நம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை

நம்பி நாராயணின் ‘Ready to Fire – How India and I survived the ISRO spy case’ புத்தகம் வாசித்தேன். நம்பி நாராயணன் இஸ்ரோவின் விஞ்ஞானி. அப்துல் கலாமுடன் பணிபுரிந்தவர். பாகிஸ்தானுக்கு இந்திய விண்வெளி ரகசியங்களை விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கேரள காங்கிரஸ் அரசால் 1994ல் கைது செய்யப்படுகிறார். பின்னர் சிபிஐ இதை விசாரிக்கிறது. 1996ல் இக்குற்றச்சாட்டில் எவ்வித முகாந்திரமும் இல்லை என்று சொல்லி சிபிஐ இவ்வழக்கைத் தள்ளுபடி செய்கிறது. 1998ல் உச்சநீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து இவர் நிரபராதி என்று தீர்ப்பளிக்கிறது. இவருக்குப் பத்து லட்சம் நஷ்ட ஈடாகத் தரவேண்டும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றம் செல்கிறது. அங்கே இவருக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று 2018ல் தீர்ப்பாகிறது. 2019ல் இந்திய அரசு இவருக்கு பத்ம விபூஷன் அளித்து கௌரவிக்கிறது.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, கரும்பாலையில் வேலை செய்து, பின்னர் எதேச்சையாக இஸ்ரோவுக்கு விண்ணப்பித்து, அதுவும் தாமதமாக விண்ணப்பித்து, வேலைக்குச் சேர்ந்து, கிரயோஜனிக் தொழில்நுட்பத்தில் இந்தியாவை வழிநடத்துவதில் முதன்மையான விஞ்ஞானியாக இருந்து, லிக்விட் ப்ரொபல்ஷன் (ராக்கெட்டை உந்தித் தள்ள உதவும் எரிபொருளாக திடப் பொருளுக்குப் பதிலாக நீர்மத்தைப் பயன்படுத்தும்) தொழில்நுட்பத்துக்காக வாதாடி போராடி அது வெற்றி பெற்ற மிகச் சில நாள்களுக்குள் கைது செய்யப்படுகிறார் நம்பி நாராயணன். அதன் பிறகு இவ்வழக்கில் தான் பட்ட இன்னல்களையும் அதைத்தாண்டி வென்றதையும் விவரிப்பதுவே இப்புத்தகத்தின் நோக்கம். இன்னொரு இழையாக இஸ்ரோவில் இவரது பணியையும் விவரிக்கிறார். இப்புத்தகத்தின் ஆதார நோக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இஸ்ரோவின் வரலாறாகவே இப்புத்தகம் விரிகிறது. அந்த வகையில் இப்புத்தகம் ஒரு பொக்கிஷம்.

கிரயோஜனிக் தொழில்நுட்பத்தில் இந்தியா வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்காவின் பழிவாங்கலே, கேரள காங்கிரஸ் அரசு மூலமாக நம்பி நாராயணன் கைது வரை நீள்கிறது. மிகத் திறமையாக ‘நாட்டுக்கு நம்பி நாராயணன் செய்த நம்பிக்கைத் துரோகம்’ என்ற கதையை உருவாக்குகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு இரண்டு ஒற்றர்கள் மூலம் தொழில்நுட்பத்தின் வரைபடங்களை நம்பி நாராயணனும் அவருடன் வேலை செய்பவர்கள் சிலரும் விற்றார்கள் என்ற கதை உருவாக்கப்படுகிறது. நம்பி நாராயணன் 6வது குற்றம்சாட்டப்பட்ட நபராகக் கைது செய்யப்படுகிறார். தேசம், அறிவியல், கிரயோஜனிக் தொழில்நுட்பம், இஸ்ரோவின் சக ஊழியர்களுக்கிடையேயான ஈகோ மோதலைச் சமாளித்துத் தன் கனவை நினைவாக்குவதில் போராட்டம் என்றெல்லாம் இருந்தவருக்கு இந்தக் கைது பெரும் அதிர்ச்சியைக் கொண்டு வருகிறது. ஆனால் சிபிஐ இவர் மீது வைக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும் ஆதாரத்துடன் மறுத்து, அனைவரையும் விடுதலை செய்கிறது.

