வேல் யாத்திரை தடை

கொரானா காலத்தைக் கருத்தில் கொண்டு வேல் யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது என்று தமிழக அரசு சொல்லி இருக்கிறது.

தமிழக அரசு பெரிய தவறு செய்துவிட்டதாகவே நினைக்கிறேன். அனுமதி தந்திருந்தால், இந்த வேல் யாத்திரை அதிகம் கவனிக்கப்படாமல் போயிருக்கும் வாய்ப்புகளே அதிகம். ஆனால், இப்போது தடை செய்ததன் மூலம், தமிழக பாஜகவுக்கு அதிக வெளிச்சத்தைத் தந்திருக்கிறது அதிமுக அரசு. சுணங்கிக் கிடந்த தமிழக பாஜக தன் வழியைச் சிறப்பாகத் தீர்மானிக்க நல்லதொரு வாய்ப்பை அதிமுக ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

வேல் யாத்திரை அனுமதிப்பு மறுப்புக்குச் சொல்லப்பட்டிருக்கும் காரணம், கொடுமை! முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் அறிவிக்கப்பட்டபோது, அதிமுக அலுவலகம் முன்பு அப்படி ஒரு கொண்டாட்டம். எவ்விதமான கொரானா பாதுகாப்பும் கடைப்பிடிக்கப்படவில்லை. இப்போது பாஜக வேல் யாத்திரை நடத்தினால் கொரானா பிரச்சினை வந்துவிடும் என்று நினைக்கிறது அரசு!

அதிமுக அரசு பாஜகவுக்கு சாதகமாகவே இருப்பதாகப் பலர் சொல்லி வரும் வேளையில், இந்த அறிவிப்பால் பாஜக அதிமுக உறவு மோசமடையலாம். மோசமடையவேண்டும் என்பதே என் ஆசை. கருணாநிதிக்குப் பின் திமுகவை வீழ்த்துவதைவிட, ஜெயலலிதாவுக்குப் பின் அதிமுகவை வீழ்த்துவதே எளிதானது. ஸ்டாலின் வலுப்பெற்றுவிட்ட நிலையில், அதிமுகவுடன் இன்னும் கூட்டணி வைத்துக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. அதேசமயம் எக்காரணம் கொண்டும் திமுகவுடன் கூட்டணி வைக்கவே முடியாது. கூடாது. தனித்து நின்று தேர்தலைச் சந்திப்பதுதான் சரியான முடிவு. இந்த வேல் யாத்திரைக்கான தடை, பாஜக தனித்து நிற்பதை விரைவுபடுத்துவதோடு, அதிமுகவின் வீழ்ச்சியையும் வேகமாக்கும். ஏற்கெனவே அதிமுக எதிர்வரும் தேர்தலில் வெல்வது அத்தனை எளிதானதல்ல என்றிருக்கும் வேளையில், இந்த வேல் யாத்திரை தடை மூலம் பாஜகவும் அதிமுகவிடம் இருந்து விலகுமானால், குறைந்தது 5% ஓட்டாவது கிடைக்காமல் போகலாம். இந்த ஓட்டை, பாஜக அதிமுகவுடன் இல்லாத நிலையில், சிறுபான்மையினர் சரி செய்வார்கள் என்றும் யோசிக்க முடியாது. ஏனென்றால் சிறுபான்மையினர் திமுக கூட்டணிக்கு வாக்களிக்காமல் போக எந்தக் காரணமும் இல்லை! எனவே பாஜக மூலம் தனக்கு வரவிருந்த 5% ஓட்டையும் அதிமுக இழப்பதாகவே கருத்தில் கொள்ளவேண்டும்.

கொரானா காலத்தில் இந்த யாத்திரை தேவையா என்ற கேள்வி, எவ்வித அரசியல் காரணங்களும் இல்லாமல் முன்வைக்கப்படுமானால், எவ்வித அரசியல் செயல்பாட்டையும் களத்தில் செய்யாத ஒரு கட்சியால் முன்வைக்கப்படுமானால் மட்டும் அதைப் பொருட்படுத்தலாம். ஒரு தனிமனிதனாக இந்தக் கேள்வி நியாயமானதே என்றுதான் நினைக்கிறேன். ஆனால் பாஜகவுக்கு மட்டும் இந்தக் கேள்வியைக் கேட்போம் என்பது அபத்தம்.

இந்தத் தடையையும் மீறி வேல் யாத்திரையை பாஜக நடத்தி, தமிழ்நாட்டில் பாஜகவின் புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைக்கட்டும். வேல் யாத்திரையின் போது முருகன் பாஜகவின் தலைவராக இருப்பது நல்ல பொருத்தம். இறைச்செயல் என்றே கொள்வோம். எப்போதோ பாஜக முருகனைக் கையில் எடுத்திருக்கவேண்டும். பத்து வருடங்களுக்கு நாங்கள் நண்பர்களுக்குள் பேசி இருக்கிறோம், தமிழக பாஜக முருகனைக் கையில் எடுத்துக்கொண்டு பிரசாரம் செய்யவேண்டும் என. திடீரென சீமான் தமிழ்க்கடவுள் என்று கையில் முருகனை எடுத்துக் கொண்டார். நல்லவேளை, சீமானால் பெரிய தாக்கம் ஒன்றையும் ஏற்படுத்த முடியவில்லை. இன்று இந்த வேல் யாத்திரை மூலம் தமிழகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த எம்பெருமான் முருகன் அருளட்டும்.

Share

Comments Closed