சென்னைப் புத்தகக் கண்காட்சி முடிந்து இரவு பைக்கை எடுத்துக்கொண்டு வரும்போது ஒருவர் ட்ராப் கேட்டுக் கை காட்டினார். வயதானவராகத் தெரிந்தார். ஏற்றிக்கொண்டேன். நான் கிண்டி வழியாகத்தான் போவேன் என்பதால் கிண்டி ரயில்வே நிலையத்தில் இறக்கிவிடுவதாகச் சொன்னேன். சந்தோஷப்பட்டார். அன்று சீக்கிரமே வீட்டுக்குப் போய்விடலாம் என்றார். அவரது வீடு இருப்பது மறைமலைநகரில்.
கிண்டி போகும் வரை எதாவது பேசலாமே என்று கேட்க ஆரம்பித்தேன். அவரது கதையைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். அவருக்கு இப்போது வயது 65 இருக்கலாம். பதிப்பகத்துறையில் நெடுங்காலமாக இருக்கும் ஒரு ஆன்மிகப் பதிப்பகத்தில் வேலை செய்கிறார். முதல் நாள் அச்சுக் கோர்க்கும் வேலையில் சேரும்போது அவருக்குச் சம்பளம் 30 ரூபாயோ என்னவோ சொன்னார். அவரது 58வது வயதில் அந்தப் பதிப்பகம் அவரை ஓய்வு பெறச் சொல்லிவிட்டது. அப்போது அவர் வாங்கிய சம்பளம் பனிரெண்டாயிரம் ரூபாய் வரை இருக்கலாம். அவர் பதிப்பகத்தின் கடை விற்பனையில் உதவியாளராக இருந்து ஓய்வுபெறுகிறார். பின்னர் அவரை மீண்டும் பணிக்கு எடுத்துக்கொண்டது அதே பதிப்பகம். சம்பளம் மாதத்துக்குப் பத்தாயிரம். பிடித்தம் அது இது எதுவும் கிடையாது. காண்ட்ராக்ட்டில் வேலை. அவர் வேலை செய்த 30+ வருடங்களுக்குமாகச் சேர்த்து அவர் ஓய்வு பெறும்போது ஒன்றரை லட்சம் ரூபாய் வரை அந்தப் பதிப்பகம் கொடுத்திருக்கிறது. அதை வைத்து அவரது மகனின் படிப்பைச் சமாளித்துவிட்டார் இவர். பையன் டிப்ளமோ முடுக்க, பதிப்பகத்தின் முதலாளியே பையனுக்கு ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்துவிட்டார். பதிப்பகத்தைப் பற்றி மிக உயர்வாகச் சொன்னார் இவர். அந்தப் பதிப்பகம் பழங்கால நடைமுறையில் உள்ள சிறிய பதிப்பகம். முதலாளி – தொழிலாளி வித்தியாசம் எல்லாம் அப்படியே இன்னும் இருக்கும் ஒரு பதிப்பகம். இவருக்கு அதிலெல்லாம் பெரிய புகார்கள் இல்லை. இத்தனை செய்ததே அவருக்குப் பெரிய உதவியாக்த் தெரிகிறது. அதிலும் குறிப்பாக மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொண்டதைச் சொல்லிக்கொண்டே வந்தார். போக வர பஸ்ஸுக்குப் பணமும் டீக்கு காசும் கொடுத்துவிடுவார்கள் என்றார். அந்தப் பதிப்பகத்தை மிகவும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
கிண்டியில் இறங்கிக்கொண்டவரின் முகத்தைக் கூடச் சரியாகப் பார்க்கமுடியவில்லை. அத்தனை போக்குவரத்து நெரிசல். நன்றி சொல்லிவிட்டுப் போனார்.
இது நடந்து இன்னும் சிறிது நாள் கழித்து இன்னொருவரைத் தற்செயலாகப் பார்த்தேன். அவர் ஒரு கம்யூனிஸ சிந்தனையுள்ள பதிப்பகத்தில் வேலை பார்த்தவர். கிட்டத்தட்ட 25 வருடங்களாக. மிகவும் வருத்தத்துடன் சொன்னார், ‘ஒரே நாள்ல தூக்கிட்டாங்க சார்’ என்று. என்ன காரணம் என்பதெல்லாம் இங்கே வேண்டாம். என்னவோ கருத்து வேறுபாடு. இவரும் மிகவும் அடிமட்டத் தொழிலாளியே. ’25 வருஷம் வேலை பாத்ததுக்கு எதாவது தருவாங்கன்னு காத்துக்கிட்டு இருக்கேன்’ என்றார். அவரால் ஒரே நாளில் தான் தூக்கப்பட்டதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பாவமாக இருந்தது. அவருக்கு செட்டில்மெண்ட் ஆனதா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. நிச்சயம் ஆகி இருக்கும் என்றே நம்புகிறேன்.
இந்த இரண்டும் ஒரு உதாரணம் மட்டுமே. இதனால் கம்யூனிஸப் பதிப்பகங்கள் மிக மோசம் என்றோ, முதலாளி மனப்பான்மை உள்ள பதிப்பகங்கள் மிகவும் யோக்கியம் என்றோ நான் சொல்ல வரவில்லை. ஆனால் இங்கே சொல்லப்படுவது போல முதலாளி பதிப்பகமெல்லாம் மோசம், கம்யூனிஸப் பதிப்பகம் என்றால் யோக்கியம் என்பதுவும் உண்மை அல்ல என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன். ஒரு வியாபாரம் என்பதற்குள் வந்துவிட்டால் கொள்கை எல்லாம் எப்படி ஓடி விடும் என்பதற்காகவே சொன்னேன். பதிப்பகத்துறை என்றல்ல, எல்லா வியாபாரத்திலும் இதுதான் நிலைமை.
வண்டி வண்டியாக கம்யூனிஸப் பாடம் எடுப்பார். அவர் தனது வியாபாரத்திலோ அல்லது வேலையிலோ தொழிலாளிகளிடம் எப்படி நடந்துகொள்வார் என்பதை யாராலும் சொல்ல முடியாது. உண்மையிலேயே கோட்பாட்டின்படியே நடந்துகொள்பவர்களும் உண்டு. இது இது இப்படித்தான் என்று வரையறுக்க முடியாது. இதுதான் யதார்த்தம்.