செத்தும் ஆயிரம் பொன்

சின்ன வயதிலேயே குடும்பத்தோடு விரட்டிவிட்ட பாட்டியைத் தேடி வரும் பேத்தியும் பாட்டியும் உண்மையைப் புரிந்துகொண்டு ஒன்றாகச் சேரும் கதை. பாட்டி ஒப்பாரி வைப்பவள். பேத்தி சினிமா மேக்கப் ஆர்ட்டிஸ்ட். பேத்திக்கு ஐந்து வயதாக இருக்கும்போதே கல்யாணம் செய்து வைக்க முயலும் பாட்டி. அந்தக் கல்யாணப் பையன் பேத்தியின் அத்தைப் பையன் தான். அவன் சடலங்களுக்கு அழகு செய்பவன்.

படத்தில் பிடித்ததைச் சொல்லிவிடலாம். இரண்டு காட்சிகள் மிக நன்றாக வந்துள்ளன. கூத்தியாளுடன் சல்லாபிக்கப் போகும் ஒருவன் அந்த இரவில் அவள் மேலேயே சரிந்து இறந்துபோக அங்கேயே இறுதிச் சடங்கு நடக்கிறது. அப்போது அவனது மனைவிக்கும், அவனது தொடுப்பிற்கும் நடக்கும் சண்டை. இந்தக் காட்சி நன்றாக வந்திருக்கிறது.

இறுதிக் காட்சிக்கு முந்தைய காட்சியில் சினிமாவில் மேக்கப் போடும் ஒரு காட்சி வருகிறது. அது இயல்பான காட்சியாக இருக்கிறது.

இந்த இரண்டு காட்சிகளை விட்டுவிட்டால், படம் முழுக்க எதோ ஒரு செயற்கைத்தனம் துருத்திக்கொண்டே இருக்கிறது. ஒன்று காட்சியில், அல்லது நடிகர்களின் நடிப்பில், அல்லது செயற்கையான வசனங்களில். இப்படி எதோ ஒன்று செயற்கையாக இருக்கிறது. சில நடிகர்கள் நன்றாக மதுரை வட்டாரத் தமிழ் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று நெல்லைத் தமிழில் பேசிவிடுகிறார்கள். கிராமத்து மக்கள் ஆங்கிலம் கலக்க மாட்டார்கள் என்பதால் தமிழைப் புகுத்தி இருக்கிறார்கள். ஆங்கிலம் பேசாமல் அதே சமயம் எப்படி இயல்பான தமிழில் பேசுவார்கள் என்பதைத் தெரிந்துகொண்டிருக்கலாம். பாட்டியைப் பார்க்க வரும் பேத்தி ஏன் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மேக்கப் கிட்டையும் கையிலேயே சுமந்துகொண்டிருக்கிறார் என்பதெல்லாம் புரியவே இல்லை.

ஸ்ரீலேகா என்ற தொலைக்காட்சிக் கால நாடக நடிகை பாட்டியாக நடித்திருக்கிறார். இவர் நாடகங்களில் கூட நன்றாக நடிக்கமாட்டார். இந்தப் படத்திலும் அப்படியே.

உண்மையிலேயே ஒப்பாரி வைப்பவர்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர்கள் வைக்கும் ஒப்பாரி இயல்பாக இருக்க, ஸ்ரீலேகா வைக்கும் ஒப்பாரியும் அதில் வரும் வசனங்களும் மிகச் செயற்கையாக இருக்கின்றன. ஒட்டவே இல்லை.

பேத்தியாக வரும் நிவேதிதா நன்றாக நடித்திருக்கிறார். மாடர்ன் பெண் என்பதால் சிகரெட் பிடிக்கிறார். கிராமத்தில் இருக்கும் பெண்ணுக்கு சிகரெட் பிடிக்க கற்றுத் தருகிறார். பாட்டி சுருட்டே பிடிப்பாள் என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள்.

இறுதிக் காட்சியில் பாட்டி செத்துப் போக பேத்தி கிராமத்துக்கு வந்து ஒப்பாரி வைக்கிறாள்.

சில படங்களை யார் ஏன் இயக்குகிறார்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கும். இப்படியான படங்களை எடுப்பவர்களை நினைத்துப் பார்ப்பேன். தியேட்டர் கிடைக்கப் போவதில்லை. போட்ட பணம் வரப் போவதில்லை. ஆனால் எதோ ஒரு ஆர்வத்தில் எடுக்கிறார்கள். அதைப் பாராட்ட வேண்டும். இந்தப் படமும் அந்த வகையறாதான்.

படத்துக்குப் பின்னணியாகக் காட்சிகள் வரவேண்டும். அதில் விவரணைகள் வரவேண்டும். விவரணைகளைக் காட்டுவதற்காகவே படத்தை எடுத்தால் என்னாகும் என்பதை இந்தப் படத்தில் பார்க்கலாம். கிராமத்தில் நிகழும் சாவை ஒட்டி நடக்கும் காட்சிகளைத் தத்ரூபமாகக் காண்பிக்கிறேன் என்று முதல் 25 நிமிடங்களில் நம்மைச் சோதித்துவிட்டார்கள். அதிலும் செயற்கையான நடிப்பு, செயற்கையான வசனம் வேறு. இதில் பாதியில் ஒரு குழந்தையைக் கொன்று அதற்கு யார் சாயம் பூசுவது என்ற மனப் போராட்டத்தை விவரிக்கிறேன் என்று படுத்திவிட்டார்கள். கொடூரமான கற்பனை இதெல்லாம்.

கலைத் திரைப்படம் என்பது எதையாவது கதையாகச் செய்து, அதன் பின்னணியை சம்பந்தமே இல்லாமல் விரிவாகக் காண்பிப்பது அல்ல. அதில் இயல்பும் உயிரும் இருக்கவேண்டும். இந்த இரண்டுமே இந்தப் படத்தில் இல்லை.

Share

Comments Closed