கையெழுத்து – குறுங்கதை

கையெழுத்து

அந்த அண்ணனின் பெயரை முத்து என்று வைத்துக்கொள்ளலாம். உண்மையான பெயர் என்ன என்பது இப்போது எனக்கு நினைவில்லை. இது நடந்து 30 வருடங்கள் ஆகப் போகிறது. அப்போது எனக்கு 15 வயது இருக்கலாம். நாங்கள் மதுரையில் அழகரடியில் இருந்தோம். திடீரென முத்து அண்ணன் ஒருநாள் என்னிடம் தனியாகப் பேசவேண்டும் என்றான். என்னை மதித்துத் தனியே பேசவேண்டும் என்று யாரும் அதுவரை சொன்னதில்லை. எங்கள் காம்பவுண்ட்டில் என் வயதில் இருக்கும் வயசுப் பெண்கள் அதிகம் என்பதால், இப்படி அழைக்கிறானே, எவளையாவது பிடிச்சிருக்குன்னு சொல்வானோ என்று திகிலாக இருந்தது. அவன் பக்கம் போகாமலேயே தவிர்த்தேன்.

முத்து அண்ணனுக்கு மாரி அக்கா என்றொரு அக்கா இருந்தாள். அந்த வட்டாரத்திலேயே ஆங்கிலம் நன்றாகப் பேசுபவள் அவள்தான். ஹவ் டூ யூ டூ என்று கேட்கவேண்டும் என்று என் நண்பர்களுக்குச் சொல்லித் தருவாள். அவர்கள் மறக்காமல் ஹவ் ஆர் யூ டூ என்றே கேட்பார்கள். மாரி அக்கா‌ அழகாகச் சிரிப்பாள். என் மேல் பாசமாக இருப்பாள். ஏனென்றால் நான் ஒருவன் மட்டுமே ஹவ் டூ யூ டூ என்று சரியாகச் சொல்வேன். அந்த மாரி அக்கா ஒருநாள் என்னிடம், என் தம்பி ஒன்கிட்ட பேசணும்னு சொன்னானாமே என்று கேட்டாள்.

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. எங்கள் வீடு இருந்த காம்பவுண்டின் இன்னொரு மாடி வீட்டில் நானும் முத்து அண்ணனும் சந்தித்தோம். பக்காவாக ஒரு டெஸ்க் போட்டு, அதன் அருகே உட்கார்ந்திருந்த அண்ணன் பக்கத்தில் ஒரு பேப்பரும் பேனாவும் இருந்தது. காப்பி குடிக்கிறியாடா என்று கேட்டான். ஓடிப் போய் டீ போட்டு எடுத்து வந்தான். டீ கண்றாவியாக இருந்தது. வாயில் வைக்க முடியவில்லை. ஆனால் ஏன் எனக்கு டீ? மெல்லச் சொன்னான். ஒரு லெட்டர் எழுதணும்டா. எழுத்து மேஜையை என் பக்கம்‌ திருப்பினான்.

நான் அந்த வட்டாரத்திலேயே நன்றாகப் படிப்பவன் என்று அறியப்பட்டவன். நானும் அதை நம்பினேன். லெட்டர் எழுதுவது கஷ்டமா? எனவே உடனே எழுத ஒப்புக்கொண்டேன். கொஞ்சம் பெருமை வேறு எனக்குள். லவ் லெட்டர்டா என்றான். ஒருவன் லவ் லெட்டர் எழுதுவதை முதன்முதலில் அப்போதுதான் நேரடியாகப் பார்க்கிறேன். அதுவரை சினிமாவில் பார்த்ததோடு சரி. லேசாக உதறல் எடுக்க ஆரம்பித்தது. ஒனக்கு என்ன தோணுதோ எழுதிக் குடு, ஸ்கூல்ல கட்டுரைப் போட்டில ஃபர்ஸ்ட்டாம்ல என்றான். எனக்கு இதெல்லாம் வராது என்று அரை மனதாகச் சொன்னேன். சரி, நீ சொல்லு, நான் எழுதிக்கிறேன் என்று அடுத்த குண்டைப் போட்டான். அவன் முகம் வேர்வையில் குளித்திருந்தது. நல்ல கருப்பு. அவன் தலையில் முடிகள் குத்திட்டு நின்றன. நான் சொல்றதா? யூ மீன் மீ? உன் காதலை நான் சொல்றதா? ஐயோ என்றேன். அவன் விடவே இல்லை. கடைசியாக அவனே எழுதுவதாகவும் தவறுகளைத் திருத்தினால் போதும் என்றும் சொன்னான். அவன் எழுதிய லவ் லெட்டரைப் படித்திருந்தால் நிச்சயம் அந்தப் பெண் தூக்கு போட்டுச் செத்திருப்பாள். ஏனென்றால் தவறு இல்லாத ஒரு வார்த்தை கூட அதில் இல்லை.

