அழகோவியம்
பஞ்சு விரல்களில்
கோலம் வரைகிறாள்
கண்ணில் விழும் தலைமுடியை
ஒதுக்கிக் கொண்டே இருக்கும் சிறுமி
முயல் வரைந்து உச் கொட்டி அழிக்கிறாள்
மீன் வரைந்து முகம் சுழிக்கிறாள்
கன்று பாதி உருவாகி வரும்போதே நீரூற்றுகிறாள்
ரோஜாவை வரைந்து பார்க்கிறாள்
சூரியகாந்தியை வரையும்போதே
கோலத்தைக் காலால் எத்திவிட்டு
கண்ணீருடன் வீட்டுக்குள் ஓடும்
அவள் அறிந்திருக்கவில்லை
அவள் கழுத்துக்குப் பின்னே
அவள் வரைந்த
அனைத்து உயிரிகளும்
மலர்களும்
காத்திருந்ததை.
—
சொற்களை விட்டோடியவன்
அட்டைக் கத்தியால்
வானில் சுழித்தபடி
அந்தக் கோட்டி
உதிர்த்த சொற்களைப்
பாதி பேர் கேட்கவில்லை
மீதி பேருக்குப் புரியவில்லை.
வானத்தில்
தன் கத்தியால்
ஒரு கேள்வி இட்டான்.
சொல்ல சொல்ல
சொற்கள் குவிந்துகொண்டே சென்றன
சொற்களின் பீடம் மேலேறி
கேள்வியை முறைத்து நின்றவன்
கீழே நகரும் கூட்டத்தை
வாத்துக் கூட்டம் என்றான்.
சட்டெனப் புரிந்துவிட்டதால்
கல்லால் அடித்தார்கள்.
சொற்களை வாரி எடுத்துக்கொண்டு
காற்றில் மறைந்தான் அவன்.
எல்லோரும் நிம்மதியானார்கள்.
அவனோ
இன்னொருவனோ
வருவான் என
கேள்விக்குறி
தன் மழைக்காலத்துக்காகக்
காத்திருக்கிறது
—
நடைக்கோலம்
நீல வானில்
வெண்ணிற மேகங்கள்.
நடைப்பயிற்சி தொடங்கினேன்.
திக்கற்ற மனம்.
எங்கிருந்தோ தீம் திரனன தவழ்ந்து வந்தது.
நாளும் ஒவ்வொரு நாடகமோ இது மேடையோ.
எதிர்வீட்டு மொட்டைமாடியில்
தவமணி அக்கா மூச்சு வாங்க நடக்க வந்தாள்
என்னத்த, அத்தான் எங்க என்று கேட்க நினைத்து
பயந்து போய் அமைதியாக இருந்தேன்.
அவளே வானத்தைக் கைகாட்டி
இருபது நாளாச்சு என்றாள்.
கீழ் வீட்டுக்காரன் மொட்டை மாடிக்கு வரும்போதெல்லாம்
அந்த அத்தானைப் பார்த்துப் புன்னகைப்பான்.
அவன் போயும் இருபது நாளிருக்குமா?
அத்தானுக்குத் தெரியாது.
வானத்தைப் பார்த்தேன்.
எதிரெதிர் மேகத்திரளில்
அத்தானும் கீழ்வீட்டுக்காரனும்
ஒருவரை ஒருவர்
புன்னகைத்துக் கொண்டார்கள்.