எப்படியெல்லாம் ஒற்றுக் கதையைப் புனைகிறார்கள் என்று படித்துப் பார்த்தால் சாதாரணர்களுக்கு உடனே ஒரு சந்தேகம் வந்துவிடும், இப்படியெல்லாம் இவர் செய்யாமல் எப்படிக் கதையைப் புனையமுடியும் என்று. அத்தனை விஸ்தாரமாக தேதி வாரியாக இவர் மீது குற்றச்சாட்டுகள் புனையப்படுகின்றன. சாட்சிகள் அனைவரும் மிரட்டப்பட்டு இவர் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள வைக்கப்படுகிறார்கள். ஆனால் இவர் கடைசி வரை அஞ்சாமல் உண்மைக்காகப் போராடுகிறார். சிபிஐ விசாரிக்கும்போது அனைவரும் பிறழ்சாட்சிகளாக மாறுகிறார்கள். தாங்கள் மிரட்டப்பட்டதையும், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை (ஐபி) அப்படி சொல்லச் சொன்னதாகவும் வாக்குமூலம் அளிக்கிறார்கள்.

இந்தியா அப்போதெல்லாம் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருக்கிறது. பிரான்சு அரசு இந்தியாவின் தொழில்நுட்பத்தில் உதவுகிறது. (இவையெல்லாம் இப்புத்தகத்தில் விரிவாக விளக்கப்படுகின்றன.) அமெரிக்கா நமக்கு உதவ கேட்கும் தொகைக்கும் பிரான்ஸு அல்லது ரஷியா கேட்கும் தொகைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். இந்தியா அமெரிக்காவைப் புறக்கணிக்கிறது. எனவே அமெரிக்கா கிரியோஜனிக் தொழில்நுட்பத்தில் இந்தியாவை ஒழித்துக்கட்ட தன்னைக் கைது செய்யும் நாடகத்தை அரங்கேற்றியதாக நம்பி நாராயணன் சொல்கிறார். அதாவது பிஎஸ்எல் வி அக்டோபர் 15 1994ல் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுகிறது. 30 நவம்பரில் நம்பி நாராயணன் கைதாகிறார். இந்த விளையாட்டை வைத்து கேரளாவின் கருணாகரணை வீழ்த்த ஏ.கே.அந்தோணியும் உம்மன்சாண்டியும் ஆயத்தமாகிறார்கள். கேரள அரசு வீழ்ந்து கம்யூனிஸ்ட் அரசு வருகிறது. அவர்களும் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறார்கள். உள்ளார்ந்த விருப்பம் என்றில்லை. ஆனாலும் நடத்த விரும்புகிறார்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து கேரள அரசுக்கு நஷ்ட ஈடும் விதிக்கிறது.

இந்த நூலில் உள்ள பல முக்கியமான அம்சங்களைத் தனியே தொகுத்தாலே அது பல பக்கங்களுக்கு வரும். அப்துல் கலாம், விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், டி என் சேஷன் பற்றிய அழகான சித்திரங்கள் இந்நூலில் உருவாகி வருகின்றன. விக்ரம் சாராபாயும், ஹோமி பாபாவும் திடீரென அகால மரணம் அடைவது குறித்த சந்தேகத்தை எழுப்புகிறார் நம்பி நாராயணன். படிக்கும் நமக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருக்கிறது.

நம்பி நாராயணின் அபாரமான நினைவாற்றல் இப்புத்தகத்துக்குள் பல பொக்கிஷங்களைக் கொண்டு வருகிறது. அவரது சிறு வயதில் ஆசிரியர் சொல்லும் சிறிய குறிப்பு முதல் (‘எனக்கு நன்றாக சத்தமாகப் பேசத் தெரியும், ஆனால் வேண்டுமென்றே சத்தம் குறைவாகப் பேசினேன், அப்போதுதான் உங்கள் கவனம் கூடுதலாக இருக்கும் என்பதால்’), இவர் முதன்முதல் வேலைக்குச் செல்லும்போது நடுத்தர குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகள் தொட்டு, இவர் பிரான்ஸில் இருக்கும்போது நடக்கும் நிகழ்வுகள், பின்னர் கைது, விசாரணை எனப் பல இடங்களிலும் பல நுணுக்கமான தகவல்களையெல்லாம் சளைக்காமல் பதிவு செய்கிறார். இதனால் வழக்கு தொடர்பான தகவல்களில் நமக்கு ஒரு நம்பிக்கைத்தன்மை வந்துவிடுகிறது.

