ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜாவில் அறிமுகம் ஆனபோது காது ரெண்டும் எனக்கு ஜிவ்வென்று இருந்தது. இசை கேட்டு இல்லை, பொறாமையில்! ராஜா வெறியனான எனக்கு ரஹ்மானைத் திட்டித் தீர்ப்பதில்தான் ஆனந்தம் இருந்தது. ஆனால் செல்லும் இடமெல்லாம் ரஹ்மான் பாடல்தான். பட்டிதொட்டி எங்கும் அவரது பாடல்களே. தியேட்டரில் மாணவர்கள் அவரது பாடலுக்குப் போட்ட ஆட்டமெல்லாம் அதுவரை நான் பார்க்காதவை. ஏ.ஆர்.ரஹ்மானின் அத்தனை கேசட்டையும் முதல்நாளே வாங்கிக் கேட்டுவிடுவேன். எத்தனை முறை என்ற கணகெல்லாம் இல்லை. அப்பாடல்கள் மனப்பாடம் ஆகும் வரை.

ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் பத்து வருடங்களில், வண்டிச் சோலை சின்ராசு தவிர, அவரது அனைத்துப் படங்களின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்தான். வண்டிச் சோலை சின்ராசு கூட எனக்கு சூப்பர் ஹிட்தான் – பரோட்டா பாட்டு உட்பட.

கடந்த பதினைந்து வருடங்களாக அந்த ஏ.ஆர்.ரஹ்மானைக் காணவில்லை. காரணங்கள் பல இருக்கலாம். ரஹ்மானின் மனமுதிர்ச்சி உட்பட. அந்தப் பரபரப்பு, அந்த ஹிட், தியேட்டரில் அந்த ஆட்டம் இவை எதுவுமே இல்லை. இது ஒரு குறையா என்றால் இல்லை. ஆனால், இளையராஜா வெறுப்பாளர்கள் அடிக்கும் கூத்தைப் பார்த்தால், இதையெல்லாம் மீண்டும் மீண்டும் வம்புக்காகவாவது சொல்லவேண்டும் போல் இருக்கிறது.

இளையராஜாவின் கடந்த இருபது வருடங்களில் வந்த பாடல்களில் உள்ள நுணுக்கங்களைக் கேட்டு ரசித்தால், ராஜாவின் பாடல் ஹிட்டாகவில்லை என்பார்கள். இன்று ரஹ்மானுக்கு அதே நிலை என்றால், ரஹ்மானின் பாடலில் உள்ள நுணுக்கத்தோடு ஓடி வருகிறார்கள். இதைத்தான் முன்னோடும் வாய்க்கால் பின்னோடும் என்றார்கள்.

அதிலும் கடந்த பத்து வருடங்களில் ஒரு சில ஆல்பங்கள் தவிர, சில பாடல்களைக் கேட்கக்கூட முடியவில்லை. அத்தனை ஸ்ட்ரீயோடைப். ராஜாவின் ஸ்ட்ரீயோடைப்பை அலசும் விற்பன்னர்களுக்கு ரஹ்மானின் ஒரே போன்ற பாடல்களைக் கேட்கும்போது காது அடைத்துப் போய்விடுகிறது என்று நினைக்கிறேன்.

இப்போதும் ரஹ்மானின் பாடல்களைத் தொடர்ந்து கேட்டால், அவரது ஹிட்டாகாத பாடல்கள் உட்பட, கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிக்க ஆரம்பித்துவிடும். ராஜா ரசிகர்களும் கடந்த இருபது வருடங்களில் இதைத்தான் செய்தும் சொல்லியும் வந்தார்கள். அப்போது கிண்டலாகப் பேசினார்கள். இப்போது வரிசையில் நிற்கிறார்கள், பெரிய பலாப்பழத்துடன்.

Share

Comments Closed