கத்தி மேல் நடக்க வேண்டிய ஒரு கதை. மிகக் கவனமாகவே கையாண்டிருக்கிறார் ராம். இயக்குநர் ராமின் திரைப்படங்களில் எப்படியோ தோற்றம் கொள்ளும் (அல்லது அப்படி எனக்குத் தோன்றும்) ஏதோ ஒன்றின் மீதான வெறுப்பு இத்திரைப்படத்தில் இல்லை. எனவேதான் படத்துக்கான பெயரைக் கூடப் பேரன்பு என்று வைத்துவிட்டார்.
ராம் திரைப்படங்களில் உள்ள பிரச்சினை யாரோ ஒருவரின் அதீத நடிப்பாக இருக்கும். தங்கமீன்கள் திரைப்படத்தில் அவரே அப்படியாக இருந்தார். அந்தத் தவறை எக்காரணம் கொண்டும் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே மம்முட்டியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். மூழ்கிக் கொல்லும் வதை வரும் போதிலும் ஒரு இம்மி அளவு கூடத் தன் நிலையில் இருந்து விலகிவிடாமல் ஒரு கதாபாத்திரம். அதை அச்சு அசலாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் மம்மூட்டி. தங்க மீன்கள் படத்தில் அதீத நடிப்பு செய்த அதே பெண் இந்தப் படத்தில் தன் நடிப்பின் மூலம் அசர வைத்திருக்கிறார். முகத்தையும் உடல்மொழியையும் முதலில் இருந்து கடைசி வரை ஒரே மாதிரியாக அவர் வைத்திருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. அப்படி இருக்கும் மனிதர்களின் வேதனை என்ன என்பதை நினைக்க வைத்து பதட்டத்தையும் கொண்டு வருகிறார்.
இதுபோன்ற மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களின் செக்ஸ் சார்ந்த சிந்தனைகள் என்னவாக இருக்கும் என்பதைப் பலமுறை நான் யோசித்திருக்கிறேன். இளவயதில் என் நண்பர்கள் பலர் செவிலியராக இருந்தவர்களே. அதில் சிலர் மனநலக் காப்பகத்தில் பணியாற்றியவர்கள். இது போன்ற மனிதர்களின் பல கதைகளைச் சொல்லி இருக்கிறச்ர்கள். அப்போதே எனக்கு சொல்லமுடியாத மனபாரம் அழுத்தி இருக்கிறது. இப்படி குடும்பத்தில் யாருக்கும் நேராத வரை எல்லாம் நமக்கு மிக எளிதான, வருத்தப் படும் சம்பவம் மட்டுமே. ஆனால் அதே துயரில் வாழ்வது வேறு. இதே பிரச்சினையை ஒரு படம் முழுக்க அலசியிருக்கிறார் ராம்.
அதிரவைக்கும் காட்சிகள் படத்தில் இரண்டு மூன்று உண்டு. அதில் உச்சகட்டத்தில் வரும் பதற்றம் தரும் காட்சியின் நீளம் கொஞ்சம் அதிகம். இசையற்ற அலை ஓசை இன்னும் காதில். மற்ற இரண்டு காட்சிகள் மிகச் சிறியவை. சில நொடிகள் கூட நீடிக்காதவை. இக்காட்சிகள் தரும் பதற்றமும் கொஞ்ச நஞ்சமல்ல. முதலாவது, தன் மகளுடன் ஒரே படுக்கையில் அன்புடன் உறங்கும் மம்முட்டி, மறுநாள் எழுந்து பார்க்கும் பொழுது, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில், சோர்ந்து போய் ஒருநொடி தலையில் கை வைத்துக் கொள்ளும் காட்சி. இன்னொரு காட்சியில் அந்தப் பெண் ஒரு பொம்மைக்கு வண்ணம் தீட்டுவது. இது போன்ற சில காட்சிகள் நம்மை வருத்தப்பட வைக்கத்தான் செய்கின்றன.
இந்தப் படத்தில் இரண்டு அஞ்சலிகள். முதல் அஞ்சலி நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர். அழகாக வருகிறார். அழகாக நடிக்கிறார். இரண்டாவது அஞ்சலி, அஞ்சலி அமீர், மலையாளி. மலையாளத்தில் பிக் பாஸ் வெளியானபோது அதில் இவரும் ஒரு போட்டியாளராக நடுவில் வந்து சேர்ந்து கொண்டார். திருநங்கை. இந்தப் படத்தில் மிக அற்புதமாக நடித்திருப்பது இவரே. மிக அழகாக இருக்கிறார்.
