சினிமாக்காரர்கள், ஜெயபாரதி, கிழக்கு பதிப்பகம், 150 ரூ.
ஜெயபாரதியின் சினிமாக்காரர்கள் புத்தகம், திரையுலகம் எப்படி தொழில்நுட்ப ரீதியாகவும் தினசரி வேலைகள் ரீதியாகவும் இயங்கியது என்பதைச் சொல்கிறது. ஆம், இயங்கியது என்பதையே சொல்கிறதே அன்றி எப்படி இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லவில்லை. ஜெயபாரதியின் அனுபவங்கள் நேற்றைக்கானவை. இன்று ஒட்டுமொத்த சினிமா உலகமும் மாறிவிட்டிருக்கிறது. அதை ஜெயபாரதியே முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுவிடுகிறார்.
மேலும் இப்புத்தகத்தில் இவர் சொல்லும் பெரும்பாலான விஷயங்கள் இன்று அனைத்துப் பொது மக்களுக்கும் தெரிந்தவையே. சில டெக்னிகல் பெயர்கள், சில டெக்னிகல் சாதனங்கள் தவிர எல்லாமே அனைவருக்குமே தெரிந்தவை. எப்படி செட்-களில் இருந்து திரைப்படம் தெருவுக்கு வந்ததோ அதேபோல் திரை மறைவுக்குப் பின்னிருந்த திரைப்பட நுணுக்கங்கள் எல்லாமே இன்று வீதிக்கு வந்துவிட்டிருக்கின்றன. அப்படியானால் இந்தப் புத்தகத்தில் நமக்கு என்னதான் கிடைக்கும்?
அன்று எப்படி கஷ்டப்பட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். சில சுவாரஸ்யமான சங்கதிகளை நூலில் சொல்கிறார் ஜெயபாரதி.
* கடைசி கறுப்பு வெள்ளை திரைப்படம் உச்சிவெயில் என்று ‘இங்கே ஏன் எதற்காக’ என்ற புத்தகத்தில் படித்த நினைவு. இப்புத்தகத்தில் குடிசை என்கிறார் ஜெயபாரதி.
* செட்-களில் இருந்து கிராமத்துக்கு வந்த முதல் படம் பதினாறு வயதினிலே அல்ல, குடிசை என்கிறார் ஜெயபாரதி.
* ஹாலிவுட்டில், கோடைக்காலத்தில் பேய்ப் படங்களும் குளிர்காலத்தில் காதல் படங்களும் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுகின்றன என்கிறார்.
* காந்தி திரைப்படத்துக்கு மூன்று பேர் திரைக்கதை எழுத அதில் ஒன்றைதான் ஏற்றுக்கொண்டிருக்கிறார் அட்டன்பரோ.
* விகடன் நாவல் போட்டியில் வென்ற கதை நடைபாதை. ஆனால் அதை எழுதியவரின் முகவரி அதில் இல்லை. அந்தத் தொடரை, அதை எழுதிய இதயன் அலுவலகத்துக்கு வரவும் என்ற குறிப்புடன் வெளியிடுகிறார்கள். இதயன் வருகிறார். ஏன் முகவரி இல்லை என்றால், அவர் நடைபாதையில் வசிப்பவர்! அவரது அனுபவமே நாவல்.
* பென்ஹர், டென் கமாண்ட்மெண்ட்ஸ் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட உடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கிளியோபாட்ராவில் எலிசபத் டெய்லர் அணிந்த நடித்த உடை தங்கத்தால் ஆனது. (இதேபோல் ராசுக்குட்டியில் ஐஸ்வர்யா அணிந்து நடித்த உடை ஒரு லட்ச ரூபாய் என்று அந்தப் படம் வந்த சமயத்தில் பெரிய பேச்சாக இருந்தது.)
* நாகேஷ் அணிந்து நடித்த சட்டையை அணிந்துகொண்டு வரும் ஜெயபாரதியின் பள்ளித் தோழன்.
* எந்தத் தாவரத்தில் எந்தப் பூ பூக்கும் என்றெல்லாம் பார்க்காமல் எதையோ ஒட்டி வைக்கும் திரையுலகம்.
* ஒளிப்பதிவு நிவாஸ் என்று திரையில் வரும்போது கைதட்டிய மக்கள். (பதினாறு வயதினிலே ஒளிப்பதிவாளர்.)
இப்படிச் சில சுவாரஸ்யங்கள் ஆங்காங்கே. மற்றபடி கடந்த காலத் திரையுலகம் எப்படி இயங்கியது என்பதன் அனுபவப் பதிவாக மட்டுமே இப்புத்தகத்தைக் கொள்ள முடியும். ‘ஊஞ்சல்’ நாடகம் போல.
தணிக்கைச் சான்றிதழ் (சென்சார்) வாங்கும் விதம் குறித்து அழகாக எழுதி இருக்கிறார். இதில் எனக்கிருக்கும் ஒரு சந்தேகம், யூ, ஏ என்ற சான்றிதழ் வாங்குவதில் ஏன் இந்தியாவில் இத்தனை ஆர்ப்பாட்டம்? வெளிநாட்டில் இந்தச் சான்றிதழ்கள்தான் முக்கிய ஆவணம் என்பதாலா? இந்தியாவில் இந்தச் சான்றிதழ்களுக்குத் தனித்தனி கட்டணம் என்று ஏதேனும் உள்ளதா? பொதுவாக இந்தியாவில் இந்தச் சான்றிதழ்களைப் பார்த்துவிட்டு அதற்கேற்றாற் போல் மக்களை திரையரங்கில் அனுமதிக்கும் வழக்கம் இல்லை. (மால்களைத் தவிர.) அப்படி இருக்கும்போது ஏன் இயக்குநர்கள் யூ சான்றிதழ் வாங்க இத்தனை மெனக்கெடுகிறார்கள்?
ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9789386737465.html