  • தங்களது உண்மையான பெயர்களை மறைத்து, தர்மா, சத்யா என்ற பெயர்களைச் சொல்லிக்கொண்டு விசாரிக்கிறார்கள் அதிகாரிகள். தன் பெயர் நீதி என்று சொல்ல நினைக்கிறார் நம்பி நாராயணன்.
  • எதாவது ஒரு முஸ்லிம் பெயரைச் சொல் என்று துன்புறுத்தப்படுகிறார் நம்பி நாராயணன். அப்துல் கலாம் என்று சொல்லவும் ஓங்கி ஒரு அடி விழுகிறது. சிறிய வயதில் கூட விளையாடிய ஒரே ஒரு முஸ்லிம் மட்டுமே தனக்குத் தெரியும் என்று சொல்லவும், அவரையும் விசாரிக்கிறது கேரள போலிஸ்! (உண்மையில் எந்த அரசு முஸ்லிம்களையும் முஸ்லிம் பெயர்களையும் இப்படிப் பயன்படுத்தியது, அதுவும் எந்தக் காலத்தில் பயன்படுத்தியது என்பதையெல்லாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் இன்று ஒன்றுமே இல்லாத விஷயத்தைக் கூடப் பெரிதாக்கி முஸ்லிம்களுக்கு எதிரான அரசு என்று இன்றைய அரசின் மேல் குற்றம் சுமத்துகிறார்கள்.)
  • மிகச் சிறிய தவறுகளால்கூட இஸ்ரோவின் சோதனைகள் தோல்வி அடைகின்றன. ஒரு சுவிட்ச்சை அணைக்காமல் விட்டது போன்ற சின்ன தவறுகள்கூட ஒரு சோதனையை சொதப்பி விடுகிறது. இப்படி இஸ்ரோ தொடர்பான பல கவனக்குறைவுகளை, உள்ளே நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் தொடர்பான அரசியல்களை அப்படியே வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறார் நம்பி நாராயணன். இவற்றையெல்லாம் மீறி இஸ்ரோ வெற்றிகரமாகச் செயல்படுவது என்பதே ஆச்சரியம்தான் என்ற எண்ணம் நமக்கு வருமளவுக்கு உள் அரசியல் தலைவிரித்தாடுகிறது.
  • எது தேவை என்பதைவிட, யார் அதைச் சொல்கிறார்கள் என்பதே முக்கியத்துவம் பெறுகிறது இஸ்ரோவில். இதைத் தாண்டி, லிக்விட் ப்ரொபல்ஷன் தொழில்நுட்பமே சிறந்தது என்பதை அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைக்க நம்பி நாராயணன் தன் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்க வேண்டியதாகிறது. இந்த உள்ளரசியல் மோதலில் ஐயானிக் ப்ரொபல்ஷனை சரியான நேரத்தில் இந்தியா கைக்கொள்ளமுடியாமலும் போகிறது.
  • இந்தியர்களுக்கு என்ன தெரியும் என்று வெளிநாட்டில் நிலவிய, இந்திய விஞ்ஞானிகள் மீதான பார்வையை இஸ்ரோவின் விஞ்ஞானிகள் உடைத்தெறிந்து அசரடிக்கிறார்கள்.
  • ஒரு மெக்கானிக் தொடங்கி வெல்டர் தொட்டு எல்லாரது முக்கியத்துவத்தையும் சொல்கிறார் நம்பி நாராயணன். இவையெல்லாம் அற்புதமான பதிவுகள்.
  • லஞ்சம் தரப்பட்டு கையும் களவுமாகப் பிடிக்க செய்யப்படும் தந்திரத்தில் இருந்து இயல்பான நேர்மையால் தப்பிக்கிறார் நம்பி நாராயணன்.
  • தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய இஸ்ரோவின் செயலகம் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்குப் போகிறது. காரணம் பொறுப்பற்ற, நோக்கமற்ற, லஞ்ச லாவண்யத்தில் ஊறிப் போன திமுக அரசு. இது தொடர்பான கூட்டத்துக்கு அண்ணாதுரை உடல்நலம் இல்லாததால் வரமுடியவில்லை. அமைச்சர் ஒருவர் வருகிறார். முழு போதையில் வருகிறார். அவரைப் பிடிக்கவே இருவர் தேவைப்படுகிறார்கள். விக்ரம் சாராபாய் உடனேயே முடிவெடுக்கிறார், தமிழ்நாடு இதற்கு ஒத்துவராது என. ஆனால் ஆந்திர அரசோ 26,000 ஏக்கர் நிலத்தை இலவசமாகத் தர முன்வருகிறது. அதேசமயம் மகேந்திரகிரியில் (உண்மையில் அது மகேந்திரகிரி அல்ல, பொதிகை) அமைக்கப்படும் துணை நிலையத்துக்கு எம்ஜியார் ஆதரவு தருகிறார். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக, அதிரடியாக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அங்கே அது வெற்றிகரமாக அமைக்கப்படுகிறது.
  • நிலம் கையகப்படுத்துவதில் இன்றைப் போலவே அன்றும் வெறுப்புப் பிரசாரங்களும் பொய்களும் புரட்டுகளும் பரப்பப்பட்டுத் தேவையற்ற பயம் மக்கள் மனத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது.
  • ஊடகங்கள் இன்றல்ல, அன்றே வெற்றுப் பரபரப்புக்காகவே பொய்களை, கட்டுக்கதைகளைப் பரப்பி இருக்கின்றன. பொறுப்பே இல்லாமல் மலையாள ஊடகங்கள் நடந்துகொண்டதையும், ராக்கெட் என்பது பற்றியோ அதன் வரைபடங்களை எப்படி விற்க முடியும் என்பது பற்றியோ, அப்படி விற்றாலும் அதனாலும் ஒரு பலனும் இல்லை என்பது பற்றியோ (இப்படி ஒரு முறை போலிஸ் விசாரணையில் நம்பி நாராயணன் சொல்லவும், அப்படியானால் விற்றது உண்மையா என்று எதிர்க்கேள்வி வருகிறது!) அடிப்படை அறிவே அற்ற ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் பற்றி விரிவாக எழுதுகிறார் நம்பி நாராயணன். அதேசமயம் ஆங்கில ஊடகங்கள் தொழில்நுட்ப ரீதியாகக் கொஞ்சமாவது அடிப்படை அறிவுடன் செயல்பட்டன என்கிறார். இஸ்ரோவின் வரைபடங்கள் மீன் வைக்கும் பெட்டியில் வைத்துக் கடத்தப்பட்டன, பாகிஸ்தான் வான் மூலம் சிறையைத் தாக்கி நம்பி நாராயணனைக் காப்பாற்றப் போகிறது என்றெல்லாம் எழுதினவாம் மலையாள ஊடகங்கள்.
  • ரஷ்யாவில் ஒரு கண்காட்சியில் ஒரு இயந்திரத்துக்குப் பதிலாக இன்னொரு இயந்திரத்தை வைத்து பார்வையாளர்களை ஏமாற்றுகிறார்கள். இதை நம்பி நாராயணன் பார்த்த உடனேயே கண்டுபிடிக்கிறார். இதெல்லாம் சகஜம் என்கிறார்கள் அவர்கள். காரணம், ரகசியத்தை ரகசியமாகவே வைத்துக்கொள்ளவாம்.
  • நம்பி நாராயணன் மீது பல விதங்களில் குற்றம் சுமத்திய புலன் விசாரணை அமைப்பின் தலைவர் ரத்தன் சேகல் (எம்.கே. தர்-ருடன் வேலை செய்பவர்), சி.ஐ.ஏ உடன் பல ரகசிய சந்திப்புகளை நிகழ்த்தியதைக் காரணம் காட்டி, நீக்கப்படுகிறார். இதனால் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்குப் பின்னணியில் அமெரிக்கா இருப்பது உறுதியாகிறது என்கிறார் நம்பி நாராயணன்.

