தாராள பிரபு – விமர்சனம்

18+ கதையைக் கையாளும் திரைப்படம்.

விக்கி டோனர் என்ற ஹிந்திப் படத்தை எந்த அளவுக்குக் கூறு போட முடியுமோ அந்த அளவுக்குக் கூறு போட்டிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து. ஒரு திரைப்படத்தை ரீமேக் செய்யும்போது அதை அப்படியே எடுத்தாலும் (பின்க் – நேர்கொண்ட பார்வை) சரி, முடிந்த அளவுக்கு மாற்றி எடுத்தாலும் சரி, அதை வன்கொலை செய்துவிடும் திறமை நம் தமிழ் இயக்குநர்களுக்கு இருக்கிறது. ஆனால் அதில் குறியீடுகளைப் புகுத்துவதில் மட்டும் களைப்படைவதில்லை.

விபூதி வைத்துவிடும் ஒரு அம்மா. பையன் (ஹரீஷ் கல்யாண்) வீட்டுக்கு வெளியே வந்ததும் அதை உடனே அழிக்கிறான். இதைக் காட்டுவதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது நம் இயக்குநர்களுக்கு. சந்தோஷம் மட்டும் அல்ல, வேறு எதோவும் இருக்கிறது. (‘பிரேம் ப்யார் காதல்’ படத்தில் இதே ஹரீஷ் கல்யாண் தேவையே இல்லாமல், சிலுவை அணிந்த டீ ஷர்ட்டுடன் வந்தார்!) விவாகரத்தான பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறான் தன் மகன் என்று தெரிந்ததும் அம்மா சொல்லும் வசனம், “நீ மதம் மாறி கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட பிரச்சினை இல்லை. இது எப்படிடா?” இந்த வசனத்துக்கு நியாயம் சேர்ப்பது போல, அந்தக் குடும்பம் ஒரு ஆர்த்தடக்ஸ் குடும்பமும் அல்ல. ‘நாங்கலாம் ரொம்ப முன்னேறிட்டோம்’ என்று வசனம் வேறு வருகிறது. இந்தக் குடும்பம் ஒரு சிங்கிள் பேரண்ட்டால் வளர்க்கப்படும் குடும்பமும் கூட!

படமாகப் பார்த்தால் – விவாகரத்தான பெண் என்று வைத்திருப்பது பெரிய மைனஸ். ஹிந்தியிலும் இப்படித்தான். ஆனால் ஹிந்தியில் focus வேறு. தமிழில் வேறு வகையாக எடுத்ததில் படமே பெரிய அளவில் அடி வாங்கி இருக்கிறது. ஒரு விவாகரத்தான பெண்ணுக்கு, தன் கணவன் விந்துக் கொடையாளராக (ஸ்பெர்ம் டோனர்) இருப்பதில் என்ன பெரிய பிரச்சினை என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு வருகிறது. இதனால் ஒரு பெரிய பரபரப்பு வராமல் போகிறது. குழந்தையே முக்கியம் என்று சரியாக ஹீரோயின் பாத்திரத்தை வடிவமைத்த இயக்குநர், தன் கணவர் விந்துக் கொடையாளர் என்றால் அந்தப் பெண் அதிர்ச்சி அடையவேண்டிய அளவுக்கும் அந்தக் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்க வேண்டும். ஆனால் அதில் இயக்குநர் கோட்டை விட்டுவிட்டார்.

அதே போல் ஒரு வேலை கிடைப்பதற்காக ஹீரோ இப்படியெல்லாம் செய்கிறான் என்கிற காரணங்கள் எல்லாம் தேவையே இல்லாதவை. அதிலும் அத்தனை தடவை விந்துக் கொடை கொடுத்த பின்பு! திருமணத்துக்கு ஒரு கன்னடக் குடும்பமும் தமிழ் பாரம்பரிய சைவைக் குடும்பமும் (பிராமணர்கள் என்று நேரடியாகக் காட்டவில்லை!) பேசிக்கொள்ளும் வசனங்கள் எல்லாம் தேவையே இல்லாதவை. அடுத்த மைனஸ், க்ளைமாக்ஸ். புன்னகையை வரவழைக்கும் அதே ஹிந்தி க்ளைமாக்ஸ்தான் என்றாலும், தமிழில்  இந்தக் காட்சி அடிப்படையே கேள்விக்குள்ளாகிறது. தன் கணவன் மீது எரிச்சலில் இருக்கும் மனைவி முன்பு அவனது 49 குழந்தைகளையும் அவள் பார்க்கும்போது மனம் மாறுவதாகக் காட்டுவதெல்லாம் நம்பக்கூடியதாக இல்லை.

