மகான் – முரண்களின் சுவாரஸ்யமான ஊர்வலம்

மகான் திரைப்படம் பற்றி எழுதவேண்டுமா என்று யோசித்தேன். ஆனால் ஒரு சிறு குறிப்பையாவது எழுதி வைப்பதுதான் நியாயம் என்று தோன்றியது.

மகான் திரைப்படத்தில் சாராயம் காய்ச்சும் ஒருவனின் பெயர் காந்தி மகான். அவனே ஹீரோ. இது காந்தி ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய எரிச்சலை உருவாக்கி இருக்கிறது. நியாயமான எரிச்சலே. ஆனால் படம் பார்த்த பின்பு எனக்கு இது பெரிய பிரச்சினையாகத் தோன்றவில்லை. காரணம் என்ன? முதலில் இந்தப் படம் பரம்பரை பரம்பரையாக காந்திய வழியில் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் கதை. ஹீரோ அவ்வழியில் வந்தவன். கள்ளுக்கடை மறியலில் தன் உயிரைக் கொடுத்த ஒரு தாத்தாவின் பேரன் அவன். அவனது அப்பா சுதந்திரப் போராட்ட வீரர். காந்தியின் நினைவாக தன் மகனுக்கு காந்தி மகான் என்று பெயர் வைக்கிறார். அவன் பின்னாளில் குடும்பத்தின் அஹிம்ஸையின் உச்சமான அடக்குமுறை பிடிக்காமல் காந்திய வழியில் இருந்து விலகி ஓடுகிறான். இப்படித்தான் அவனது பெயர் காந்தி மகான் என்று வைக்கப்படுகிறதே ஒழிய காந்தியை இழிவு படுத்தும் நோக்கில் அல்ல.

கொஞ்சம் மாற்றி யோசிக்கலாம். ஒரு கதாபாத்திரத்துக்கு வேண்டுமென்றோ நரேந்திர மோடி என்றோ வேறு மதங்களின் இறைத்தூதர் பெயரையோ வைத்தால் சும்மா இருப்பார்களா? இருக்கமாட்டார்கள். ஆனால் காந்திக்கு இன்று அந்த அளவுக்குப் பிரச்சினைகள் இல்லை. இது காந்தி உருவாக்கித் தந்த ஒரு ஜனநாயக வெளி என்று கூடக் கருதிக்கொள்ளலாம்.

இதைவிட முக்கியம், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் சொந்த வாழ்க்கையில் அவர் காந்திய வெறுப்பாளராக இருந்திருக்கும் தடயங்கள் ஏதும் இல்லை. தீவிர அரசியல் நிலைப்பாட்டுடையவர் வேண்டுமென்றே தனக்குப் பிடிக்காத ஒரு அரசியல்வாதியின் பெயரை ஒரு கதாபாத்திரத்துக்கு வைப்பதற்கும் இப்படத்தில் காந்தி மகான் என்று பெயர் வைத்ததற்குமான முக்கியமான வேறுபாடாக இதைப் பார்க்கிறேன். இப்படம் பார்த்த பிறகு தோன்றியது, ராஜிவ்காந்தி என்று பெயரை வைத்துக்கொண்டு எல்டிடிஈ-யினரை ஆதரிப்பவர்கள், காந்தி என்று பெயர் வைத்துக்கொண்டு திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் என்ன மனநிலையில் இருப்பார்கள் என. உண்மையில் பெயர் நமக்கு வைக்கப்படுவது, நாம் தேர்வது அல்ல!

இத்திரைப்படத்தை நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன். பல லாஜிக் மீறல்களையும் எரிச்சலூட்டும் க்ளிஷே காட்சிகளையும் (எதிரிகள் இருவருமே நண்பர்களாக இருப்பது) தாண்டி இப்படம் பிடித்திருந்தது. காரணம் என்ன? வழக்கமான கேங்ஸ்டர் கதையில் வழக்கமான அப்பா மகன் மோதலை ஒரு தத்துவப் பின்னணியில் சுவாரஸ்யமாகக் கொண்டு போய்ச் சேர்த்ததுதான். தொடக்க 10 நிமிடங்கள் பெரிய எரிச்சலைத் தந்தாலும், பின்னர் படம் சூடுபிடிக்கிறது. ஒரு பக்கம் காந்தி சாராய வியாபாரியாக உயர்ந்துகொண்டே போக, தன் மகனை ரட்சிக்க வந்த தேவ தூதன் காந்தி என்று சத்தியன் மதமார்க்கத்தில் போக எத்தனிக்கிறான். ஆனால் அவனை மீண்டும் சாராய வழிக்கே கொண்டு வருகிறான் காந்தி. இக்காட்சிகள் மிக அழகாக எடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, படத்தின் உச்ச காட்சிகளுக்கு மிகப் பெரிய அடித்தளத்தை அமைத்துத் தருகின்றன. பிரமாதமான திரைக்கதை இது.

இத்தொழிலே வேண்டாம் என்று விலகிப் போனவனைக் கூட்டி வந்து தன் கையாலேயே கொல்வது, தானே காப்பாற்றிய தன் மகன் போன்ற ஒருவனை தன் நிஜ மகனே கொல்வது, காந்தி மகான் என்று பெயர் வைக்கப்பட்டு மது விலக்குக்காகப் போராட வேண்டியவனே சாராய வியாபாரி ஆவது என்று படம் முழுக்க முரண்களின் ஊர்வலம். காந்திய வழி இல்லை என்றாலும், நான் கொன்றால் அது சட்டப்படி சரி என்று அத்தனை பேரையும் என்கவுண்ட்டரில் போடும் மகனே தன் கையால் சட்டத்துக்கு உட்படாத கொலைகளைச் செய்யவேண்டி வருவது இன்னொரு உச்சக்கட்ட முரண்.

உண்மையில் காந்தியின் அவனது மகனும் இறுதிக்காட்சிக்கு முன்பாக காரில் வரும்போதே இப்படம் முடிந்துவிடுகிறது. கடைசி பத்து நிமிடம் படம் தேவையற்று அலைபாய்ந்து விட்டது. காரணம், ஹீரோவே வெல்லவேண்டும் என்பது போன்ற ஒரு லாஜிக். கூடவே, இறுதிக்கணத்தில் ஒரு ட்விஸ்ட் வைத்தே ஆகவேண்டும் என்கிற கார்த்திக் சுப்புராஜின் வெறி. ஆனாலும் இக்காட்சிகளையும் ஓரளவுக்கு நியாயப்படுத்தி எடுக்க முயன்றிருக்கிறார்.

ஜகமே தந்திரம் போலவே அட்டகாசமான மேக்கிங்கில் இப்படம் உருவாகி இருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு இலக்கின்றி அலைபாய்ந்த ஜகமே தந்திரம் படத்தின் பிரச்சினைகளும் இதில் இல்லை. பொறுமையாக மெல்ல நகரும் திரைப்படத்தைப் பார்க்க விரும்புபவர்கள், பார்வையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யோசிக்காமல் ரசித்து ரசித்து திரைப்படம் எடுக்கும் இயக்குநரின் படைப்பைப் பார்ப்பவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம் இது. பல குறைகள் இருந்தாலும், இப்படம் முக்கியமான படமே.

Thanks: https://oreindianews.com/?p=7556

Share

Comments Closed