மிக சீரியஸான ஒரு விஷயத்தை தமிழ்நாட்டின் ஹீரோயிச நடிகர்களால் திரையில் நிகழ்த்தவே முடியாது என்பதற்கான இன்னொரு நிரூபணம் விஜயின் பிகில் திரைப்படம். அதுவும் அட்லீ போன்ற இயக்குநர்கள், இந்த முக்கியமான விஷயங்களையெல்லாம் கூட ஏனோ தானோ என்று, ஒரு ஹீரோவின் மாஸ்ஸைக் கூட்டுவதற்காக மட்டுமே எடுப்பார்கள். இவர்களிடமெல்லாம் ஒரு சீரியஸ்தன்மையை எதிர்பார்ப்பதே நாம் நமக்குச் செய்துகொள்ளும் அவமரியாதை.
விஜய்யின் சமீபத்திய திரைப்படங்களில் இருந்த அதீத நடிப்பும் அலட்டலும் இதில் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கிறது என்பது கொஞ்சம் ஆசுவாசம். முதல் ஐந்து நிமிடங்களில் மீண்டும் அதே அதீத அலட்டலா என்ற எண்ணம் எழுந்தது என்னவோ உண்மைதான். ஆனால் போகப் போக எப்படியோ சமாளித்து, மெல்ல முன்னேறி கொஞ்சம் நன்றாகவே நடிக்க தொங்கிவிட்டார். ஆனாலும் இடையிடையே அப்பாவைக் கட்டிப்பிடிக்கிறேன் பேர்வழி என்று கொஞ்சலாக நடந்து நம்மைப் பாடாகப் படுத்தவும் செய்கிறார். பல காட்சிகளில் ‘கில்லி’ படத்தில் வரும் விஜய்யின் அதே நடிப்பைப் பார்க்கமுடிகிறது. ராயப்பனாக வரும் விஜய் சுத்தமாக ஒட்டவில்லை. அவர் நடிப்பதும் இளமையான விஜய் நடிப்பது போலவே இருக்கிறது. அதேசமயம் வேறு மாதிரி நடிக்க முயன்றிருந்தால் நாம் அரண்டு மிரண்டிருப்போம் என்பதால் இதையே பாராட்டிவிடுவது நல்லது என்றும் தோன்றுகிறது.
இடைவேளை வரை கொஞ்சம் கலகலப்பாகவும் வேகமாகவும் செல்லும் திரைப்படம், இடைவெளைக்குப் பிறகு டொக்கு விழுந்த மாதிரி ஆகிவிடுகிறது. ஏனென்றால் அப்போதுதான் முக்கியமான கதைக்குள்ளே எண்ட்ரி ஆகிறார் இயக்குநர்! இதை விளையாட்டுத் துறையைப் பற்றிய படமாக எடுப்பதா, விஜய்யின் படமாக எடுப்பதா என்ற குழப்பம். (ஒருவேளை குழப்பமே இல்லையோ?) எந்தப் படத்தையும் ஹீரோவின் படமாகத் தங்களால் மாற்ற முடியும் என்று தமிழ் இயக்குநர்களின் அடியொற்றி இந்தப் படத்தையும் மாற்றி, இப்படம் எதோ ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது.
ஹிந்தியில் இதே போன்ற கருவுள்ள திரைப்படத்தையெல்லாம் எப்படி எடுக்கிறார்கள் என்று இவர்கள் பார்க்கவேண்டும். அவையும் வணிகத் திரைப்படங்களே. படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை புல்லரிப்பு வர வைத்தே அனுப்பி வைப்பார்கள். ஆனால் அதில் ஹீரோயிஸத்தைப் பலப்படுத்த, இன்னும் மேம்படுத்த, இவற்றைப் பயன்படுத்தமாட்டாரகள். இப்படத்தின் பெரிய சறுக்கல் இங்கேதான் தொடங்குகிறது.
ஹீரோயிஸப் படம் என்று முடிவெடுத்துவிட்டால், மைதானத்தில் விஜய் ஆடவேண்டும். ஆனால் இங்கே வெளியே நின்று என்ன என்னவோ சைகைகளைச் செய்கிறார். இதை ஈடுகட்ட, ஒரு கும்பல் விஜய்யைக் கடத்த, அவர் இவர்களைப் பந்தாட, போலிஸ் ஸ்டேஷனில் மாஸ் காட்ட என்று என்ன என்னவோ செய்கிறார். இவை எதுவுமே ஒட்டவில்லை. ஏனென்றால் நமக்கு முன்னரே எப்படியும் விஜய்யின் அணி வெல்லப் போகிறது என்பது தெளிவாகத் தெரியும். அப்படி இருக்கும் போது திரைக்கதை எப்படி இருக்கவேண்டும்? கோல்ட் ஹிந்திப் படத்தில் இந்தியா ஹாக்கியை வெல்லும் என்பது நமக்குப் படம் தொடங்கும் முன்பே தெரியும். ஆனால் கடைசிக் காட்சி வரை அந்த புல்லரிப்பை அப்படியே தக்க வைப்பார்கள். அதுவும் வணிகத் திரைப்படமே.
ஒவ்வொரு காட்சியிலும் தான் விஜய்யாகத் தெரியவேண்டும் என்று விஜய் மெனக்கெடுவதுவே என்பதுவே இப்படத்தின் எரிச்சலாக ஆகிவிடுகிறது. ஏன் நம் கதாநாயகர்களை இரண்டு அல்லது மூன்று வேட வெறி பிடித்து ஆட்டுகிறது என்று புரியவில்லை. ராயப்பனாக ஒரு கெத்தான நடிகரை நடிக்க வைத்தால் என்ன குடிமுழுகிப் போய்விடும்? ஹிந்தியில் இதைச் செய்திருப்பார்கள்.
