விலங்குச் சாலை (கவிதை)

விலங்குச் சாலை

தார் ரோட்டில்
சாலையோடு சாலையாக
அப்பிக் கிடக்கும்
நாயொன்றின் தோல் மீது
வண்டி ஏறி இறங்குகையில்
துணுக்குறும் மனத்துக்குள்ளே,
கொல்லாமல் விட்ட
மனிதர்களின் முகங்கள்
வேட்டையாடாமல் விட்ட
அழகிகளின் உடல்கள்
கண் மூடிக் கொண்ட
கடவுள்களின் சாத்தான் குணங்கள்
மண் மூடிக் கிடந்த
மிருகங்களின் விழிப்புகள்.
சாலைக்குக் குறுக்கே ஓடும் நாய்க்குட்டிகளே
இது விலங்குகள் விரையும் சாலை.

Share

Comments Closed