நிலம் புதியது நீர் புதியது

1991ல் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் பைபை சொல்லிவிட்டுப் பிரிந்தோம். அன்று அந்தப் பிரிவின் வலி உள்ளுக்குள் இருந்தாலும், மதியக்காட்சி சில நண்பர்களுடன் ‘தர்மதுரை’ போகும் எண்ணமும் மறுநாளே திருச்சிக்கு அத்தை வீட்டுக்குப் போகும் எண்ணமும் சேர்ந்து அன்றைய வலியை மறைத்துவிட்டன. மதியம் 12.30க்கு தேர்வை முடித்துவிட்டு, அனைவரிடம் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து, வேகு வேகென்று சாப்பிட்டுவிட்டு, திரும்ப நடந்தே போய் பேருந்து பிடித்து சினிப்ரியா மின்ப்ரியா சுகப்ரியா காம்ப்ளெக்ஸுக்குப் போனால், ‘அஞ்சலி’ ஹவுஸ்ஃபுல், தர்மதுரைக்குப் பெரிய வரிசை. இத்தனைக்கும் படம் வந்து 90 நாள்களுக்கும் மேல் இருக்கும். ஆறேழு நண்பர்கள் மட்டுமே போயிருந்தோம். நான் கவுண்ட்டருக்குச் சென்று, ஸ்கூல் முடிச்சிட்டு வர்றோம்ண்ணே என்று சொல்லவும், கவுண்ட்டரில் இருந்தவர் சட்டென எங்களுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டார். கதிர்வேல், அழகேசன், ஜெ.குமரன், சுரேஷ்குமார், நான், இன்னும் ஒன்றிரண்டு பேர். எங்களுக்குத் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. சந்தோஷத்துடன் படம் பார்த்தோம்.

படம் முடிந்ததும் மீண்டும் பேருந்து பிடித்தோம். சிம்மக்கல் பக்கத்தில் சுரேஷ்குமார் இறங்கினான். பின்பு ஜெ.குமரன். பின்பு ஒவ்வொருவராகப் பிரிந்தோம். அன்றைக்குப் பிறகு சுரேஷ்குமார், ஜெ.குமரன் என்று யாரையும் பார்க்கக்கூட முடியவில்லை. எங்கே இருக்கிறார்கள், என்னை நினைப்பார்களா – எதுவும் தெரியாது. மதுரையில் ஒவ்வொருவர் ஒவ்வொரு திசைக்குப் போய்விட்டார்கள். அழகரடியில் குடி இருந்தோம். அங்கே போய்த் தேடியதில் சிலரைப் பிடிக்க முடிந்தது. ஆனால் பலரை இன்று வரை பார்க்கமுடியவில்லை. வீட்டு நண்பர்களாக இருந்தவர்களில் ராஜாவுடன் மட்டும் இன்றும் தொடர்பு இருக்கிறது. மற்றவர்கள் குறித்து எந்தத் தகவலும் தெரியாது. . மதிப்பெண் பட்டியல் வாங்கும்போதுகூட யாரையும் பார்க்கமுடியவில்லை. நான் சீக்கிரமே போய் வாங்கிக்கொண்டு திருநெல்வேலி வந்துவிட்டேன். இப்போது நினைத்தாலும் தொண்டையை அடைக்கும் துக்கம் அது. இன்றும்கூட திடீரென அழகரடி கனவில் வருவதுண்டு. ஃப்ரான்சிஸ், இன்பக்கந்தன், சரவணக்குமார், பாலாஜி என்று சிலரை ஃபேஸ்புக்கில் பிடிக்கமுடிந்தது. ஃப்ரான்சிஸுடன் எப்போதுமே கொஞ்சம் தொடர்பில் இருந்தேன்.

மகன் அபிராமை 9ம் வகுப்புக்கு வேறு ஒரு பள்ளிக்கு மாற்றினேன். கொஞ்சம் ரிஸ்க்தான். பெரிய ரிஸ்க்காகக்கூட இருக்கலாம். தொடர்ந்து ஏழு வருடங்கள் ஒரே பள்ளியில் படித்தவன் அபிராம். நான் எந்த ஒரு பள்ளியிலும் 3 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து படித்ததில்லை. அதற்கே எனக்குப் பிரிவு அத்தனை வருத்தமாக இருந்தது. அபிராமுக்கும் இப்போது அதே மனநிலை. ஆனால் நான் இருந்ததைவிட கொஞ்சம் முதிர்ச்சியுடன் இருக்கிறான் என்றே தோன்றுகிறது. 1ம் வகுப்பிலிருந்து 2 வகுப்புக்கு வேறு பள்ளிக்கு மாற்றும்போது,  “என்னடா, ஃபிரண்ட்ஸை விட்டுப் போறோம்னு இருக்கா” என்று கேட்டதற்கு, “ஏன் அங்க ஃப்ரண்ட்ஸ் இருக்கமாட்டாங்களா” என்று கேட்டான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இன்று இதைக் கேட்கும் நிலையிலெல்லாம் இல்லை. விவரம் புரியத் தொடங்கிவிட்டது. இதுதான் நிஜம் என்று ஒரு பக்கம் புரிந்தாலும், வருத்தமாகத்தான் இருக்கிறான். கடைசி வரையில் எப்படியாவது இந்தப் பள்ளி மாற்றம் தடைபட்டுவிடும் என்று எதிர்பார்த்தான்.

நான் மதுரையில் பெரிய நண்பர்கள் படையைவிட்டுவிட்டு திருநெல்வேலி சென்றபோது, இனி அப்படி நண்பர்கள் கிடைக்கமாட்டார்கள் என்றே நம்பினேன். ஆனால் திருநெல்வேலி இன்னொரு நண்பர்படையுடன் என்னை உள்வாங்கிக்கொண்டது. இன்றளவும் தொடரும் நட்புகள் அவை. அதே தீவிரத்துடன் அதே நட்புடன் அதே உண்மையுடன். துபாய் சென்றபோது மீண்டும் அதே எண்ணம், ‘இனி அப்படி நட்பு அமையாது’ என்பதே. ஆனால் வாழ்க்கை இதையும் உடைத்துப் போட்டது. சென்னைக்கு வந்த பிறகும் இப்படிச் சில நண்பர்கள் அமைந்தார்கள். இனி அமைவார்களா? தெரியாது. ஆனால் அமையமாட்டார்கள் என்று நிச்சயம் சொல்லிவிடமுடியாது என்பதை காலம் கற்றுக்கொடுத்திருக்கிறது.

இன்று அபிராம் புதிய பள்ளிக்குச் செல்கிறான். நான் பத்தாம் வகுப்பில் என் நண்பர்களைப் பிரிந்தபோது அவர்களுடன் ஒரு புகைப்படம்கூட எடுத்துக்கொள்ளவில்லை. அப்போது அதற்கெல்லாம் வசதி இல்லை. இன்று மறக்காமல் நான் அபிராமுக்குச் செய்தேன். பள்ளியின் கடைசி நாளன்று அவன் பள்ளிக்குப் போய் அவனை அவன் நண்பர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன். இதில் பல நண்பர்களை அபிராம் இனி பார்த்துப் பழகமுடியாமல் போகலாம். ஆனால் புதிய பள்ளி புதிய நண்பர்களுடன் நிச்சயம் காத்திருக்கும்.

Share

Comments Closed