விதவிதமான கனவுகள். அந்த அளவுக்கு இருந்தாலும் பரவாயில்லை. கலவரமூட்டும் கனவுகள். ராமநாதனுக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. பயம் இல்லை, ஆனால் என்னவோ ஒரு சின்ன நெருடல். தினம் தினம் கனவா? அந்தக் கனவுகளுக்குள் என்னவோ இருப்பதாகத் தேடினான். எங்கோ ஒரு திருப்பத்தில் எதோ ஒரு பிணம் என்பதாகக் கனவு வரும். பக்கத்தில் போய்ப் பார்க்க அவனுக்குச் சங்கடமாக இருக்கும். சுற்றி இருப்பவர்களைப் பார்த்தால் எல்லாருமே உறவினர்கள் போல இருக்கும். விழிப்பு வந்துவிடும். இன்னொரு நாள் கனவில் எதோ ஒரு விபத்து என்று வரும். சுற்றிலும் உறவினர்கள் நிற்பார்கள். இவன் அருகில் நெருங்கிப் போகவும் விழிப்பு வந்துவிடும்.
இப்படி வகை வகையான கனவுகள், கொஞ்சம் நெருடலூட்டும் கனவுகள். மனைவியிடம் சொல்லலாம். உடனே அவளுக்கு நெற்றியில் வேர்க்கும். லேசாக மூச்சு வாங்கும். அப்படியே சாய்ந்துவிடுவாள். எனவே யோசித்தான்.
மலையாள மாந்த்ரீகரிடம் போனான். அவர் பிரசன்னம் பார்த்தார். மறைக்காமல் சொன்னார். “என்னவோ நடக்கப் போகிறது. எதோ ஒன்று துரத்துகிறது. முடிந்த வரை ஓடு. ஆனால் தப்பிப்பது கஷ்டம். கவனம்.”
ராமநாதன் தன் மகன் மகளிடம் சொல்லலாமா என்று யோசித்தார். காலேஜுக்குப் போகும் வயசில் இது எதற்கு அவர்களுக்கு? வேறு வழியில்லை, மனைவியிடம் சொல்லி விட வேண்டியதுதான். பக்குவமாக. மிகப் பக்குவமாக.
மனைவியை அழைத்து சூடாக ஒரு டீ கொடுத்தார். உடல்நிலையை விசாரித்தார். புதிய கணவனைப் பார்த்தது போல் அவள் கலவரத்துடன் “என்னங்க?” என்றாள். அவள் நெற்றியில் லேசாக வியர்வை. ராமநாதன் சொன்னார், “ரிலாக்ஸ். ரிலாக்ஸ். கூல்.” ஏசியை பதினெட்டில் வைத்தார். அவள் குளிர்ந்தாள்.
மெல்ல மெல்லச் சொன்னார். மூன்று மாதக் கனவுகளைச் சொன்னார். அவள் கண்கள் அகல விரிந்தன. கனவுகளின் வசீகரத்தில் அவளுக்கு வேர்க்கவில்லையோ. நிம்மதியானார். கடைசியாகச் சொன்னார், “ஒவ்வொரு கனவுலயும் என்னமோ நடக்குது. நம்ம உறவுக்காரங்க சுத்தி நிக்கறாங்க.” அவளது கண்களையே பார்த்தார்.
அவள் ஆச்சரியத்தோடு சொன்னாள்,
“எனக்கும் இதே கனவுங்க. அப்படியே டிட்டோ. அதே மூணு மாசமா. என்னால நம்பவே முடியலைங்க.
எப்படிங்க இது? அடிபட்டு கிடக்கிறது, ஆக்ஸிடெண்ட் ஆகி கிடக்கிறது ஆம்பளைக் கால்ங்க.”
ஏசியை மீறி ராமநாதனுக்கு நெற்றியில் வேர்த்தது.