இதில் அட்லீ, விஜய்யின் அடையாளச் சிக்கல் வேறு குழப்புகிறது. மைக்கேல் என்று பெயர் வைத்த ஹீரோவின் அப்பாவின் பெயர் ராயப்பன். கிறித்துவர். ஏன் காவி வேட்டி கட்டி, விபூதி குங்குமம் வைத்து, கழுத்தில் சிலுவை போட்டு ஏசுவைக் கும்பிடுகிறார்? யாருக்கும் தெரியாது. கூடவே ஒரு ராவுத்தர் வேறு. பத்தாது என்று திடீரென்று பட்டை போட்டுக்கொண்டு வரும் ஆனந்தராஜ் வேறு. என் சமுதாயம் என் சமுதாயம் என்று சொல்கிறார் ராயப்பன். யார் அந்த சமுதாயம்? ஒரே சமுதாயம், அதுவும் ஒரே இடத்திலிருந்து எப்படி ஒரு தமிழக அணிக்குத் தேர்வாக முடியும்? அப்படியானால் அவர்களுக்குள்ளே நடக்கும் அந்த மோதல் யாருக்கும் யாருக்குமானது? ராயப்பனை எதிர்ப்பவரும் ஒரு கிறித்துவரே. அப்படியானால் இது எந்த சமூகத்துக்கான பிரச்சினை? ஒரு தெளிவும் கிடையாது. ஆனால் படம் முழுக்க கிறித்துவக் குறியீடுகள் வரவேண்டும் என்பதில் மட்டும் அட்லீ தெளிவாக இருந்திருக்கிறார். அதை சமன்படுத்தவே ராயப்பனின் முகத்தில் குங்குமும் விபூதியும் போல.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதை நிறுத்திவிட்டு, வேறு யாரையோ வைத்து இசையமைக்க வைக்கிறார் போல. தொடர்ச்சியாக எப்படி இப்படி மிக மோசமான பாடல்களைத் தருகிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இளையராஜா உச்சத்தில் இருந்தபோது அவர் இசையமைத்து உச்ச நடிகர்களான கமல், ரஜினி படம் வருமானால் பாடல்கள் அசரடிக்கும் என்பதை எழுதியே தரலாம். ஆனால் ஏ ஆர் ரஹ்மானால் ஒரு விஜய் படத்துக்குக்கூட உருப்படியாகப் பாடல்களை அமைக்கமுடியவில்லை. சிங்கப்பெண்ணே என்று அவர் உணர்ச்சிகரமாகப் பாடும்போது பாவமாக இருக்கிறது. அட்லீ, ஏ ஆர் ரஹ்மான், விஜய் கூட்டணி ஒரு பாடலில் வரும்போது கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று தோன்றியது!
தேவர்மகன், பாட்சா, நாயகன் என்று பல படங்களில் இருந்து பல காட்சிகளை அப்படியே எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறார் அட்லீ. இசையமைப்பாளர் தேவாவின் பாடல்கள் இளையராஜாவின் பாடல்களையே ஒத்திருந்தபோது அவரிடம் அதைப் பற்றிக் கேட்டதற்கு அவர் சொன்னாராம், அது எனக்குப் பெருமைதான் என்று. அட்லீயும் அதையே சொல்லிவிடக்கூடும். ஒரு படத்தை மட்டுமே காப்பி அடிப்பதால் வரும் பிரச்சினைகளை, பல படங்களில் இருந்து காப்பி அடிப்பதால் சமாளிக்கும் புதிய வித்தையை அட்லீ அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்று எதிர்காலத்தில் இயக்குநர்கள் பாராட்டக்கூடும். இப்போது வரும் பாடல்களைக் கேட்கும்போது எதாவது ஒரு பாடல் பச்சக்கெனப் பிடித்தால், அது முன்பே எப்போதோ இளையராஜா இசையமைத்த பாடல் ஒன்றின் உருவலாக இருக்கும் என்று நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அதேபோல் இந்தப் படத்தில் வரும் பல காட்சிகள், நான் முன்பு ரசித்த படங்களின் காட்சிகள் என்பதால், இவையும் பிடித்துப் போய்விட்டன என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு காட்சிகூட தன்னியல்பான காட்சி கிடையாது. இப்படியான சில உருப்படியான காப்பி காட்சிகள், சில இடங்களில் விஜய்யின் நடிப்பைத் தாண்டி இப்படத்தில் ஒன்றுமே இல்லை.
இடைவேளை வரை இருந்த படத்தின் வேகத்தை அப்படியே கொஞ்சம் நீடித்திருந்தால் தப்பித்திருக்கலாம். ஆனால், மோட்டிவேஷன் கதை, ஹீரோயிசக் காட்சிகள் போதாதென்று, பிராமணப் பெண்ணை ‘மீட்டு’க் கொண்டு வந்து ஆட வைப்பது, முகத்தில் அமிலம் அடிக்கப்பட்ட பெண்ணை மீட்டுக்கொண்டு வந்து நேரடியாக ஃபைனலில் ஆட வைப்பது போன்ற சமூகக் கருத்துகளைச் சொல்லத் தொடங்கி, இருந்த கொஞ்சம் நஞ்சம் உயிர்ப்பையும் விட்டுவிட்டு எங்கெங்கோ அலைகிறது பிகில்.
பழைய நல்ல படங்களை நினைவூட்டுவதால் ஒரு தடவை பார்க்கலாம்.