சிலரது அனுபவங்களைப் பார்க்கும்போது அல்லது கேட்கும்போது பொறாமையாக இருக்கும். என்னுடைய பதின்ம வயதில் ஒரு மாமா காயத்ரி மந்திரத்தின் பெருமையைச் சொன்னார். ஒரு தந்தை இறக்கும் தருவாயில் தன் மகனிடம் சொல்கிறார் காயத்ரி மந்திரத்தைத் தவறாது சொல்லவேண்டும் என்று. மகனும் அப்படியே செய்கிறான். மகன் பெரிய விமானி ஆகிறான். ஒருமுறை விமானம் ஓட்டும்போது காலநிலை மோசமாகி விமானம் கட்டுப்பாட்டை இழக்கிறது. விமானி தன் வாழ்க்கை முடிந்தது என்று அப்படியே அமர்ந்துவிட்டார். பின்னால் இருந்து யாரோ தட்டிக் கூப்பிடுகிறார்கள். அப்பா! காயத்ரி மந்திரம் சொல்டா என்கிறார். விமானி சொல்கிறார். எப்படியோ விமானம் தப்பிக்கிறது. விமானி உயிர் பிழைக்கிறார். பின்னால் திரும்பிப் பார்க்கிறார், அங்கே யாரும் இல்லை. இதைச் சொல்லும்போது அந்த மாமா உணர்ச்சி பெருக கண்ணில் நீர் வழியச் சொன்னார். அவரது கையில் முளைத்திருந்த மயிர்கள் எல்லாம் புல்லரித்துப் போய் நின்றன.
நான் இதை நம்புகிறேன் நம்பவில்லை என்பதல்ல விஷயம். ஆனால் நான் நிச்சயம் அந்த மாமாவை நம்புகிறேன், பொய் சொல்ல அவருக்குத் தேவையே இல்லை என. என்ன பிரச்சினை என்றால், என் வாழ்க்கையில் இப்படி ஒரு தடவை கூட நடந்ததில்லை. இதைப் பொறாமை என்றுகூட வைத்துக்கொள்ளுங்கள்.
‘கனவில் மல்லிகைப் பூ வைத்து பச்சைப் புடைவை கட்டி ஒரு குழந்தை வந்தது, எப்டி இருந்தான்ற, வா வான்னு கூப்பிடறேன், போய்க்கிட்டே இருக்கா, என்னடான்னு பார்த்தா, மறுநாள் அம்பாளை சப்பரத்துல தூக்கிட்டு வர்றாங்க, அதே மல்லிகைப் பூ, அதே பச்சைப் புடைவை’ என்று யாராவது சொல்லும்போது வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருப்பேன். ‘எனக்குத் தெரியாதா அது எங்க வீட்டுப் பூனை’ன்னு ஒரு நண்பர் சொன்னார். எந்தப் பூனையைப் பார்த்தாலும் முப்பது வருடங்கள் முன்பு நான் வளர்த்த பூனைகள் போலத்தான் எனக்குத் தெரியும்.
இப்படிப் பேசுகிறவர்கள் எல்லாரிடமும் ஒரு ஒற்றுமை உண்டு. அனைவரும் இதை ஒரு புதிர் போலப் பேசுவார்கள். ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு விஷயத்தை விவரிப்பார்கள். ஒருவர் சொன்னார், கண்ணாடியில் கண்ட அவரது உருவம் அவரைப் பார்த்துச் சிரித்ததாம். எதோ ஒரு தேவ விளையாட்டு என்றார். எனக்கு பக்கென்று இருந்தது. இன்னொருவர் சொன்னார், ‘எல்லாமே எழுதி வெச்சிருக்குங்க. நமக்கு படிக்க தெரியலை, அவ்வளவுதான்’ என்று. எங்கே எழுதி வெச்சிருக்கு, என்ன படிக்கத் தெரியலை என்று நான் ஏன் கேட்கப் போகிறேன். சரிங்க என்று சொல்லிவிட்டேன். இன்னொருவர் சொன்னார், அவரது கனவில் வந்த ஒரு பெண்ணை மறுநாள் நேரில் கண்டதாக. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரே மனிதரை ஐந்து நிமிட இடைவெளியில் பார்த்தாலும் கூட எனக்கு சட்டென அடையாளம் பிடிபடுவதில்லை. இதில் கனவில் வந்த பெண்ணை மறுநாள் பார்ப்பதெல்லாம் என் வாழ்நாளில் நடக்காது என்று நினைத்துக்கொண்டேன்.
அப்போது நிஜமாகவே ஒரு குரல் கேட்டது. தேவ விளையாட்டுக் கணம் நிகழ்ந்தே விட்டது. மாடியை நோக்கிப் பார்த்தேன். அந்தப் பெண் புன்னகைத்தாள். என்றோ கனவில் கண்ட மறக்கவே முடியாத அந்த முகம். அதே முகம். மெல்ல அவள் முகம் மாறியது. ‘அடிக்கிற வெயில்ல என்ன திருதிருன்னு ரோட்ல நின்னு முழிக்கிறீங்க, வீட்டுக்குள்ள வாங்க. உங்களோட..’ என்றாள்.