கடவுளர்கள்
பலசரக்குக் கடையில்
கல்லாவில்
சிரிக்கும்
கரிய நிற ஊர்ப்பெண்
இளநீர் சீவும்போது
கண்ணில் விழுந்த தூசிக்காக
வருத்தப்பட்ட
இளநீர்க்கடைக்காரன்
பெட்ரோல் நின்றுபோய்
வண்டியை தள்ளிக்கொண்டு
வேர்க்க விறுவிறுக்க நடக்கும்
முகம்தெரியா மனிதனுக்கு
உதவும் இன்னுமொரு முகமிலி
புன்னகைத்தபடியே
ஸ்டாப் அட்டை காண்பிக்கும்
போக்குவரத்துக் காவல்காரர்
ஒன்றின் மீது
ஒன்றென அமர்ந்து
இறக்கை படபடக்கும்
புறாக்களைப் பார்த்து
வெட்கப்படும் சிறுமி
ஒரே நாளில்
தொடர்ச்சியாக
இத்தனை கடவுளர்களைப் பார்த்து
நெடுநாளாகிவிட்டதில்
இன்றே
உலகம் அழிந்துவிடும்
அச்சத்தில்
ஒரு வசவுக்காக
துரோகத்துக்காக
கேவலத்துக்காக
அதிர்ச்சிக்காக
உள்ளக் கொதிப்புக்காக
ஒரு துளி ரத்தத்துக்காக
காத்திருக்கிறேன்,
எல்லாம்
நொடியில்
இயல்பாகட்டும்.