டிஜிபி விஜயகுமாரின் ‘வீரப்பன் தேடுதல் வேட்டை’ மிக முக்கியமான புத்தகம். ஒரு பக்க நியாயத்தைத்தான் முன் வைக்கிறது என்றாலும், தமிழகக் காவல்துறை எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதைப் பற்றி அறிந்துகொள்ள முக்கியமான ஆவணம். ஒரு வெற்றிக்குப் பின்னே மறைந்திருக்கும் ஆயிரம் தோல்விகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வதே இல்லை. ஒருவேளை வீரப்பன் வேட்டை வெற்றியில் முடியாமல் போயிருந்தால், இந்த ஆயிரம் தோல்விகளையும் நாம் தெரிந்துகொள்ளாமலேயே போயிருப்போம். தமிழக, கர்நாடக போலிஸும் வனத்துறையும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, உள் மற்றும் வெளி துரோகங்களுக்கிடையே ஒரு கொள்ளைக்காரனை, கொலைகாரனை வேட்டையாடிய ஆவணம் இது.
சாதாரண கொள்ளைக்காரனாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய வீரப்பன் பெரிய கொலைகாரனாக, கடத்தல்காரனாக வளர்ந்துவிடுகிறான். அவனுக்குத் தொடர்பு பல மட்டங்களில் விரிகிறது. ஒரு கட்டத்தில் உலக அளவில் அவன் பிரபலமாகிறான். அவனை உயிருடனோ பிணமாகவோ பிடித்துத் தருவதற்கான சன்மானத் தொகை கூடிக்கொண்டே போகிறது. எல்டிடிஈ அமைப்புடன் தொடர்பு, ஆந்திர நக்ஸலைட் அமைப்புடன் தொடர்பு என்று செய்திகள் விரிவாகிக்கொண்டே போகின்றன. வீரப்பன் தொடர்ந்து ஆடியோ கேசட்டுகளை அனுப்புகிறான். ஜெயலலிதாவைத் திட்டியும் போலிஸைத் திட்டியும் அவன் அனுப்பும் ஆடியோ கேசட்டுகள் தங்கு தடையின்றி ஊடகங்களுக்குக் கிடைக்கின்றன. நக்கீரன் கோபால், பழ நெடுமாறன், கொளத்தூர் மணி போன்றவர்கள் நினைத்தபோது வீரப்பனைப் பார்க்க முடிகிறது. வீரப்பனுக்குச் செய்தி அனுப்ப முடிகிறது. ஆனால் போலிஸால் அவனைப் பார்க்கக் கூட முடியவில்லை.
ஒரு அரசியல்வாதி வீரப்பனிடம் கடன் வாங்கி வீரப்பனையே ஏமாற்றி இருக்கிறார். திரைத்துறையினர் வீரப்பனுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை விஜய்குமாரின் புத்தகம் எழுப்புகிறது. இதற்கிடையே வீரப்பன் தமிழ்த் தேசியவாதிகளின் ஐகான் ஆகிறான். ஆனால் போலிஸால் மட்டும் அவனை நெருங்க முடியவில்லை.
இருபது வருட வேட்டையில் ஒரு தடவை மட்டுமே வீரப்பன் போலிஸால் கைது செய்யப்பட்டிருக்கிறான். தப்பியும் விடுகிறான். சில போலிஸார் ஒன்றிரண்டு தடவை அவனை வேட்டையின் போது பார்த்திருக்கிறார்கள். போலிஸின் மீது மக்களுக்கு நம்பிக்கை போகிறது. திரைப்படங்கள், ஊடகங்கள் போன்றவற்றில் போலிஸ் கிண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் வீரப்பன் போலிஸால் சுட்டுக்கொலை என்ற ஃப்ளாஷ் நியூஸ் வருகிறது. அப்போதும்கூட போலிஸின் மேல் ஆயிரம் கேள்விகள், சந்தேகங்கள் சுமத்தப்படுகின்றன.
விஜய்குமார் இருபது வருட வேட்டையின் முக்கியமான பக்கங்களைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு பரபரப்பான நாவலைப் படிப்பது போல் புத்தகம் ஓடுகிறது. அதிலும் கடைசி நூறு பக்கங்களின் விறுவிறுப்பைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.