இப்படத்தின் பிரச்சினைகள் என்ன என்று பார்த்தால் படம் மிக மிக மெல்லவே நகருகிறது. இதுபோன்ற படங்களுக்கு இது ஒரு பிரச்சினை அல்ல என்றாலும் கூட, முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரைக்குமான எங்கேயும் நகராத திரைக்கதை ஒரு சலிப்பைக் கொண்டு வருகிறது. இப்படி வெளிப்படையாகச் சொல்வதன் மூலம் மிகச் சிக்கலான ஒரு விஷயத்தைக் கையாளும் படத்தை மலினப்படுத்தக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடனேயே சொல்கிறேன். அதேசமயம் அந்தச் சலிப்பு ஏற்படுவது உண்மைதான். தமிழ்நடிகை அஞ்சலியின் கதாபாத்திரம் மிகவும் குழப்பமாக இருக்கிறது. தொடக்கம் முதல் இறுதிவரை ஒரு நாவலின் அத்தியாயங்கள் போல நகர்ந்தாலும் ஒரு நாவல் கொண்டிருக்க வேண்டிய புதிர்த்தன்மையைப் படத்தில் அஞ்சலி பாத்திரத்தில் நுழைத்தது ஏதோ ஒரு வகையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் நல்லவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு வசனத்தை வைப்பதற்காகவே அந்தக் காட்சியில் புதிர்த்தன்மை விளக்கப்படாமல், வேண்டுமென்று நுழைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் ஏற்கனவே மணமான ஒரு பெண் தன்னையே இழக்கத் துணிவது எல்லாம் கொஞ்சம் அதிகம்தான். இதற்கான காரணத்தை விளக்கி இருந்தால் கூட இந்தக் குழப்பம் வந்திருக்காது. அது ஒரு க்ளிஷே என்ற அளவில் மட்டும் போயிருக்கும்.
குழந்தையைப் பார்த்துக்கொள்ள வரும் அஞ்சலியைச் சுற்றி நிகழும் காட்சிகள் தேவையற்ற ஒரு திரில்லிங் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அவர் ஏன் குழந்தையைக் கொலை செய்யும் அளவுக்குப் போக வேண்டும் என்பதெல்லாம் குழப்பத்தைத் தரும் தேவையற்ற காட்சிகள்.
திருநங்கையாக வரும் அஞ்சலி படத்துக்கு உள்ளே வரும் காட்சியிலேயே அவர்தான் பேரன்பைத் தரப் போகிறார் என்பது நமக்குத் தெரிந்துவிடுகிறது. இதுபோன்ற படங்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால் அவற்றை எப்படி வளர்ப்பது, முடிப்பது என்பதுதான். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்பாவும் மகளும் ராசியாகும் காட்சிகளின் நீளத்தைக் குறைத்து இதைச் சமாளித்திருக்கவேண்டும்.
இந்தப் படத்தில் என்னளவில் நேர்ந்த பிரச்சினை, எந்தக் காட்சிடுடனும் முதலில் உணர்வுரீதியாக இணைந்து கொள்ள முடியாமல் போனதுதான். எடுத்த எடுப்பிலிருந்து பிரச்சினைக்குள் படம் நுழைந்ததால் வந்த பிரச்சினையாக இருக்கலாம். இதே போன்ற படத்தை, இந்த அளவுக்குத் தீவிரமாக, சிக்கலான ஒன்றைக் கையாளவில்லை இல்லை என்றாலும், மணிரத்னத்தின் அஞ்சலி திரைப்படத்தை ஒப்பு நோக்கலாம். அஞ்சலி திரைப்படம் சிரிப்பும் கும்மாளமுமாகத் தொடங்கி, அதற்கே பழகிப்போன நம்மை சட்டென உள்ளிழுத்துக்கொண்டு, அதற்குப் பிறகு குடும்பத்தில் நுழையும் ஒரு குழந்தையின் மூலம் அந்த பிரச்சினையைக் கையாளத் துவங்குகிறது. ஒரு வணிக சினிமாவுக்கான தேவை இதில் இருந்தாலும் கூட, சொல்லவேண்டிய பிரச்சினையின் தீவிரத்தைக் கொண்டு சேர்க்க அது ஓரளவுக்கு உதவியது என்றே நம்புகிறேன். இந்தப்படம் அது போன்ற மாயையில் சிக்கிக் கொள்ளவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் ஒட்டுமொத்த பார்வையாளர்களை முழுமையாக உள்ளிழுத்துக் கொள்ளுமா என்பது குறித்த சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்க துணிந்ததற்காகவே இயக்குநர் ராம் பாராட்டப்பட வேண்டும். அதிலும் இதற்கு முன் அவரது படங்களில் இருந்த எந்தக் குழப்பங்களும் பிரச்சினைகளும் இந்தப் படத்தில் இல்லை. மிகத் தெளிவான கொதிக்கும் நீரோடை போல இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.
பின்குறிப்பு: இசை யுவன் ஷங்கர் ராஜா. பின்னணி இசை தொடக்கக் காட்சிகளில் மிக சுமாராக இருந்தது. பின்னர் பரவாயில்லை.
நன்றி: ஒரே இந்தியா வலைத்தளம்.