மருத்துவமனையில் நல்ல கூட்டம். வெளியில் டாக்டருக்கு நல்ல கூட்டம் காத்திருந்தது. நர்ஸுகள் அங்கேயும் இங்கேயும் அலைபாய்ந்துகொண்டிருந்தார்கள்.
அறைக்குள்ளே டாக்டர் சேரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். இருந்தார் என்று சொல்வதைவிட இருந்தான் என்றே சொல்லவேண்டும். அத்தனை சின்ன பையன். கண்ணாடி இல்லை. வெள்ளை ஓவர் கோட் இல்லை. சிவப்பு நிறத்தில் சுருள் முடியுடன். கட்டம் போட்ட சட்டையை இன் செய்து, நன்கு அயர்ன் செய்யப்பட்ட பேண்ட்டுடன், எதிரில் அமர்ந்திருக்கும் மனிதரின் குறைகளைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவருக்கு வயது ஐம்பது இருக்கலாம். தலையில் ஒரு முடி கூட இல்லை. படபடவெனப் பேசினார்.
“ஒரே தொல்லை சார். ஒரு வயசுக்கு மேல போன்னு விட வேண்டாமா? ஆனா பெட்ரூமுக்குள்ள வரமாட்டார் சார். எதுவா இருந்தாலும் ஹால்லதான். நேத்து என்ன நைட் உன் ரூம்ல வளையல் சத்தம்னு கேப்பாரு சார். எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாருங்க! அப்பாவா சார் அவன்? ஒரு அளவில்லையா சார்? ஆனா என் பொண்டாட்டி கண்டுக்கிறதில்லை சார். அப்படி ஒரு ஜீவன் இல்லாத மாதிரியே நடந்துக்குவா. ஒவ்வொரு சமயம் கோவம் வரும். ஒவ்வொரு சமயம் அதுவும் நல்லதுக்குத்தான்னு தோணும் சார். நேத்து நைட் நடு ராத்திரில கதவ தட்றாரு சார். பெட்ரூம் கதவை. திறந்தா சும்மான்னு சொல்றார். என்னமோ ஆயிடுச்சு, டாக்டர்கிட்ட வான்னா, வரமாட்டேன்னு அடம் பிடிக்கிறாரு சார். என்ன பண்றதுன்னு தெரியல. எதுனா மருந்து கொடுங்க சார்.”
டாக்டர் சிரித்தார். “அப்படில்லாம் குடுக்க முடியாதுங்க. அவரை எப்படியாச்சும் கூட்டிட்டு வாங்க. பாத்துக்கலாம்.”
டக்கென நர்ஸ் கதவைத் திறந்து பார்த்தாள். சத்தம் வராமல் மூடிவிட்டுப் போனாள்.
டாக்டர் தொடர்ந்தார். “வயசான காலத்துல என்னவோ குழப்பம். ஈஸியா சரி பண்ணிடலாம்” என்றார். வந்தவர் அரை மனதாக எழுந்து போனார்.
அவர் போன வேகத்தில் ஒரு பெண் உள்ளே நுழைந்தாள். டாக்டருக்கு அதிர்ச்சியாக இருந்தது. டாக்டர் பேசும் முன் வந்தவள் சொன்னாள், “இப்ப வந்தாரே, அந்த ஆளோட பொண்டாட்டி சார் நானு.” அவளை அமரச் சொல்லி டாக்டர் கை காட்டினார். அவள் உட்கார்ந்தபடியே சொன்னாள், “ஒரே ரோதனை சார்.”
டாக்டர் சொன்னார், “ஆமா.. அவரும் சொன்னாரு. நீங்க..”
“சார், ரோதனை இந்தாளோட அப்பாவால இல்ல. அந்த ஆள் செத்து இருபது வருஷம் ஆச்சு. ரோதனை இந்தாளாலதான். அப்பா கூப்பிடறாரு அப்பா கூப்பிடறான்னு எப்ப பாரு..” என்றாள்.
டாக்டருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
திடீரென நர்ஸ் கதவைத் திறந்து பார்த்தாள். எதோ யோசனை வந்தவள் போல கதவை மூடிவிட்டுப் போனாள்.
டாக்டர் அமைதியாக இருந்தார். வந்தவளும் அமைதியாக இருந்தாள். மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் எழுந்து போனாள். டாக்டர் அவளைக் கூப்பிடவில்லை.
மீண்டும் கதவைத் திறந்து நர்ஸ் வந்து நின்றாள். டாக்டரின் கண்கள் அவளையே பார்த்தன. முன்பொருநாள் இதே அறையில், தான் உட்கார்ந்திருக்கும் சேரில் அவளைத் தள்ளி ஆவேசமாகக் கைகள் பரபரக்க எங்கும் பரவி.. டாக்டரின் முகம் வாடிப் போய் இருந்தது.
நர்ஸ் பின்னால் திரும்பிப் பார்த்தாள். கதவு மூடி இருந்தது. சேருக்கு நெருங்கி வந்து நின்று ஒரு நொடி சேரையே பார்த்தாள். சேரை கொஞ்சம் வாகாக இழுத்துப் போட்டு அதில் அமர்ந்தாள். அப்படியே சாய்ந்துகொண்டாள். அவள் கண்களில் ஒரு சொட்டு நீர் அரும்பி நின்றது.