மேலே கூறியவை எல்லாம், இப்புத்தகம் எந்த அளவுக்கு எத்தனை விஷயங்களைப் பேசுகிறது என்பதைப் புரிய வைத்திருக்கும். இதில் ஹைலைட் இப்புத்தகத்தின் இறுதி அத்தியாயம்.

கேரள அரசு சொன்ன குற்றங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு, அதை எப்படியெல்லாம் சிபிஐ மறுத்தது என்பதைச் சொல்கிறது அந்த அத்தியாயம். இந்த அத்தியாத்தை (ஒட்டுமொத்த புத்தகத்தையும்கூட) ஒரு திரைப்படத்தின் லாஜிக் காட்சிகளைப் போன்ற விறுவிறுப்புடன் படிக்க முடிகிறது. அதில் முக்கியமானது: நம்பி நாராயணன் பிஎஸ் எல்வி2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டால் தான் ராஜினாமா செய்யப் போவதாக முன்பிருந்தே சொல்லி வந்திருக்கிறார். அதற்குப் பல காரணங்கள். குறிப்பாக லிக்விட் ப்ரபல்ஷன் பற்றியது. அதேபோல் பிஎஸ் எல்வி வெற்றிகரமாக ஏவப்பட்டதும் ராஜினாமா கடித்தத்தைக் கொடுத்தும் விடுகிறார். தன் மீதான ஒற்றர் வழக்கு வரும் என்று தெரிந்தே ராஜினாமா கடித்தத்தைக் கொடுத்ததாக கேரள அரசு சொல்கிறது. இதைப் படிக்கும் யாருக்கும் அப்படித் தோன்றத்தான் செய்யும். ஆனால் சிபிஐ அதில் மறைக்கப்பட்ட ஒன்றைச் சொல்கிறது. அந்தக் கடிதத்திலேயே கீழே ஒரு குறிப்பாக, தான் ஏற்கெனவே இந்தத் தேதியில் ராஜினாமா செய்யப் போவதாக முன்பே சொன்னதையும் குறிப்பிட்டிருக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு இஸ்ரோ அதிகாரியும் கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால் கேரள அரசு நீதிமன்றத்தில் இந்தக் குறிப்பைப் பற்றி எதையும் சொல்லாமல் மறைத்திருக்கிறது. அதேபோல் மிக முக்கியக் குற்றவாளியான மரியம் ரஷீதா என்னும் ஏஜெண்ட் இவர் புகைப்படத்தைப் பார்த்து, தான் இவரைத்தான் நேரில் பார்த்ததாகச் சொல்லி இவர்தான் நம்பி நாராயணன் என்று அடையாளம் காட்டும் வீடியோ. ஆனால் அதை சிபிஐ மறுக்கிறது. இவர் பெயர் நம்பி நாராயணன் என்று சொல்ல அந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு வரவில்லை என்பதால், வீடியோவை ஒளிப்பதிவு செய்யும்போது அவர் பெயரை எழுதிக் காண்பித்து அதைப் பார்த்துப் படிக்கச் சொல்கிறார்கள். அப்போது அந்தப் பெண்ணின் கண்கள் மேலே செல்வதை அந்த வீடியோவில் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இப்படிச் சின்ன சின்ன விஷயங்கள் தொடங்கிப் பல விஷயங்களை சிபிஐ மறுக்கிறது. இறுதியில் நம்பி நாராயணன் விடுதலை ஆகிறார்.

நான் முதன்முதலில் நேருக்கு நேர் என்ற சன் டிவியின் ரஃபி பெர்னாட்டின் பேட்டியில் இவரது நேர்காணலைப் பார்த்தேன். 90களின் பிற்பகுதியில் என நினைக்கிறேன். அன்றே இவர் பதில் சொன்ன விதமும் நம்பிக்கையும் தனக்கு இழைக்கப்பட்டுவிட்ட அநீதி தந்த மன உளைச்சலும் தெளிவாகப் புரிந்தன. ஆனால் அவர் சொன்ன பல விஷயங்கள் புரியவில்லை. இன்று இந்தப் புத்தகம் பலவற்றைத் தெளிவாக்குகிறது. உறுதியுடன் ஒருவேளை நம்பி நாராயணன் எதிர்கொள்ளாமல் போயிருந்தால், இந்நேரம் அவர் தேசத் துரோகியாகி விட்டிருப்பார். நேர்மையுடன் எதிர்கொண்டதால் பத்ம விபூஷனாகி இருக்கிறார். ஆனாலும் அப்துல் கலாமை ஒப்பிட்டுப் பார்த்தால் இவர் இழந்தவை என்ன என்று புரியலாம். அதை யாராலும் ஈடு செய்யமுடியாது.

இந்தப் புத்தகத்தைத் தமிழில் கொண்டு வருபவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள். யார் கொண்டு வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

பின்குறிப்பு: இந்தப் புத்தகம் பற்றிய, ஆமருவி தேவநாதனின் மதிப்புரை வலம் இதழில் வெளிவந்தது. அதைப் படிக்க தவறி விடாதீர்கள்.

நன்றி: ஒரே இந்தியா நியூஸ் வலைத்தளம்

Share

Comments Closed