- படத்தில் தொடர்பே இல்லாமல் ஒரு காமெடி காட்சி. ஜீவா கதாபாத்திரமும் காமெடி நடிகரும் பைக்கில் வருகிறார்கள். அப்போது ஒருவன் எதிரே ஓடி வருகிறான். அவன் காவி வேட்டி, பட்டை அணிந்திருக்கிறான். அவன் ஜீவாவிடம், ஒரு பிரச்சினை உடனே வாருங்கள் என்று அழைக்கிறான். என்ன பிரச்சினை என்று சொல்லாமல், பிரச்சினை பிரச்சினை என்று இழுக்க, காமெடி நடிகர் காவி வேட்டி கட்டியவனைப் பார்த்துச் சொல்கிறார், ‘ஊர்ல மீத்தேன் பிரச்சினை அது இதுன்னு ஆயிரம் பிரச்சினை இருக்கு, இதுதான் ஒனக்கு பிரச்சினையா, ஓட்றா’ என்று சொல்லிவிட்டு, ‘இப்ப பிரச்சினை சரியாய்ட்டா என்ன பண்ணுவ’ என்று கேட்க, காவி வேட்டிக்காரர் சொல்கிறார், ‘ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடுவேன்’ என்று. காவி வேட்டிக்காரனை ஜீவாவும் காமெடி நடிகரும் விரட்டும்போது காமெடி நடிகர் சொல்லும் வசனம், ‘அஞ்சறிவு உள்ள இவனையெல்லாம் விரட்டணும்.’ (வசனங்களை நினைவில் இருந்து எழுது இருக்கிறேன். அஞ்சறிவு என்னும் வார்த்தை காதில் விழுந்தது போலத்தான் இருந்தது. இன்னொரு முறை பார்க்கும் பொறுமை இல்லை என்பதால் அதை உறுதி செய்யாமல் எழுதி இருக்கிறேன்.)
- கிறித்துவப் பெண்ணை ஹிந்துப் பையன் காதலிக்கிறான். கிறித்துவப் பெண் சொல்கிறாள், ‘எங்கப்பாகிட்ட நீ பொண்ணு கேட்டு வரும்போது எங்கப்பா ஒன்னை அசிங்கமா திட்டுவாரு. மதம் மாறச் சொல்வாரு..’ எல்லாவற்றுக்கும் சரி என்று சொல்லும் ஹீரோ (அருள்நிதி), எல்லாவற்றுக்கும் சரி என்று சொல்லிவிட்டு, மதம் மாற பிரச்சினையே இல்லை என்று சொல்கிறார்.
- கிறித்துவப் பெண் தன் காதலை ஏற்றுக் கொள்ள அருள்நிதி கதாபாத்திரம், சர்ச்சில் ஹீரோயின் பின்னாலேயே தவம் கிடைக்கிறது. இரண்டு முறை இந்தக் காட்சி வருகிறது. ஆனால் ஒரு தடவை கூட கிறித்துவப் பெண் தன் காதலனுக்காக கோவிலுக்குள் காலை வைக்கும் காட்சி என்றில்லை, கோவில் இருக்கும் தெருவில் காலை வைக்கும் காட்சி கூட இல்லை!
- ஜீவா கதாபாத்திரம் ஒரு வசனம் சொல்கிறது. ‘அரேஞ்ச்ட் மேரேஜ் சிஸ்டத்தை மொதல்ல ஒழிக்கணும்!’
முக்கியமான பின்குறிப்பு: தொடர்பே இல்லாமல் ஒரு காட்சியை சொன்னதற்காக, மற்ற காட்சிகள் எல்லாம் தொடர்போடு இருக்கிறது என்று நினைத்து விடாதீர்கள். எல்லாக் காட்சிகளுமே தொடர்பே இல்லாமல்தான் நகர்கின்றன.