ஸ்ரீனிவாஸ் என்னும் கர்நாடக போலிஸ் அதிகாரியின் தலை வீரப்பனால் வெட்டப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. அந்தத் தலையை மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் போலிஸால் கண்டுபிடிக்கவே முடிகிறது. வெட்டிய தலையை வைத்து வீரப்பன் ஃபுட்பால் விளையாடியதாகப் பின்னர் தெரிந்துகொள்கிறார்கள். ஒரு முக்கியமான தேடுதல் வேட்டையில் பல சந்தனக் கட்டைகளை ஸ்ரீனிவாஸ் கைப்பற்றுகிறார். ஏற்கெனவே ஒருமுறை வீரப்பன் கைது செய்யப்பட்டது இவரால்தான். ஆனால் வீரப்பன் தப்பித்துவிட, மீண்டும் அவனை எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என்கிற வெறியில் இருந்தார் ஸ்ரீனிவாஸ்.
வீரப்பனின் தங்கை மாரி ஸ்ரீனிவாஸ் கிராமத்தினருக்காக நடத்தி வந்த க்ளினிக்கில் பணி செய்கிறார். வீரப்பன் மனைவி வீரப்பனை ரகசியமாக சந்திக்க மாரி உதவுவதாக நினைக்கும் போலிஸ், வீரப்பனின் தங்கையை எச்சரிக்கிறது. வீரப்பனின் தங்கை விஷம் குடித்துச் சாகிறாள். தன் தங்கை மரணத்துக்கு ஸ்ரீனிவாஸ்தான் காரணம் என்று நினைக்கும் வீரப்பன், தான் சரணடையப் போவதாக நாடகம் ஆடுகிறான். ஸ்ரீனிவாஸும் அதை உண்மை என்று நம்பி வீரப்பனைப் பிடிக்கப் போகிறார். ஆனால் அவரது தலை கொய்யப்படுகிறது. பின்னர் ஸ்ரீனிவாஸுக்கு கோவில் கட்டுகிறார்கள் அந்த ஊர் மக்கள். ஏனென்றால் தனது பல சேவை மூலம் ஊர் மக்களுடன் கலந்திருந்தார் ஸ்ரீனிவாஸ். ஸ்ரீனிவாஸுக்கு கீர்த்தி சக்ரா விருது பின்னர் வழங்கப்பட்டது.
ஒரு சமயம் 22 போலிஸார் வெடி வைத்துத் தகர்க்கப்படுகிறார்கள். அதைக் கண் முன்னே பார்த்த போலிஸ் அதிகாரி இறுதிவரை அதிரடிப்படையில் இருந்து விலகாமல், வீரப்பனின் மரணத்தைப் பார்க்கக் காத்திருக்கிறார். சில போலிஸார் வீரப்பனைக் கொல்லாமல் திருமணம் செய்துகொள்வதில்லை என்று காத்திருக்கிறார்கள்.
ஜடையன் என்னும் சோலிகா பழங்குடியினரின் தலைவர், தங்கள் கிராமத்தில் தான் கண்ட மனித மலம் வெளியூர்க்காரர்களின் மலத்தைப் போல் உள்ளது என்று சொல்லி, அங்கே கூடாரம் போட்டுத் தங்கி இருக்கும் வீரப்பனின் ஆள்களைப் பற்றித் துப்புக் கொடுக்கிறார். ஜடையனும் இன்னும் ஐந்து பேரும் போலிஸின் இன்ஃபார்மர்களாக இருப்பதை அறிந்துகொள்ளும் வீரப்பன் தனது ஆட்களுடன் கிராமத்துக்கு வருகிறான். அன்று ஜடையன் அங்கு இல்லை. மற்ற ஐந்து பழங்குடியினரையும் சுட்டுக் கொன்று கழுத்தை அறுத்து எரிக்கிறான். நடுங்கிப் போகும் பழங்குடி இன மக்கள் தங்களைக் கைவிட்ட ஜடையசாமி (சிவலிங்கம்) கோவிலைப் பூட்டி வைக்கின்றனர். வீரப்பன் கொல்லப்பட்ட பின்பே அக்கோவில் திறக்கும் என்று காத்திருக்கிறார்கள். ஐந்து பேர் கொல்லப்பட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக அக்கோவில் பூட்டியே கிடக்கிறது. அந்தக் கோவிலைப் பார்க்கும் விஜய்குமார், இந்தக் கோவிலைத் திறக்கவேண்டும் என்று சபதம் செய்கிறார்.
