்தி நிஜமாகவே அதிர்ச்சியாக இருக்கிறது. போய்வாருங்கள் ஜெண்டில் மேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் ஷாந்தி.

Share

Comments Closed