பீட்டர் பாலாஜி என்று அவன் பெயரைச் சொல்லும்போது எல்லாருமே துணுக்குறுவார்கள். அது பீப்பாவுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். அவன் பீட்டர் பாலாஜி என்ற பீப்பாவாகி இரண்டு வருடங்கள் இருக்கும். உடம்பும்தான். மனதோடு சேர்ந்து உடலும் ரட்சிக்கப்பட்டுவிட்டது. ஏன் ஏன் என்று யார் கேட்டாலும் அவன் ஒரு மாதம் வாயே திறக்கவில்லை. அடுத்த ஒரு மாதத்தில் அவனுக்கும் மேரிக்கும் கல்யாணம் ஆனது. பீப்பாவின் வீட்டுப் பக்கத்தில் இருந்து ஒரு ஈ காக்காய் கூட வரவில்லை. தான் செத்தாலும் தன் முகத்தில் விழிக்கக்கூடாது என்று பாலாஜியின் அம்மா போட்ட சாபத்தில் உண்மையில் பீப்பா கொஞ்சம் நிம்மதியானான் என்றுதான் சொல்லவேண்டும்.
அடுத்த மூன்று மாதங்களில் குரோம்பேட்டையில் மூன்று அறை ஃப்ளாட் ஒன்று வாங்கிக் குடியேறினான். கேட்டட் கம்யூனிட்டி. மொட்டை மாடிக்குக் கூட்டிக்கொண்டு போன ப்ரோக்கர் அங்கே இருந்து தூரத்தில் தெரியும் தாமஸ் மவுண்ட்டைக் காண்பித்தான். பீப்பாவின் உள்ளம் நெகிழ்ந்தது. அந்த மலையில்தான் அவன் ரட்சிக்கப்பட்டான். அங்கேதான் அவன் முதன்முதலாக மேரியைப் பார்த்தான். மொட்டை மாடியிலேயே தேவாலயத்தின் மணி அவன் மனதுக்குள் கேட்டது. அந்த வீடுதான் என முடிவு செய்தான். வாழ்க்கை மாறியது. பழைய பழக்கங்கள், தொடர்புகள் என எல்லாவற்றையும் எளிதாக மறந்தான். புதிய வீட்டுக்குக் குடியேறினான். புது மனைவி. புதிய வாழ்க்கை.
தினம் தினம் மொட்டை மாடிக்கு வந்து தாமஸ் மவுண்ட்டை அங்கிருந்தபடியே பார்ப்பான். தாமஸ் கையில் ஜபமாலையுடன் அங்கும் இங்கும் திரிவதாகக் கற்பனை செய்துகொள்வான். ஒருநாளைப் போல ஒருநாள் மொட்டை மாடிக்கு வந்து தாமஸைப் பார்க்காவிட்டால் அவனுக்குத் தூக்கம் வராது. எல்லாமே அற்புதம்தான். அவ்வப்போது வந்து தொந்தரவு செய்யும் அம்மாவின் முகத்தைத் தவிர. ஒருநாள் அவளும் செத்துப் போனாள். ஷவரின் கீழே நின்று அரை மணி நேரம் குளித்ததில் பழைய எதுவும் தன்னிடம் ஒட்டிக்கொள்ளவில்லை என்று நிம்மதியானான். இரண்டு வருடங்களில் இரண்டு குழந்தைகள். வாழ்க்கை இத்தனை சுவாரஸ்யமானதா? அன்றுதான் திடீரென திருமலை அவன் வீட்டுக் கதவைத் தட்டினான். ஒன்றாகக் கல்லூரியில் படித்தவன். எரிச்சலானான். லேசாகச் சிரித்தான்.
மேரி சிரிக்கக்கூட இல்லை. உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு “ம்” என்றாள். திருமலை அவர் வீட்டை சுற்றிச் சுற்றிப் பார்த்தான். பீப்பாவுக்கு ஒட்டவே இல்லை. அவனை அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்குப் போனான். திருமலை லொட லொடவென பேசிக்கொண்டே இருந்தான். பீப்பா தலையைக் கூட அசைக்கவில்லை. அவன் போனால் போதுமென்று இருந்தது.
திருமலையைக் கவனிக்காமல் தூரத்தில் தெரியும் தாமஸ் மவுண்ட்டைப் பார்க்க ஆரம்பித்தான். மனதுக்குள் மணியோசை கேட்டது. தன் நெஞ்சில் இருந்த சிலுவையைப் பிடித்துக்கொண்டு அப்படியே நின்றான். திருமலை, “உன்கிட்டதான்டா பேசிக்கிட்டே இருக்கேன்” என்று சத்தமாகச் சொன்னபோதுதான் கண்ணைத் திறந்து அவனைப் பார்த்தான். இவன் இன்னும் போகவில்லையா? பீப்பா சொன்னான், “என்ன சொன்ன?” திருமலை, “என்ன அங்க பாத்து நின்னுக்கிட்டு இருக்க?” பீப்பா சொன்னான், “தாமஸ் மவுண்ட். புனித தாமஸ். உனக்கெல்லாம் புரியாது.” திருமலை மலையைத் திரும்பிப் பார்த்தான். கூர்ந்து பார்த்தான். மலையைப் பார்த்தபடியே சொன்னான், “இதுவா? தாமஸ் மவுண்ட்டா? இந்தப் பக்கம் எப்படிடா தாமஸ் மவுண்ட்டு? இது திருநீர் மலைடா.”
தொப்பென்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தபோதுதான் பீப்பா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு ஒரு பீப்பாயைப் போலச் சரிந்து விழுந்து கிடந்தது திருமலைக்குத் தெரிந்தது.