நான் மெல்ல சொன்னேன். ரொம்ப தப்பு இருக்குண்ணே. ‘அதுக்குத்தாண்டா உன்ன வரச்சொன்னேன். அப்ப சரி, நீயே எழுது, நான் சொல்றேன்’ என்று சொல்லிவிட்டான். அவன் காதலிக்கு அவன் கையெழுத்தில் கடிதம் போகவேண்டும் என்கிற அவனது கனவு கலைந்தது. என்னவெல்லாமோ சொன்னான். அத்தனையும் மதுரைத் தமிழில் இருந்தது. அதை எப்படி அப்படியே எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு தமிழே வராதோ என்ற எண்ணமெல்லாம் வந்தது. எப்படியோ ஒரு வழியாக எழுதிக் கொடுத்தேன். உடம்பெல்லாம் பதற்றமாக இருந்தது. ஒரு ஓரத்தில் பெரிய சாதனை செய்துவிட்டதைப் போல கெத்தாகவும் இருந்தது. இந்த விஷயம் மட்டும் வீட்டுக்குத் தெரிந்தால் டெட் பாடி ஆகிவிடுவேன் என்பதில் இரண்டாம் கருத்தே கிடையாது. அவனிடம் தயங்கி தயங்கி ‘யார்கிட்டயும் சொல்லிடாதீங்க’ என்று சொல்ல எத்தனித்தபோது அவன் சொன்னான், ‘தம்பி, வீட்ல மட்டும் சொல்லிராத, பொலி போட்ருவாங்க.’

மறுநாள் காம்பவுண்டே அல்லோலப் பட்டது. யாரோ யாருக்கோ லவ் லெட்டர் கொடுத்து விட்டார்களாம். அரண்டுவிட்டேன். அதுவரை இருந்த பெருமிதமெல்லாம் போய் எனக்குள் பயம் மட்டுமே இருந்தது. அந்தத் தெருப் பையன் ஒருத்தன் லெட்டர் கொடுத்துவிட்டான். அதுவும் எங்கள் காம்பவுண்ட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு. யார்? முத்து அண்ணா? எனக்கு சூனியம் வைத்தே விட்டானா? கைகால் உதறல் நிற்கவே இல்லை. காம்பவுண்ட்டில் இருக்கும் அனைத்து ஆண்களும் அந்தப் பையன் வீட்டுக்குப் போனார்கள். அவனது அக்கா கடுப்பில் கையில் இருந்த அப்பளக் குழவியை வீசி எறிந்தாள். வந்தவர்கள் மீது அல்ல, லவ் லெட்டர் கொடுத்த தன் தம்பி மீது. அவன் விலகிக் கொள்ள, ஏற்கெனவே ஓட்டையாக இருந்த டிவியில் அப்பளக் குழவி பட்டு அந்த டிவியின் டிஸ்ப்ளே மொத்தமாக நொறுங்கிப் போனது. அவன் அந்தக் கடிதத்தில் எழுதி இருந்த இரண்டே வரிகள், ‘அழகா இருக்க, பிடிச்சிருக்கா?’

கடிதம் கொடுத்தது முத்து அண்ணன் இல்லை. வேறொருத்தன். எனக்கு உயிர் வந்தது. இரண்டே வரிக்கு இத்தனை ஆர்ப்பட்டம். நான் எழுதியது பத்து பக்கமாவது இருக்கும். அவன் எப்படி தலை வாரிக் கொள்வான், என்ன சாப்பிடுவான், எப்படித் தூங்குவான், எந்தக் கடையில் சாப்பிடுவான், அவளுக்கு அவனே டீ போட்டுத் தருவான் தொடங்கி ஒவ்வொரு நிமிடத்தையும் அந்த லெட்டரில் என்னை எழுத வைத்திருந்தான் முத்து அண்ணன்.