போலிஸுக்கு இன்ஃபாமர்கள் வந்தபடியே இருக்கிறார்கள். வீரப்பனால் யார் இன்ஃபாமர் என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிவதில்லை. சந்தேகம் வரும்போது தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரையும் தள்ளி வைக்கிறான். இதனால் போலிஸ் செயல்படும் வேகம் அப்படியே நின்றுவிடுகிறது. வீரப்பன் யாரையாவது பார்க்க வருவதாகச் சொன்னால் அதை சொன்னபடி செய்யாமல் இழுத்தடித்தே செய்கிறான். இதனால் எப்போது எங்கே யாரைப் பார்க்க வீரப்பன் வருவான் என்பதை போலிஸால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.
தொழில்நுட்பம் என்றால் வீரப்பனுக்குப் பிடிப்பதில்லை. வேன், கார் கூடப் பிடிப்பதில்லை. தன் உடல் வலுவையும் துப்பாக்கி சுடும் திறனையும் மட்டுமே நம்பினான் வீரப்பன். போலிஸின் தொழில்நுட்ப அறிவு வீரப்பனை நெருங்க உதவுகிறது. வீரப்பனின் கேங் குறைகிறது. ஒற்றை இலக்கத்துக்குள் வருகிறது. தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறான் வீரப்பன். ஜிபிஎஸ் துணையால் ஐந்து கிமீ தூரத்துக்குள்ளாக நெருங்குகிறது போலிஸ்.
வீரப்பனை போலிஸால் வெல்ல முடியாததற்குக் காரணம், வீரப்பனைக் காட்டில் வேட்டையாட நினைப்பதுதான் என்று புரிந்துகொள்கிறது போலிஸ். வீரப்பனை வெளியே கொண்டு வந்தால், தங்களுக்கு வசதியான இடத்தில் வீரப்பனை எளிதாகக் கொன்று விடலாம் என்று ஒரு திட்டம் தீட்டுகிறார்கள். வீரப்பனை வெளியே கொண்டு வர அவனது மனைவி முத்துலட்சுமியை அவளுக்கே தெரியாமல் பயன்படுத்த முடிவெடுக்கிறார்கள்.
ஏற்கெனவே போலிஸின் இன்ஃபாமர் இதயத்துல்லா வீரப்பன் கேங்கில் சேர்ந்து வீரப்பனின் நம்பிக்கைக்கு உரியவராக ஆகிறார். 21 நாள்கள் அவனுடனே தங்கி இருந்து போலிஸுக்குப் பல செய்திகளை அனுப்புகிறார். ஆனால், சிறையில் இருக்கும் தமானி என்னும் மத பயங்கரவாதியிடம் இருந்து துப்பு ஒன்று, வீரப்பன் கேங்கில் ஒரு இன்ஃபார்மர் இருக்கிறார் என்பதைச் சொல்லிவிடுகிறது. யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறும் வீரப்பன், அனைத்து புது ஆள்களையும் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறான். இதனால் இதயத்துல்லாவால் உதவ முடியாமல் போகிறது. ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தைக் கண்டுபிடிக்கிறார் இதயத்துல்லா. வீரப்பனுக்குக் கண்ணில் பிரச்சினை இருக்கிறது. அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. அவனுக்கு மருத்துவரைப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்தச் செய்தி போலிஸுக்குப் பின்னால் பெரிய அளவில் உதவுகிறது.
