நம்பாதே
நம்பாதே
என்றது அந்தக் குரல்
எப்போதும் என்னுடனே
என் நிழலென வரும் குரல்
நிஜத்தை மீறிய
நிஜமென ஆகும் ஒரு குரல்.
அப்படியே நின்றேன்.
உள்ளமெங்கும் புன்னகை
ஒளிர
உதட்டில் ஒரு ஒளியை ஏந்தி
கைகள் இரண்டையும் விரித்தபடி
தழுவ வந்தார்கள்.
எழுதி எழுந்தி
ஓய்ந்த கைகளுடன்
உலகம் முழுக்க அமைதியைப் பரப்பியவர்கள்
ஒரு பேனாவுடன் சில காகிதங்களுடன்
என் கை பிடித்து அழைத்துப் போக
அமைதியாகக் காத்திருந்தார்கள்.
உடல் தழுவி
இறுக்கிப் பிணைந்து
பாம்புகளென புரண்டவர்கள்
என் நலனுக்கென
தன்னைக் கொடுத்தவர்கள்
என்னைக் கடைத்தேற்ற
கண்களில் தாபத்தோடு பார்த்திருந்தார்கள்.
கையில் அட்சதையுடன்
கண்களில் நடுக்கம் தெரிய
உடலைத் தேங்கிப் பிடித்தபடி
ஓய்ந்து போய் நின்றிருந்தவர்கள்
எனக்காகவே நின்றிருந்தார்கள்
என்னை அழைத்துப்
போவதாகச் சொன்னார்கள்
என்னை சரி செய்வதாகச் சொன்னார்கள்
எனக்கு வழிகாட்டுவதாகச் சொன்னார்கள்
என்னை ஆசிர்வதிப்பதாகச் சொன்னார்கள்
நானின்றிப் பிறிதொன்றில்லை என்றார்கள்.
பிறிதொன்றில்லாமல் நானில்லை என்றார்கள்.
எழுத்தும் தத்துவமும்
அன்பும் காமமும்
கண்களில் ஈரமும்
கைகளில் உறுதியும்
எல்லாம் எனக்காகவே என்றார்கள்.
கருவண்டின் வசீகரமென
புதைகுழியின் ஈர்ப்பென
எரிவிளக்கின் ஒளியென
சிலந்தி வலையின் விரிவென
நெடுஞ்சாலையின் இருளென
விலக்கமுடியாமல் விக்கித்து நின்றேன்.
உள்ளே இருந்து
சொன்னது
அந்தக் குரல்,
நம்பாதே.
அக்குரலையும் சேர்த்தே
நம்பவில்லை என்றேன்.
எதைப் பிடித்துக்கொள்வது?
எதைப் பிடித்துக்கொள்வது?
அனைவரும் பார்த்திருந்தார்கள்.
காற்றில் பக்கங்கள் கிழிந்தன.
பேனாக்கள் உலர்ந்தன.
இன்னமும் நின்றுகொண்டிருக்கிறேன்.
அடுத்த அடிக்காகக்
காத்திருக்கிறது நிலம்.