நினைக்கிறேன், என்றே தோன்றுகிறது பதிவு:
இணைய திமுக காரர்கள் இந்த முறையும் புள்ளிவிவரக் கணக்கோடும் வரலாற்றோடும் தீவிர உணர்வோடும் பேசி, மீண்டும் கோட்டை விடுவார்கள் என்றே தோன்றுகிறது. அப்புறம் அடுத்த ரெண்டு வருஷம், அவரை உள்ள விட்டது தப்பு, இவரை விட்டது தப்பு, துரோகிகள் அது இதுன்னு பிலாக்கணம் வைத்துவிட்டு, சட்டமன்றத் தேர்தலில் திரும்ப முதலில் இருந்து துவங்குவார்கள் என நினைக்கிறேன்.
ஸ்டாலின் இவர்களை நம்பி இருக்கிறாரா அல்லது இவர்கள் ஸ்டாலினை நம்பித்தான் இருக்கிறார்களா என்பதெல்லாம் கட்சியின் வெளியில் இருக்கும் யாருக்கும் புரியாத புதிர்.
பாவம் ஸ்டாலின். எல்லாம் சரியாக வரும்போது, பாஜக + பாமக + அதிமுக + தேமுதிக என்று கூட்டணி அமைவது பெரிய சவால்தான். (இப்போதும் என் பார்வையில் திமுகதான் முன்னணியில் இருக்கிறது என்றாலும், திமுகவுக்கு வெற்றி அத்தனை எளிதாக இருக்காது என்ற கட்டத்துக்கு, தேர்தல் அறிவிப்புக்கு முன்னரேயே வந்துவிட்டது திமுகவுக்கு பெரிய பின்னடைவுதான்.) அதிலும் மதிமுக திமுகவோடு இருப்பது கூடுதல் சாபம்.
அதிமுக இல்லாத பாஜக அணி கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் 18.5% வாக்குகள் பெற்றிருக்கிறது. இந்தக் கூட்டணி தொடராமல் போனதும் மக்கள் நலக் கூட்டணி வந்ததும் தமிழ்நாட்டுக்கு நேர்ந்த பெரிய விபத்து. [அதிலும் திமுகவே பலி! :))] இன்று, தேமுதிகவின் வாக்கு சரிந்திருக்கிறது, மதிமுக இல்லை என்பதைக் கணக்கில் கொண்டு, இது பாராளுமன்றத் தேர்தல் என்பதையும், கருணாநிதியும் இல்லை ஜெயலலிதாவும் இல்லை என்பதையும் கணக்கில் கொண்டால், கடந்த தேர்தலின் பாஜக கூட்டணி பெற்ற வாக்கில் பெரிய பின்னடைவு இருக்காது என்றே நினைக்கிறேன். பாமக பாஜக தேமுதிக அதிமுகவுன் கூட்டணி வைத்ததால், இனி தினகரனின் அமமுகவை (கட்சிப் பெயர் சரிதானா?!) மக்கள் உண்மையான அதிமுகவாகக் கருதமாட்டார்கள் என்ற தோற்றமே வருகிறது. இது எல்லாமே பாஜக கூட்டணிக்கு நல்லதைத் தரலாம்.
எப்படியோ, திமுகவுக்கு மிரட்டலைத் தரவாவது ஒரு கூட்டணி உருவானது நல்லது. இல்லையென்றால் லட்டு மாதிரி திமுக வென்று தொலைத்திருக்கும். எடப்பாடி, ஓபிஎஸ் – நிதர்சனத்தைப் புரிந்துகொண்டவர்கள் என்ற வகையில் பாராட்டுக்குரியவர்கள்
இன்றைய நிலையில்:
பாஜக அதிமுக தேமுதிக பாமக, புதிய தமிழகம் கூட்டணி அமைந்தால்: 10 இடங்களில் வெல்லும்.
திமுக 20 இடங்களில் வெல்லும்.
மற்றவை இழுபறி
என்று தோன்றுகிறது. ஆனால் உச்சகட்ட பிரசாரத்தில் பாஜக கூட்டணி பெரிய அளவில் முந்தினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.