தன் குழந்தையே தனக்குக் கிடைப்பது போல் எடுத்திருப்பதெல்லாம் அபத்தம். ஹிந்தியிலும் இப்படித்தான். ஆனால் இதை ஹிந்தியில் கடைசியில் வைத்தார்கள். தமிழில் இதை முன்னரே கொண்டு வந்து அது தொடர்பான பாசக் காட்சிகளை எல்லாம் செருகிவிட்டார்கள். ஹிந்தியிலும் சரி, தமிழிலும் சரி, உண்மையில் இப்படி எடுத்திருப்பது படத்தின் ஆதாரக் கருத்துக்கே எதிரானது.

படத்தில் வேறு சில பிரச்சினைகளும் உள்ளன. விந்துக் கொடை தொடர்பான அறிவியலுக்குப் புறம்பான கருத்துகள். தத்து எடுப்பது என்பது பக்கத்துக் கடையில் போய் காய்கறி வாங்கிக் கொண்டு வருவது போல எளிதானது என்று காட்டுவது. தன் விந்து மூலம் பிறந்த குழந்தையைத் தெரிந்து கொள்வது. இப்படிப் பல காட்சிகள் கதைக்காகப் புனையப்பட்டுள்ளன.

படத்தின் ப்ளஸ் என்ன? 18+ படம், ஆனால் காட்சிகளில் ஆபாசமில்லாமல் எடுத்திருக்கிறார்கள். ஹரீஷ் கல்யாண் நடித்திருந்தும் ஆபாசமில்லாமல் இருக்கிறது என்பது அதிர்ச்சிதான். அதுமட்டுமல்ல, ஹரீஷ் கல்யாண் மிக நன்றாக நடித்திருக்கிறார். இப்படி ஒரு ஹீரோவும் தமிழுக்குத் தேவைதான். கௌதம் கார்த்திக் போன்றவர்கள் மிக ஆபாசமாக நடிக்க, ஓரளவுக்கு ரசிக்கும்படியான இளமையான ரொமாண்டிக் படங்கள் என்ற அளவில் நின்றுகொள்ளும் விவேகம் ஹரீஷ் கல்யாணுக்கு இருக்கிறது.

விவேக் வரும் காட்சிகள் கலகலப்பாக இருக்கின்றன. ஹிந்துக் கடவுளை வழிபடும் ஆன்மிக வாதியாக வந்தும் ஹிந்துக் கடவுள்கள் யாரையும் திட்டவில்லை. இதுவும் ஒரு அதிர்ச்சிதான். ‘எங்கயோ போயிட்டீங்க’ சிவாஜி மிகச் சில காட்சிகள் வந்தாலும், அவருக்கு இது முக்கியமான படமாக இருக்கும்.

18+ கதையை எடுத்துக்கொண்டு ரகளையான திரைக்கதையை அமைத்திருக்க வேண்டும். ஆனால் படம் தொடக்கம் முதலே தேவையே இல்லாமல் மெல்லப் போகிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் அழுது வடிகிறது. கலகலப்பான தொடக்கம், இறுக்கமான இறுதி என்று எடுத்திருந்தால் கொஞ்சம் எடுபட்டிருக்கும். அடிப்படைகளையே சிதைக்கும் திரைக்கதையாலும் இயக்கத்தாலும் படம் அடிபட்டுப் போய்விட்டது.

பின்குறிப்பு: மதுவந்தி நடித்திருக்கிறார். செல்ஃபி வீடியோவில் எப்படி சம்பந்தமே இல்லாமல் பேசுகிறாரோ அப்படியேதான் படத்திலும். இவர் ஏன் வருகிறார், இவர் யார் என்பதெல்லாம் த்ரில்லர் படம் அளவுக்கு சஸ்பென்ஸாக இருக்கிறது.

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share

Comments Closed