இதயத்துல்லாவை இன்ஃபாமராக அனுப்புவதற்கு முன்பு வேறொரு கொலைகாரனைத்தான் வீரப்பன் கேங்குக்குள் அனுப்ப முடிவெடுத்தது போலிஸ். ஆனால் கடைசி நேரத்தில் இதயத்துல்லா போகிறார். முதலில் தேர்வு செய்யப்பட்ட கொலைகாரனைப் போல கொடூரமான ஆள் இல்லை இதயத்துல்லா. அதற்கு முன்பு ஒரு கொலை கூட இதயத்துல்லா செய்ததில்லை. இதயத்துல்லாவுக்குப் பெரிய குற்றப் பட்டியல் எதுவும் கிடையாது. இதுவே பெரிய பின்னடைவாகப் போகிறது. ஒரு கட்டத்தில் வீரப்பனை எளிதாகக் கொல்ல ஒரு சந்தர்ப்படம் கிடைக்கிறது. ஒரு கல்லைத் தூக்கி வீரப்பன் தலையில் போடத் தயாராகிறார் இதயத்துல்லா. ஆனால், இப்படிக் கொல்வது அவசியமா என்கிற ஒரு மனப்போராட்டம் வர, கல்லைக் கீழே போட்டுவிடுகிறார். இதுவே ஒரு பயங்கரமான கொலைகாரன் வீரப்பன் கேங்குக்குள் ஊடுருவி இருந்தால் ஒரு நொடியில் கொன்றிருப்பான் என்று அங்கலாய்க்கிறார் விஜய்குமார்.
ராஜ்குமார் கடத்தலின்போது அவருடன் கடத்தப்பட்ட நாகப்பாவுக்கும் வீரப்பனைக் கொல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. கையில் அரிவாளுடன் வீரப்பனைக் கொல்ல முனையும்போது, நக்கீரன் கோபால் நாகப்பாவைக் கடிந்துகொள்கிறார். நாகப்பா வீரப்பனைக் கொல்லாமல் தப்பித்து ஓடி வந்துவிடுகிறார்.
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியை மையமாக வைத்து ஒரு ஆபரேஷனைச் செய்கிறது போலிஸ். ஆபரேஷன் போஸ்டன். யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் பெரிய ஆபரேஷன். கர்நாடக போலிஸ் முத்துலட்சுமியை சேலத்தில் கண்காணிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது தமிழக போலிஸ். அந்த நேரத்தில் அங்கே போகும் அசோக் குமார் என்னும் தமிழக போலிஸ்காரர் முத்துலட்சுமிக்கு உதவுவதாகச் சொல்லி அவரை அழைத்து வருகிறார். திருப்பூருக்குச் சென்று வீடு தேடுகிறார்கள். ரம்யா என்கிற போலிஸ் இன்ஃபாமர் ஒருவரின் வீட்டை வாடகைக்கு எடுக்கிறார்கள். ரம்யா முத்துலட்சுமியுடன் மிகவும் நட்பாகிறார். ஊட்டியில் இருக்கும் தனக்கு சொந்தமான ஒரு கெஸ்ட் ஹவுஸுக்கு முத்துலட்சுமியை ரம்யா அழைத்துப் போகிறார். அந்த கெஸ்ட் ஹவுஸ் போலிஸால் ஏற்கெனவே பார்த்து வைப்பட்ட இடம்தான்! அங்கே போகும் முத்துலட்சுமியிடம் பேசும் ரம்யா, வீரப்பனை இங்கே வரச் சொல்லும்படியும் முத்துலட்சுமியையும் குழந்தைகளையும் பார்க்கட்டும் என்றும், வீரப்பனின் கண்ணுக்கு மருத்துவம் செய்ய தான் ஒரு மருத்துவரைக் கொண்டு வருவதாகவும் ஆசையைத் தூவுகிறார். முத்துலட்சுமியும் சம்மதிக்கிறார். வீரப்பனும் சம்மதிக்கிறான். வீரப்பன் இவர்களைக் காண வரும் நாளும் வருகிறது.