நான் பயந்து செத்துக் கொண்டிருந்தேன். ஆனால் முத்து அண்ணனை ஆளைக் காணவில்லை. மெல்ல விசாரித்ததில் அவனது அக்கா மாரி அக்கா யாருடனோ ஓடிப் போய் கல்யாணம் செய்துகொண்டுவிட்டாள் என்று தெரிந்தது. அதாவது நான் முத்து அண்ணனுக்கு காதல் கடிதம் எழுதிக் கொடுத்த தினத்தன்று மாரி அக்கா ஓடிப் போயிருக்கிறாள். இரண்டு நாள் வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். பின்னர் விஷயம் வெளியே வந்துவிட்டது.

அப்புறம் முத்து அண்ணன் என்னவானான் என்பது பற்றி கொஞ்ச நாள் தகவலே இல்லை. பின்னர் மாரி அக்கா அதே தெருவில் குடி வந்தாள். வழக்கம்போல ஹவ் டூ யூ டூ என்றாள். நான் அவளிடம் முத்து அண்ணனைப் பற்றிக் கேட்கவே இல்லை. சில வாரங்கள் கழித்து முத்து அண்ணன் எதுவுமே நடக்காதது போல மாரி அக்கா வீட்டுக்கு வந்தான். என் கண்ணில் அவன் பட்டபோது என்னைத் தெரிந்ததாகக் கூடக் காட்டிக் கொள்ளவில்லை. எந்த அளவுக்கு என்றால், எனக்கே இப்படி ஒரு சம்பவம் நடந்ததா இல்லையா என்னும் சந்தேகம் வரும் அளவுக்கு. கேவலமான‌ டீயுடன் கேவலமான வரிகளைப் பத்துப் பக்கம் மாங்கு மாங்கென்று இந்தக் கருப்பனுக்காக எழுதி இருக்கிறேன். அந்தப் பெண்ணுக்குக் கொடுத்தானா? அவள் என்ன சொன்னாள்? என் தலை வெடித்துவிடும் போல இருந்தது. ஆனால் முத்து அண்ணன் கண்டுகொள்ளவே இல்லை, நாங்கள் மதுரையை விட்டுக் காலி செய்யும் வரை.

இதெல்லாம் நடந்து இருபது வருடங்கள் கழித்து அழகரடியைச் சுற்றிப் பார்க்கப் போனேன். நாஸ்டால்ஜியா. கூடவே ஒரு பழைய தோஸ்த்தும் என்னுடன் வந்தான். ஒரு தெருவில் பெட்டிக் கடை வைத்திருந்தான் முத்து அண்ணன். அவனுக்கு என்னை அடையாளமே தெரியவில்லை. அவனிடம் அது இது என என்னவெல்லாமோ வாங்கினேன். எவ்ளோ ஆச்சுண்ணே என்றேன். ஒரு பேப்பரில் எழுதி ஒரு தொகை சொன்னான். அந்தத் தாளை வாங்கிப் பார்த்தேன். வேண்டுமென்றேதான் வாங்கிப் பார்த்தேன். நீண்ட நேரம் கூட்டிப் பார்த்தேன். கணக்கு தப்பா இருக்கே என்று அவனிடம் சொன்னேன். இது நாப்பது, இது இருபத்து ஏழு என்று ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டிச் சொன்னான். உங்க கையெழுத்தே புரியலைண்ணே என்றேன். நான் சொல்றேன், நீங்களே எழுதிக் கூட்டிப் பாருங்க என்றான் முத்து அண்ணன். சிரித்துக் கொண்டே பணத்தைக் கொடுத்துவிட்டு, சற்று தள்ளி வந்து, கூட வந்த நண்பனிடம் சொன்னேன், “கையெழுத்து அப்படியே இன்னும் கிறுக்கலாவே இருக்கு பாரு. அதுக்குத்தான் அவன் ஆளுக்கு லவ் லெட்டர் எழுத என்ன கூப்ட்ருக்கான் போல.’ அவன் ஆச்சரியமாகக் கேட்டான், ‘ஒன்னயுமாடா எழுதச் சொன்னான்?’

#குறுங்கதை

Share

Comments Closed