ஆடி அமாவாசை. ஆடி அமாவாசையில் ஆரம்பித்தால் அடுத்த மூன்று மாதத்துக்கு உட்காரவே முடியாது என்று பத்மநாபனின் அம்மா சொல்லிக்கொண்டே இருப்பாள். வரிசையாகப் பண்டிகைகள். ஆனால் இன்று அப்படிச் சொல்ல அந்த அம்மா இல்லை. அவள் இறந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதெல்லாம் அந்த வசனத்தை பத்மநாபன் சொல்ல ஆரம்பித்திருந்தார். முன் தலையில் ஒரு முடி வெள்ளையாகிவிட்டிருந்தது.
ஆடி அமாவாசைக்கு முதல்நாளே வேண்டிய எல்லா சாமான்களையும் வாங்கி வைத்துக்கொண்டார். ‘இலை வாங்கிட்டியாடா? உன் பொண்டாட்டி எதையும் ஞாபகப்படுத்த மாட்டா. இலை உங்க பையன் வாங்கிட்டு வரலைன்னா நான் என்ன பண்றதுன்னு சொல்லிக் காட்டுவா. அதோட நீங்களாவது ஞாபகப்படுத்திருக்கலாமே அத்தைம்பா’ என்று அம்மா பேசுவதைப் போலவே பத்மநாபனுக்குக் கேட்டுக்கொண்டே இருந்தது. கடைத் தெருவில் முதலில் இலையைத்தான் வாங்கினார்.
காலையில் எழுந்து குளித்துவிட்டு, பூஜை செய்துவிட்டு, தர்ப்பணம் விட்டுவிட்டு, பிண்டம் வைக்கத் தயாரானார். வீட்டில் செய்த அனைத்தையும் ஒரு இலையில் வைத்து, கொஞ்சம் எள்ளையும் சேர்த்துக் கொடுத்தாள் அவரது மனைவி. ‘நானும் கூட வரேன்ப்பா’ என்ற ஏழு வயது மகனிடம், ‘நீயெல்லாம் எதுக்கு? அவர் மட்டும் போகட்டும்’ என்று சொல்லிவிட்டாள் அவள். ஒரு கையில் தட்டு, அதன் மேல் இலையில் பிண்டம். இன்னொரு கையில் ஒரு செம்பில் நீருடனும், மொட்டை மாடிக்குப் போனார்.
மொட்டை மாடியின் ஒரு ஓரத்தில் கொஞ்சம் நீரை ஊற்றி, அதன் மேல் பிண்டம் இருக்கும் இலையைத் தட்டுடன் வைத்து, பிண்டத்தை இரண்டாகப் பரப்பி வைத்தார். அம்மாவுக்கு ஒன்று, அப்பாவுக்கு ஒன்று. இலை பறக்காமல் இருக்க, அங்கே கிடந்த இரண்டு செங்கல்லையும் இலையின் மேல் ஓரமாக வைத்தார். கா கா என்று நான்கைந்து முறை கத்தினார். பக்கத்து வீட்டில் இருந்து ஒருவர் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனார். பூணூலுடன் சட்டை போடாமல் ஒரு துண்டுடன் மட்டும் வந்தது அப்போதுதான் அவருக்கு உறைத்தது. மீண்டும் கா கா என்று கத்தினார். ஒரு காக்காயும் வரவில்லை. ஐந்து நிமிடம் பொறுத்துப் பார்த்துவிட்டு, மொட்டைமாடிக் கதவைத் தாழிட்டுவிட்டுக் கீழே வந்துவிட்டார். சாப்பிட்டார். உறங்கிப் போனார்.
ஆடி மாதக் காற்றில் அம்மியும் பறக்கும் என்று அம்மாவின் குரல் கேட்கவும் சட்டென விழித்தார். மணி ஐந்தரை ஆகி இருந்தது. காப்பி குடித்தார். அம்மா இருந்திருந்தால், மதியம் செய்த சித்ரான்னத்தையும் ஆமவடையையும், நமத்துப் போன அப்பளத்தையும், பாயாசத்தையும் கொண்டு வந்து தருவாள். பண்டிகை அன்று மாலைக் காப்பி கிடையாது. அந்த நினைவுடனேயே மொட்டை மாடிக்குப் போனார். கூடவே அவரது மகனும் வந்தான்.
தாழ்ப்பாளைத் திறந்து மொட்டைமாடிக்குப் போனவர் முதலில் பிண்டம் வைத்த தட்டைத்தான் பார்த்தார். அதில் ஒரு பருக்கை கூட இல்லை. அவருக்கு ஆச்சரியமாகிப் போனது. ஒரு பருக்கையைக் கூட விடாமல் அம்மாவும் அப்பாவும் சாப்பிட்டுவிட்டார்கள் என்று நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டார். மகனிடம் அதே சந்தோஷத்தில் சொன்னார். மகன் ‘தாத்தா பாட்டியாப்பா’ என்றான். ‘ஏம்ப்பா இவ்ளோ தூரம் வந்துட்டு கீழ வரலை’ என்று கேட்டவனை அப்படியே கட்டிக்கொண்டார். மகன் கேட்டான், ‘எங்கப்பா இலையைக் காணோம்? அதையுமா சாப்ட்டாங்க?’ என்றான். அப்போதுதான் கவனித்தார். தட்டின் மேல் இலை இல்லை. இலை பறக்காமல் இருப்பதற்காக அவர் வைத்த இரண்டு செங்கற்கள் மட்டும் இருந்தன. ஆடி மாதக் காற்றில் இலை பறந்திருக்குமோ என்று சுற்றிலும் பார்த்தார். எங்கேயும் இலை இல்லை. சுத்தமாகக் காற்றும் இல்லை. யாரும் வந்திருக்க வாய்ப்பே இல்லை. ஒரு நொடி யோசித்தவர், ‘வாடா போகலாம்’ என்று பையனைக் கூட்டிக்கொண்டு விடுவிடுவெனக் கீழே வந்தார். மகன், ‘என்னப்பா?’ என்றான். ‘ஒண்ணுமில்லை’ என்றார்.