வீரப்பனை இந்த தடவை முடித்துவிடலாம் என்று காத்திருக்கிறது போலிஸ். இதற்கிடையில் முத்துலட்சுமிக்குத் தன்னை யாரோ கண்காணிக்கிறார்கள் என்ற சந்தேகம் வருகிறது. ரம்யாவும் முத்துலட்சுமியின் பிக்னிக் போக, போன இடத்தில் முத்துலட்சுமிக்கு திடீரென்று ஐயம் வர, வரும்போது இருவருக்குள்ளும் ஒருவித இடைவெளி உருவாகிவிடுகிறது. ஆனால் அன்று வீரப்பன் வரவில்லை. பின்னாளில் ஒரு ஜோதிடர் நேரம் சரியில்லை என்று சொன்னதால் வீரப்பன் வரவில்லை என்று தெரிகிறது. அன்று வீரப்பன் தப்பிவிடுகிறான். இந்த எஸ்டேட் திட்டம் தவிடுபொடியாகிவிடுகிறது.
இப்படி பல ஆபரேஷன்கள் உள்ளன.
போலிஸ் இன்ஃபாமர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர். போர்வை, ரெட் இப்படிப் பல பெயர்கள். ஒவ்வொரு ஆபரேஷனும் தோல்வியில் முடிந்தாலும், பல விவரங்கள் போலிஸுக்குக் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. மிஸ்டர் எக்ஸ் என்னும் பணக்காரர் ஒருவர் வீரப்பனுக்கு இன்ஃபாமராக இருக்கிறார். தங்கள் இன்ஃபாமர் மூலம் போலிஸ் அவரைக் கையும் களவுமாகப் பிடிக்கிறது. வேறு வழியின்றி அவர் போலிஸ் இன்ஃபாமராக மாற ஒத்துக்கொள்கிறார். அவரால்தான் வீரப்பனின் கதை முடிவுக்கு வருகிறது.
இன்ஃபாமர்களும் வீரப்பன் கேங் ஆள்களும் சந்தித்துக்கொள்ளும்போது பரிமாறிக்கொள்ளும் சங்கேத வார்த்தைகள் எல்லாம் அலாதியானவை. திரைப்படங்களில் வருபவை எல்லாமே உண்மைதான். அமாவாசைல பௌர்ணமி வருமா என்று நாம் சங்கேத வார்த்தைகளைக் கிண்டல் செய்தாலும் (இந்த அளவுக்கு இல்லையென்றாலும்) இவற்றைப் போன்ற சங்கேத வார்த்தைகளே பயன்படுத்தப்படுகின்றன. டீக்கடையில் சர்க்கரை டப்பாவை நகற்றி வைப்பது, ‘ஸ்வீட் பாக்ஸ்ல கரும்பு ஏத்தியாச்சு’, மூன்று முறை கல்லால் தட்டுவது என்று பல சங்கேத வார்த்தைகளும் செய்கைகளும் புத்தகம் முழுக்க இருக்கின்றன.
வீரப்பனை வெளியே கொண்டு வர இரு தரப்புக்குள்ளும் ஒரு லாட்டரிச் சீட்டு சங்கேதக் குறியீடாக இருக்கிறது. ஒரு லாட்டரிச் சீட்டை இரண்டாகக் கிழித்து ஒரு பகுதியை வீரப்பன் தரப்புக்கும் இன்னொரு பகுதியை போலிஸ் தரப்புக்கும் கொடுக்கிறார்கள் இரண்டு தரப்பின் இன்ஃபாமர்களும்!
இந்த முறை இரை தப்பிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது போலிஸ். லாட்டரிச் சீட்டின் நம்பர் 007710. தன் நம்பகமான காரின் எண்ணும் 0771 என்று நினைத்துக்கொள்கிறார் அந்த ஆபரேஷனில் ஈடுபட்டிருக்கும் கண்ணன் என்ற அதிகாரி. விஜய்குமார் தன் பர்சில் எப்போதும் தன்னுடன் இருக்கும் ஐயப்பன் டாலரைத் தொட்டுக்கொள்கிறார். வேனில் ஒட்டப்பட்டிருக்கும் குருவாயூர் கிருஷ்ணனின் படத்தைப் பார்க்கிறார். வீரப்பனின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.
