வார்த்தை விளையாட்டு

பக்கத்து வீட்டுக்காரர் அவர். முதல்முறை அவர் பேசியபோது ஒன்றுமே புரியவில்லை. நாங்கள் அந்த வீட்டுக்குக் குடி வந்து இரண்டு மூன்று நாள்களில், என்னைப் பார்த்து அவர் சொன்னது இதுதான். ‘பக்கத்து வீட்ல யாரும் திருடலை.’ சிரித்துக்கொண்டே உள்ளே போனார். ஆள் தொளதொளவென கதர்ச் சட்டைதான் அணிவார். ஒரு முடி விடாமல் அனைத்தும் நரைத்திருந்தது. சோடா புட்டி கண்ணாடி அணிந்திருந்தார். முன்னே தெரிந்த இரண்டு பற்கள் பெரிய புளியங்கொட்டை சைஸில் இருந்தன. அதே நிறத்திலும். தலையை நடுவாக வகிடெடுத்துச் சீவி இருந்தார். மொத்தத்தில் எந்த வகைக்குள்ளும் சிக்காதவராக இருந்தார். அன்றுதான் முதலில் அவரைப் பார்க்கிறேன். அவர் பாட்டுக்கு ‘பக்கத்து வீட்ல யாரும் திருடலை’ என்று சொல்லிவிட்டுத் தன் வீட்டுக்குள் போய்விட்டார். யார் இவர், என்ன சொல்கிறார், யார் வீட்டில் திருடவில்லை, இது என்ன கதை என எதுவும் பிடிபடவில்லை.

பின்னர் கண்டுபிடித்தேன். அவர் எல்லாவற்றையும் வேண்டுமென்றே மாற்றி மாற்றிப் பேசுவாராம். அது ஒரு விளையாட்டு அவருக்கு. திருடி விட்டார்கள் என்றால் திருடலை என்பாராம். திடீரென ‘இன்னும் போஸ்ட் எரியலை’ என்பாராம். அதாவது தெருவில் உள்ள பொது விளக்கை ஈபிக்காரன் அணைக்கவில்லை, இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டுமாம். அவர் வீட்டில் இருந்து ஒரு குட்டிப் பெண்ணிடம் பேசிக் கண்டுபிடித்த கதை இதுவெல்லாம்.

எனக்கு வயது 40க்கு மேல். அவருக்கு 65 இருக்கலாம். நான் என்ன சின்ன பையனா என்னிடம் இப்படி விளையாட என்று தோன்றியது. பிறகு இப்படியும் ஒரு கேரக்டரா என்ற சுவாரசியம் வந்துவிட்டது.

அடிக்கடி எதாவது சொல்வார். கரண்ட்டு வந்துட்டு என்பார். கரண்ட் போயிருக்கும். கரண்ட் போயிட்டு என்பார், கரண்ட் வந்திருக்கும். ரசித்துப் பாடிக்கொண்டே ‘பாட்டு சகிக்கலை’ என்பார். மாப்பிள்ளை ரொம்ப நல்ல மாதிரி என்பார். ‘பத்தினி அவ’ என்பார். எப்படிப் புரிந்துகொள்வது என எனக்குத் திக்கென்று இருக்கும். ‘எங்க வீட்டு கிரண்டர் செமயா ஓடுது, உங்க வீட்ல ஓடலையா?’ என்பார். அதைப் புரிந்துகொள்ளவே எனக்கு ஐந்து நிமிடம் ஆகும். ஒருமுறை ‘நீங்க ரொம்ப ஒல்லி. நல்லா சாப்பிடுங்க’ என்றார். பதிலுக்கு நான் என்ன சொல்கிறேன் என்பதையெல்லாம் கவனிக்கக் கூட மாட்டார்.

ஒருதடவை அவரது வீட்டுக் குட்டிப் பெண் என்னிடம் சொன்னாள், ‘ஏந்தான் எங்க அப்பா எல்லாத்தையும் இப்படி மாத்தி மாத்தி பேசுதோ?’ நான் அதிர்ச்சியுடன் கேட்டேன், ‘உங்க அப்பாவா?’ அந்தக் குட்டிப் பெண் சொன்னாள், ‘தாத்தாதான். ஆனா அப்பான்னு சொல்வேன். அவர மாதிரியே’ என்றது அந்த ஆறு வயசுப் பிசாசு. கடுப்பாகிவிட்டேன். குடும்பத்திலேயே எதோ பிரச்சினை போல என நினைத்துக்கொண்டேன்.

நேற்று அதிகாலை அவர்கள் வீட்டில் எதோ சத்தம். அவர்கள் வீட்டில் சத்தம் என்றால் எங்கள் வீட்டில் தெளிவாகக் கேட்கும். ஆனால் இந்த முறை தெளிவில்லாமல் இருந்தது. ஓடிப் போய்ப் பார்த்தேன். அந்தப் பெரியவரின் மனைவியை ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அவருக்கு நினைவே இல்லை. பாவமாக இருந்தது. அவர்கள் வீட்டில் இன்னும் யாருடனும் அத்தனை பழகவில்லை என்பதால் என்ன ஏது என்று கேட்க கூச்சமாக இருந்தது.

இன்று காலை அவர்கள் வீட்டை எட்டிப் பார்த்தேன். வீட்டைப் பூட்டிக்கொண்டு அந்தப் பெரியவர் வேர்க்க விறுவிறுக்க வெளியே வந்துகொண்டிருந்தார். மருத்துவமனைக்குப் போகிறார் போல. அவரிடம் “வீட்ல எப்படி இருக்காங்க?” என்று வாய் தவறிக் கேட்டுவிட்டேன். அவர் பதில் சொல்வதற்குள் பதறியடித்து என்  வீட்டுக்குள் போய்க் கதவை மூடிக்கொண்டேன்.

#குறுங்கதை

Share

Comments Closed