வீரப்பனைக் கொண்டு வர ஒரு ஆம்புலன்ஸ் பலவித வசதிகளுடன் உருவாக்கப்படுகிறது. வேனில் இருக்கும் வெங்கடாஜலபதி படத்தில் ஒரு கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இது எதுவுமே வெளிப்பார்வைக்குத் தெரியாது. வீரப்பன் சிக்கிக்கொள்கிறான். எந்த வகையிலும் தப்ப முடியாதபடி அவனை போலிஸ் சுற்றி வளைக்கிறது. வீரப்பன் என்கவுண்ட்டர் செய்யப்படுகிறான். செய்தியைக் கேள்விப்படும் ஜெயலலலிதா போனில் விஜய்குமாரிடம் சொல்கிறார், “தான் முதல்வர் ஆன பின்பு கேட்கும் மிகவும் சந்தோஷமான விஷயம் இதுதான்.” விஜய்குமார் பண்ணாரி அம்மன் கோவிலுக்குப் போய் மொட்டை போட்டுக்கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொள்கிறார்.
ஆம்புலன்ஸில் வீரப்பன் ஏறிக்கொள்ளும்போது போலிஸின் இன்ஃபார் ஒருவரும் ஏறிக்கொள்ள விரும்புகிறார். ஏனென்றால் அவருக்குத் தெரியாது அன்று வீரப்பனை என்கவுண்ட்டர் செய்யப் போகிறார்கள் என்று. அவருக்கு மட்டுமல்ல. அந்த ஆபரேஷனில் இருக்கும் பலருக்கும் தெரியாது. ஆம்புலன்ஸை ஓட்டிப் போகும் சரவணன் என்கிற அதிகாரிக்கும் கூட, அந்த ஆம்புலன்ஸில் அவர் ஏறப் போகும் அந்த நிமிடத்தில்தான் தெரியும், தான் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கப் போவது வீரப்பனை என்று. வீரப்பன் இருந்த ஆம்புலன்ஸை சரமாரியாக சுட்டு வீழ்த்திய எந்த அதிரடிப்படை வீரருக்கும் தெரியாது தாங்கள் சுட்டுக்கொண்டிருப்பது வீரப்பனை என. ஒரு கொள்ளைக்காரனின் அராஜகங்கள் முடிவுக்கு வருகின்றன.
விஜய்குமார் தன்னை மட்டும் முன்னிறுத்தாமல், வால்டர் தேவராம் தொடங்கி தன்னுடன் பணிபுரிந்த அனைத்து அதிகாரிகளின் பங்களிப்புகளையும் நியாயமாகப் பதிவு செய்திருக்கிறார். டிரைவர்கள் தொடங்கி இன்ஃபாமர் வரை அனைவரையும் குறிப்பிட்டுச் சொல்கிறார். இத்தனை நல்ல மனதுடையவர் போலிஸாகவும் இருக்கமுடியுமா என்னும் சந்தேகம் வரும் அளவுக்கு அவர் இதைச் செய்கிறார்!
வீரப்பனுக்கு சாதிக்காரனே எதிரியாக இருப்பது, தன் சாதிக்காரன் தனக்கு உதவுவான் என்று வீரப்பன் நினைப்பது, வீரப்பனைப் பற்றிய குறிப்புகளைப் படிக்க நினைக்கும் விஜய்குமார், அவற்றைப் பார்க்கும்போது அவை படிக்க முடியாத அளவுக்கு கோழிக்கிறுக்கலாக இருப்பதைப் பார்த்து நொந்து போவது, வீரப்பன் விஜய்குமாரை எம்ஜியாரின் மருமகன் என்று நம்புவது, சந்தேகத்தில் தன் அதிரடிப்படை ஆளையே ஒரு போலிஸ் சுட்டுக்கொன்று மனம் பிறழ்ந்து போவது, ராஜ்குமாரைக் கடத்துவதற்கு முன்பாக ரஜினி அல்லது ஸ்டாலினைக் கடத்த யோசிப்பது எனப் பல வகையான குறிப்புகள் இப்புத்தகத்தில் உள்ளன. தவறவிடக்கூடாத புத்தகம். கிண்டிலில் தமிழிலும் ஆங்கிலத்திலும் படிக்கக் கிடைக்கிறது.
நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்